“அவனைப் பற்றியே ஆயிரம் கவிதைகள்
 எழுதி எழுதிநான் எழுத்தை நேசித்தேன்”
என்று நேருவைப்பற்றிச் சொன்னார்  கவிஞர். அவரை வாசித்து வாசித்தே தமிழின் பக்கம் வந்தேன். கவிஞரின் தனிக்கவிதைகள் வழியே அவரின் திரைப்பாடல்களுக்குள் பிரக்ஞையுடன் புகுந்தேன். அவரின் படைப்புலகுக்குள் புகுந்து பார்க்க இந்தக் கட்டுரைகள் ஒரு கைவிளக்காய் இருக்கலாம். ஆனால் உள்ளே போகிற நீங்கள் நான் காணாதவற்றையும் காண்பீர்கள். காட்டுவிப்பீர்கள்.

இந்தக் கட்டுரைகளில் கவிஞரின் உரைநடைக்குள்  நான்   செல்லவேயில்லை. அவரின் பயணங்களையும்  மன ஓட்டங்களையும் கவிதைகள் மற்றும் பாடல்கள்  வழியாகவே கண்டறியும் முயற்சி இது. அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது அவர் எழுதிக் கொடுத்த முறையை மாற்றி ஒலிப்பதிவு செய்திருந்தால் கூட அவரின் வரிகள் அவரைக் காட்டிக் கொடுத்துவிடும்.

பாடல் ஒலிப்பதிவின் போது ஆண்குரல்-பெண்குரல் நிரலமைப்புக்காக அவர் எழுதிய சரணங்களை முன்னும் பின்னும் மாற்றினார்களோ என்று ஐயப்படும் விதமாய் ஒரு பாடல்

“என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்-இது
யார்பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்”

இதில் பெண்குரலில் முதல் சரணம் ஒலிக்கும்:

சிலையான உன்தெய்வம் பேசாதய்யா
சருகான மலர்மீண்டும் மலராதய்யா
கனவான கதைமீண்டும் தொடராதய்யா
காற்றான அவள்வாழ்வு திரும்பாதய்யா

இரண்டாவது சரணம் இது:

என் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா
காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா
நியாயமாக இதுதான் முதல் சரணமாக இருந்திருக்க வேண்டும்.

மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா என்பதற்கான எதிர்வாதம்,
சிலையான உன்தெய்வம் பேசாதய்யா.
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா என்பதற்கான எதிர்வாதம்,
சருகான மலர்மீண்டும் மலராதய்யா
கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா என்பதற்கான எதிர்வாதம்,
கனவான கதைமீண்டும் தொடராதய்யா
காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா என்பதற்கான எதிர்வாதம்,
காற்றான அவள்வாழ்வு திரும்பாதய்யா
கவியுளம் உணர்வோர் கண்டுசொல்ல இப்படி எத்தனையோ அம்சங்கள்
உண்டு.

இந்தத் தொடர் “கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம்”என்ற தலைப்பில்
நூல்வடிவம் பெற்று,கோவையில் ஜூலை11காலைவெளியிடப்படவுள்ளது.

வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
வலைப்பூவுக்குத் தொடர்ந்து வருகைதாருங்கள்.
எழுதுகிறேன்.எழுதுங்கள்.எழுதுவோம்

Comments

  1. கோவை ஆர்.எஸ்,புரம் பாரதீய வித்யா பவன் கலையரங்கில் ஜூலை 11
    காலை 10 மணியளவில் வெளியீட்டு விழா நிகழவுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *