அழுத்தமாக ஒட்டிக் கொள்ளும் தரமான கோந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தன் பொதுப்பங்குகளை அறிவிக்க முற்பட்ட போது தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை மட்டுமின்றி பங்குகள் அறிவிப்பதையும் குறிக்கும் வி தமாக  விளம்பரம் வெளியிட விரும்பியது. நவீன ஓவியர் ஒருவரை அர்த்தநாரீசுவரர் ஓவியத்தை வரையச் சொல்லி அதன்கீழ் ஒரு வாசகம் எழுதினோம்….The Ultimate Bond என்று. ஒவ்வொன்றுக்கும் உச்சப் படிமம் ஒன்றுண்டு. ஒருங்கிணைப்பின் உச்சப் படிமம் அர்த்தநாரீசுவரர். Bond  என்கிற ஆங்கிலச் சொல்லின் இரண்டு அர்த்தங்கள் இங்கே கைகொடுத்தன. யானைகளின் உச்சம் ஐராவதம் என்பதாலும், பசுக்களின் உச்சம் காமதேனு என்பதாலும், “யானைகளில் நான் ஐராவதமாயிருக்கிறேன், பசுக்களில் நான் காமதேனுவாயிருக்கிறேன்” என்று கீதையில் கண்ணன் சொல்கிறார் என்பது ஓஷோவின் அபிப்பிராயம். தன்னுடைய ஆற்றலின் உச்சம் தொடும் ஒவ்வோர் உயிரிலும்  இறைத்தன்மை  வெளிப்படுகிறது என்பதுதான் இந்தக் கருதுகோளின் தாத்பர்யம்.

காதலியர் அனைவருமே தங்கள் காதலனில் கண்ணனைக் காண்கிறார்கள்
“காதல்கொண்டோர் சொல்லும் சொல்லென்னவோ -என்
 கண்ணா என்பாரன்றி வேறென்னவோ
சாதல் வந்தால்கூடக் கவலையில்லை-என்
சங்கீதம் அவனன்றி யாருமில்லை” என்று கவிஞர் ஒரிடத்தில் எழுதுகிறார்.

காதலின் உச்சப் படிமம் கண்ணன்.காதல் என்ற சொல் எங்கெல்லாம் செல்லுபடியாகுமோ அங்கெல்லாம் இந்தப் படிமம் கவிஞரின்  பாடல்களில் வந்து விழுகிறது. இறைவனிடம் பக்தன் செலுத்தும் அன்பு, பிள்ளையிடம் தாய் செலுத்தும் அன்பு, காதலர்களிடையிலான அன்பு, என்று எல்லாவற்றிலும் கண்ணா என்ற சொல் கவிஞருக்குக் கைகொடுக்கிறது.

திரைப்படம் ஒன்றில் ஒரு பெண் தன் தாயைக் கனவில் கண்ட அனுபவத்தைப் பாடுவதாக கவிஞர் எழுதியிருப்பார். கனவில் வந்த அன்னைமுகம் எப்படியிருக்கும் என்கிற வர்ணனையும் அதிலே இருக்கும்.
 
 “குங்குமம் இருந்தது நெற்றியிலே -ஒரு
குழப்பம் இருந்தது கண்களிலே   
தங்கம் போன்ற இதழ்களிலே-ஒரு 
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே”

மனம் குழம்பியிருக்கும் நேரங்களில் மறைந்த குடும்பப் பெரியவர்கள் கனவில் வருவது பலருக்கும் நிகழ்ந்திருக்கக் கூடிய அனுபவம்தான். ஆனால்,படத்தில் இதைப் பாடுபவள் ஒரு பெண். அன்னையைக் கனவில் கண்ட அனுபவத்தை அவள் பல்லவியில் தொடங்குகிற விதமே புதுமையாய் இருக்கிறது.

“ஒருநாள் இரவு பகல்போல் நிலவு
 கனவினிலே என் தாய்வந்தாள்!
கண்ணா சுகமா?கிருஷ்ணா சுகமா?
கண்மணி சுகமா சொல்லென்றாள்”

பெண்ணை கண்ணா என்றும் கிருஷ்ணா என்றும் அன்னை கொஞ்சுவதன் அடிப்படையில் ஓர் உளவியல் உண்டு குழந்தைகள் இருக்கிற வீட்டில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம் விமரிசையாக இருக்கும்.
   அதுவரை வீட்டுக்குள் கண்ணன் பாதங்களைக் கோலமாய் வரைந்து கொண்டிருந்தவர்கள்,  குழந்தை வீட்டிலிருந்தால் அதன் பிஞ்சுப் பாதங்களைக் கோலமாவில் தோய்த்து வீடு முழுக்கப் பதிப்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று பாதங்களைக்  கோலத்தில்  நனைத்து வீடு முழுக்கப் பதிக்கும்போது அழுது தீர்த்தது. தன் கால்களின் அச்சு  கீழே இருப்பதைப் பார்த்துவிட்டு, தனக்கு கால்கள் இனி கிடையாது என்று நினைத்துவிட்டது அது.

பெண் குழந்தைக்கும் கண்ணன் வேடமிட்டு புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் பலருண்டு. குழந்தையைக் கண்ணனின் அம்சமாகக் காண்பது நம் மரபு. பாஞ்சாலிக்கு கிருஷ்ணை என்றொரு பெயரும் உண்டு. எந்தத் தாயின் மனதிலும் தன் மகளை கண்ணனாகப் பார்த்த குழந்தை பருவ பிம்பம் மனதிலே பதிந்திருக்கக் கூடும். கதையின்படி கூட, இந்தப் பெண்ணுக்கே பாதுகாப்பற்ற மனவுணர்வின்போது தன் குழந்தை பருவத்தில் தாய் கொஞ்சிய கதகதப்பு கனவாக வெளிப்பட்டிருக்கக் கூடும்.
இதையெல்லாம் தாண்டி கவிஞர் கண்ணதாசனின் சொந்த அனுபவம் ஒன்றுண்டு. கண்ணனைப் போலவே கண்ணதாசனும் தத்துப் பிள்ளையாய்ப் போனவர்தான். பெற்றெடுத்த அன்னை, தத்தெடுத்த அன்னை இருவரும் மறைந்து நீண்ட காலங்களுக்குப் பிறகு, பெற்ற அன்னையைக் கனவில் கண்டாராம் கவிஞர். அந்தக் கனவு அவர் மனதில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒருநாள் இரவு பகல்போல் நிலவு

கனவினிலே என் தாய்வந்தாள் என்ற பல்லவிக்கு இதுதான் மூலம்.

இப்படியிருக்க, ஆண்குழந்தையைக் கண்ணனாகக் காண்கிற மரபில் எந்த அதிசயமும் இல்லை. கண்ணனின் வடிவாய் மகனை கனிவுமிக்க தாய் பார்ப்பதற்கும், கண்டிப்புமிக்க தந்தை பார்ப்பதற்கும் இருக்கும் நுட்பமான வேறுபாட்டை தங்கப்பதக்கம் படப்பாடலில் காணமுடியும். குழந்தை பருவத்தில் இருவரும் குழந்தையைக் கண்ணனாகத்தான் பார்க்கிறார்கள்.

“தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு -அள்ளித்
தாலாட்டும் அன்னைபெற்ற மதிப்பு”
என்று மகனின் மழலைப்பருவம் கண்டுமனம் குளிர்ந்து போகிறார்கள்.  தந்தை காவல்துறை அதிகாரி. வளர்ந்த நிலையில்மகன் குற்றங்கள் செய்பவனாய் உருவெடுத்து வருகிறான். வீட்டில் நடக்கிற விருந்தொன்றில் குடும்பமே கூடிப் பாடுகிறது. தாய்பாடும் வரிகளில் சந்தோஷம் தெறிக்கிறது.தந்தையின் குரலில் சந்தேகமும் கண்காணிப்பும் தொனிக்கிறது.
“எங்கள் வீடு கோகுலம்
 என்மகன்தான் கண்ணனாம்
 தந்தை வாசுதேவனாம்
தங்கமான மன்னனாம்”

“வெள்ளம்போல ஓடுவான்
வெண்மணல்மேல் ஆடுவான்
கானம்கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்”

என்கிறாள் தாய் .அவள் மனநிலையில் களங்கமற்ற கடவுளாகிய கண்ணனுக்கும் வேறுபாடே இல்லை.
“கோலம்கொண்ட பாலனே
கோயில் கொண்ட தெய்வமாம்
தாயின்பிள்ளைப் பாசமே
தட்டில்வைத்த தீபமாம்” என்று மகன்பால் நிபந்தனையில்லாத பாசமும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறாள் அன்னை. ஆனால் அப்பா அப்படியில்லை.மகனின்மேல் அவருக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டு.

“மாயம் செய்யும் மகன்வந்ததும்
 ஆயர்பாடி பயம் கொண்டது
 அந்தப்பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்” என்கிறார் தந்தை.

 அந்த வரிகளின் அழுத்தம், நடனம் முடியும் தறுவாயில் வந்த ஓலையைப் படித்துக் கொண்டே மாடிக்குப் போய், காவல் சீருடை மாட்டிக் கொண்டு, கீழே வந்து, மகன் பக்கம் கைகாட்டி “அரஸ்ட் ஜெகன்” என்று சௌத்ரியாய் வரும் சிவாஜியின் கர்ஜனையில் புரியும்.

கண்ணனைக் கடவுளாகக் காண்பவர்களில் கூட, இருவேறு இயல்புகள் கொண்டவர்களைக் காட்டுகிறார் கவிஞர். கறுப்பு நிறப்பெண்ணொருத்தியை புறக்கணிப்பின் சூடு வருத்துகிறது.கருமைநிறக் கண்ணனிடம் முறையிடுகிறாள்.

“உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை-என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை”என்று மறுகுகிறாள்.

அதேநேரம், வாழ்க்கை எத்தனை புயல்களை அனுப்பினாலும்,வாழ்க்கை அனுபவங்களும், வலிகளால் வாடாத வைராக்கியமான பக்தியும் என்னென்ன உறுதிகளை உள்ளத்தில் ஏற்படுத்தும் என்பதற்கும் ஒரு பாத்திரத்தையே சாட்சியாக்குகிறார் கவிஞர். திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிற ஒரு வரி, “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே”. அதையே பல்லவியாக்கி எழுதும் பாடலில் கவிஞர் சொல்கிறார்:

“கடலளவே ஆனாலும் மயங்க மாட்டேன் -அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா-இதை
உணர்ந்துகொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா”

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-அந்தப்
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையிலுன்னை என்ன கேட்பேன்-இன்னும்
நன்மைசெய்து துன்பம் வாங்கும் உள்ளம்கேட்பேன்”

புகார் சொல்லாத இந்தப் பக்குவம்தான்,பயன்கருதாத பக்தியின் பரிசு.
காதலனைக் கண்ணனாகக் காணும் ஏராளமான பாடல்களைக் கவிஞர் எழுதியிருக்கிறார். அவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்தபாடல் இது. காதலர்கள்  பிரிகிறார்கள். இவளுக்கு வேறொரு முரடனுடன் திருமணமாகிறது. குழந்தையும் பிறக்கிறது. அந்தக் குடியிருப்புப்  பகுதியிலேயே காதலன்  வசிக்க வருகிறான்.அவன் புல்லாங்குழல் கலைஞன். குழந்தைக்குத்  தாலாட்டு பாடிக்கொண்டே தன் கதையையும் கூறுகிறாள் .

“இப்படியோர் தாலாட்டு  பாடவா-அதில்
அப்படியே என்கதையைக் கூறவா?
கைப்பிடித்த நாயகனும் காவியத்து நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என்மடியில் நீவிழுந்தாய்” என்பது பல்லவி.

“அன்றொருநாள் மீராவும் கண்ணனை நினைந்தாள்-ஏனோ
அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்
அதுவரைதான் தன்கதையை என்னிடம் சொன்னாள்-நான்
அதிலிருக்கும் என்கதையை உன்னிடம் சொன்னேன்”

என்ற வரிகளில்,  இணைய முடியாத நிலையிலும் இருவரும் இதயத்தால் பிரியாத உயிர்ப்பான காதல் உணர்த்தப்படுகிறது. குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு கைவேலையாய் நகர்கிறாள். குழந்தை அழுகிறது. அருகிலுள்ள வீட்டிலிருந்து அவன் குழல் வாசிக்கிறான். குழலிசை கேட்டபடியே குழந்தை துங்கி விடுகிறது. தூங்கிவிட்ட குழந்தையைப் பார்த்துக்கொண்டே தூங்காத தன் காதலைப் பாடுகிறாள் நாயகி.

“கண்ணனவன் கைகளிலே குழலிருந்தது-அந்த
கானம்தானே மீராவைக் கவர்ந்துவந்தது
இன்றுவரை அந்தக்குழல் பாடுகின்றது-அதன்
இன்னிசையில் என்குழந்தை தூங்குகின்றது”

கடவுளோ, காதலனோ, குழந்தையோ… அவர்களை முன்னிறுத்தி, தங்களுக்குள் ஊற்றெடுக்கும் அன்பின் உச்சத்தைத் தொட ஒவ்வொருவரும் தவிக்கிறார்கள். எனெனில் அந்த அன்பின் உச்சத்தில் தெய்வசுகம் இருக்கிறது. அந்த சுகத்தின் குறியீடு கண்ணன். கண்ணனுக்கு தாசன்..கண்ணதாசன்!!

(தொடரும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *