கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுயவிமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை,தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை.சுய விமரிசனமாய் வளர்ந்து, சுய தரிசனமாய்க் கனிந்தன என்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள அவரது கவிதைகளின் ஏழுதொகுதிகளும் நமக்குக் காட்டுகிற உண்மை. (இதுவரை வந்துள்ள தொகுதிகள் என்று நான் சொல்லக்காரணம், கவிஞரின் மீதமுள்ள கவிதைகளைத் தொகுத்தால் இன்னும் இரண்டு தொகுதிகள் கொண்டுவரலாம் என்று சில ஆண்டுகளுக்குமுன் கவிஞரின் உதவியாளர் திரு. இராம.கண்ணப்பன் எழுதியிருந்தார்.அவரும் மறைந்துவிட்டார். மீதமுள்ள கவிதைகளைக் கொண்டுவருவதாக கவிஞரின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் என்னிடம் உறுதி கூறியுள்ளார்)

கண்ணதாசனை, பலவீனங்கள் நிறைந்த கவிஞர் என்று பேசுவதில் பலருக்கும் ஒரு மகிழ்ச்சி. அந்த பலவீனங்களை அவரே பட்டியலிட்டதால் வந்த வினை இது. அவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். தன்னுடைய பலவீனங்கள் என்னவென்று தெரிந்து கொண்டிருப்பதுதான் ஒரு மனிதனின் மிகப்பெரிய பலம். பலவீனங்கள் இருக்கட்டும். தன்னுடைய பலங்கள் என்று கவிஞர் மூன்று அம்சங்களைக் கருதினார்.1.இறையருள் 2 .தமிழூற்று 3.அனுபவங்கள்.இவற்றில் இறைவனைக்கூட, சிலசமயங்களில் தன்னைக் கைவிட்டுவிட்டதாய் கடிந்துகொள்கிறார்.ஆனால் தன் அனுபவங்களையும் தமிழையும் தலையாய பலங்களாகவே அவர் கருதுகிறார்

தன்னையே முழுமையான சுய ஆய்வுக்குட்படுத்தி கவிஞர் பாடிய தொகைகளில் தலையாயது “அவிவேக சிந்தாமணி”. அளவுகடந்த தன்னிரக்கத்தின் ஆர்ப்பரிப்பு அது. அதிலும்கூட தன் பலங்களைப் பற்றிய பிரகடனங்களை இடையிடையே செய்துவிடுகிறார் கவிஞர்.

“தான்பெற்ற செல்வனை ஏன்பெற்றோம் என்றுதான் தாயன்று மாண்டுபோனாள்
தந்தையும் இப்பிள்ளை உருப்படாதென்றுதான் தணலிலே வெந்துபோனான்
ஊன்பெற்ற யானுமே உயிர்கொள்ள வைத்தவன் உயரத்தில் ஒளிந்து கொண்டான்
உதிரத்தில் என்றென்றும் தமிழன்னை மட்டுமே உறவாக வந்துநின்றாள்
வான்பெற்ற பேறுபோல் யான்பெற்று வாழவே வையையில் பூத்தமலரே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே”

என்றார் கவிஞர். தன் சிறப்புகள் அனைத்திற்குமே தேடிப் படித்த தமிழும் தேடிக்கொண்ட அனுபவங்களுமே காரணம் என்பதில் அவருக்கிருந்த உறுதியே, வாழ்க்கை மீதான அவரின் நன்றியுணர்வு, சலிப்பு இரண்டுக்குமே காரணமானது.

“பூர்வத்தில் செய்ததோ இந்நாளில் செய்ததோ புண்ணியம் உண்டு கொஞ்சம்
பொருளாகத் தந்ததோ அருளாக வந்ததோ புகழாரம் உண்டு கொஞ்சம்
ஆர்வத்தில் சேர்த்ததோ அனுபவம் ஈந்ததோ அறிவினுக்கில்லை பஞ்சம்
அமைதியில்லாதவன் துயில்கொண்டு தேறவே ஆண்டவன் விரித்த மஞ்சம்-
வார்க்கின்ற கவியன்றி வேறொன்றும் இல்லையே வையையில் பூத்த மலரே
மலர்கொண்டகூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே” என்ற பாடல் இதற்கோர் உதாரணம்.

எல்லையில்லாத கருணையுடன் தனக்குத் தமிழ்வளம் தந்த தெய்வங்கள், வாழ்வில் பலநேரங்களில் தன்னைக்கைவிட்டு விட்டதாகவே கவிஞர் பாடினாலும், அவை குற்றச்சாட்டுக்களாக இல்லாமல் செல்லச் சிணுங்கல்களாகவே உள்ளன. தவறு செய்பவர்களுக்குத் தெய்வம் துணைபோவது போலவும். தர்மத்தின் பாதையில் நடப்பவனைக் கைவிட்டது போலவும், சிலநேரங்களில் தெரிகிறது. ஆனால் அதர்மத்தில் செல்பவன் ஆயிரம் வளங்கள் பெற்றிருந்தும் நிம்மதியின்றித் தவிக்கிறான்.தர்மத்தின் பாதையில் செல்பவன் வாழ்வியல் இழப்புகளைக் கண்டாலும் கடவுள் துணையிருப்பதை உணர்கிறான். எனவேதான் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

“திருடனும் அரகரா சிவசிவா என்றுதான் திருநீறு பூசுகின்றான்

சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லி சீட்டைப் புரட்டுகின்றான்
முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின் முதல்வனை வணங்குகின்றான்
முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில் முதல்வனைக் கூவுகின்றாள்
வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம்-என் வாழ்க்கையைக் காக்கவில்லையே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே” என்பதைத் தான் செல்லச் சிணுங்கல் என்கிறேன்.

இதில் இன்னொன்றும் தெரிகிறது. மனிதமனம் மறந்துபோக நினைக்குமளவு கடும் சோதனைகள் வாழ்வில் வருகின்றன. இவை கடவுளின் சோதனைகள் என்பது கண்ணதாசனின் முடிவு. ஆனால் எவ்வளவு கசப்பான அனுபவங்களைக் கொடுத்தாலுமவற்றை சுவையான கவிதைகளாக்கி இறைவனுக்கே நிவேதனமாக்கும் கவிஞனின் எக்காளம் இத்தகைய கவிதைகளில் தென்படுகின்றன. இறைவன் வைத்த சோதனைகளை இதய சுத்தியுடன் எதிர்கொண்ட நாயன்மார்கள் இதைத்தான் செய்தார்கள். அவற்றை அச்சுறுத்தும் சவால்களாகப் பாராமல் ஆண்டவனின் கட்டளைகளாகவே பார்த்தார்கள். வாழ்வில் பெற்ற வருத்தங்களையும் வலிகளையும் ஏதோ விருதுபெற்ற பெருமிதத்தில் இவர் பாடுவதும் இதனால்தான்.

“பொய்யப்பன் சபையிலே கைகட்டி நிற்பனேல் பொருளப்பன் துணைகிடைக்கும்
பொருளப்பன் துணையோடு சூதாடிப் பார்ப்பனேல் புகழப்பன் நிலைகிடைக்கும்
மெய்யப்பன் தன்னையே நம்பினேன் அவனெனை வீணப்பன் ஆக்கிவிட்டான்
வினையப்பன் என்பவன் விதியப்பன் தன்னோடு வீட்டுக்கே வந்துவிட்டான்
மையப்பும் கண்ணினால் அப்பனை அம்மைநீ வாங்கிக்கொள் வண்ணமயிலே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே” . இந்தப்பாடலில் தொனிக்கும் பெருமிதம், அனுபவங்களால் புடம்போடப்பட்ட ஆணிப்பொன் இதயத்தில் மட்டுமே உருவாகும்.

இந்தத் தெளிவின் காரணமாய், எதைப்படித்தாலும் அதன் சாரத்தை சட்டென்று பற்றிக் கொள்கிற தெளிவு, புத்தியில் புலர்கிறது. இராமாயணம்,
மகாபாரதம் போன்றவற்றை பிரம்மாண்டமான இலக்கியக் கட்டமைப்புகளாகவும் தத்துவக் கருவூலங்களாகவும் காண்பதொரு வகை. ஆனால் அவை எதைச் சொல்ல வருகின்றன என்று, ஒரே வீச்சில் உணர்வது மற்றொரு வகை.

“காடுசென்றே கொண்ட மனைவியைத் தோற்றவன் காகுத்தன் என்ற கதையும்
காடுசெல்லாமலே கவத்திலே தோற்றவன் கண்ணனால் வென்ற கதையும்
வீடுகொண்டே பிறன் மனைவியைச் சார்ந்தவன் மேனிப்புண் கொண்ட கதையும்
வெற்றியும் தோல்வியும் தேவர்க்குக் உண்டென்ற வேதத்தைச் சொல்லவில்லையோ?
மாடுவென்றால் என்ன?மனிதன் வென்றால் என்ன? வல்வினை வெற்றி மயிலே..
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல் தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே” என்று வெற்றி தோல்விகளைப்பற்றிய அபிப்பிராயங்களையும் அச்சங்களையும் அனாயசமாக உடைத்துப் போடுகிறார் கவிஞர்.

இன்னல்களின் மடியில் கண்ட இந்தத் தெளிவும்,வருத்தங்களின் பிடியில் விளைந்த சமநிலையும் கண்ணதாசனின் கவிதைகளை சில இடங்களில் சித்தர் மரபின் நீட்சி என்று நினைக்கத்தக்க இடத்தில் சென்று நிறுத்துகின்றன. கற்றுணர்ந்ததைக் காட்டிலும் கண்டுணர்ந்ததில் கனந்தவற்றையே நாம் தத்துவம் என்கிறோம். அப்படியானால் கண்ணதாசனின் கவிதைகள் அசலான தத்துவங்கள்.

பாசம், நட்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருகிற வாழ்வில் எவையெல்லாம் மிஞ்சுகின்றன என்பதைச்சொல்ல வருகின்ற கண்ணதாசன் போகிற போக்கில் பட்டியல் போடும் விஷயங்கள் நம்மை அதிரச் செய்கின்றன.

‘தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும் தழும்புதான் மிச்சமாகும்
சந்யாசி பையிலும் சாவுண்ட மெய்யிலும் சாம்பல்தன் மீதமாகும்
பாசத்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும் படும்பாடு கோடியாகும்
பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாதவன் எனும் பழம்பாடல் வாழுமுலகில்
மாசற்ற பொன்னொடும் வைரமும் மணிகளும் மார்பாட வாழும் சிலையே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே’ என்கிறார்.

பாசத்தையும் நட்பையும் உண்மையாகக் காட்டுபவன் படாத பாடு படும்போது, பொல்லாதவர்களே நல்ல பெயர் எடுக்கும் நில்லா உலகியல்பை நயமாகச் சொல்கிறார் கவிஞர் . மாசற்ற பொன்,வைரம், மணி ஆகியவை மீனாட்சியம்மையின் மார்பில் அணிகலன்களாய் மின்னுவதுபோல், மாசற்ற பாசமும் நட்பும் மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போனாலும் கடவுளின் அங்கீகாரத்தைப் பெறும் என்ற கவிஞரின் நம்பிக்கையும் இதிலே வெளிப்படுகிறது.

உலகில் எத்தனையோ விஷயங்களைப்பார்த்ததில் தனக்குக் கிடைத்தவை என்ன என்பதைக் கவிஞர் சொல்கிறார்.

“ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றிலும் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்த்தது என்ன?சிறந்த அனுபவம்”

அனுபவங்களின் அமுத சாரமே கண்ணதாசன் கவிதைகள்

(தொடரும்…)

Comments

  1. பாடல்களை மட்டுமே மையமாக வைத்து இவ்வளவு எழுத முடியுமா? மிக அருமையான வாசிப்பனுபவம். தொடருங்கள்…..

    சில பாடல் வரிகளை இங்கு கூர்ந்து படிக்கும் போது புது வெளிச்சம் விழுகிறது. நன்றி.

    வானம்பாடி என்ற படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் “ கங்கை கரை தோட்டம்” முதல் முறையாக ஆழ்ந்து கேட்டபோது அழுதது ஞாபத்திற்கு வருகிறது. இந்த பாடலைப் பற்றி எழுத முடியுமா?

  2. நன்றி.இப்போது கவிஞரின் தனிக்கவிதைகள் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.கங்கைக்கரைத் தோட்டம் குறித்து விரைவில் எழுதுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *