நாயனாரின் பெயரை வைத்தே அவருடைய இயல்பை நாம் புரிந்து கொள்ளும்விதமாக சேக்கிழார் நம்மைத் தயார் செய்கிறார்.

ஆங்கிலத்தில் Reformist என்றொரு சொல் உண்டு. அதற்கு நேரான தமிழ்ச்சொல் சீர்திருத்தவாதி என்பதாகும். அதே போல Revolutionist என்ற சொல்லும் உண்டு. அதற்கான தமிழ்ச் சொற்கள் புரட்சியாளன், கலகவாதி என்பன. ஆங்கிலத்தில் இன்னும் தீவிரமான சொல் ஒன்று உண்டு Refel என்று. –Refel என்றால் அவன் கலகம் செய்வதுகூட இல்லை. அவனுடைய இயல்பே சமூகம் தனக்கென்று வகுத்திருக்கின்ற நியதிகளுக்கு முரணாக இருப்பது. இந்த Refel என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நேர் தமிழ்ச் சொல் இயற்பகை என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

சிவனடியார்கள் யார் என்றாலும் அவர்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கின்ற இயல்புடையவர் என்று இயற்பகையாரை சேக்கிழார் அறிமுகப்படுத்துகிறார்.

“முன்கொடுக்கும் இயல்பில் நின்றவர்
உலக இயற்பகையார்”
என்று அவரை நமக்கு சேக்கிழார் அறிமுகப்படுத்துகிறார்.

எனவே சேக்கிழாரின் இந்த அறிமுகம் மறைமுகமாக நமக்கு ஒன்றை வலியுறுத்துகிறது. சராசரி மனிதர்களை அளப்பதற்கு சட்டம் உதவுமே, தவிர சமூகத்தில் இருந்து தங்களையே விலக்கிக் கொண்ட இயற்பகை போன்ற விதிவிலக்குகள், தங்களுக்கென்று வகுத்துக்கொள்ளப்பட்ட தார்மீக நெறியின்படி அதிலிருந்து துளியும் அகலாது திகழ்ந்தவர்கள் என்பதுதான் இதனுடைய பொருள்.

சிவனடியார் ஒருவர் வருகிறார். என்ன வேண்டும் என்று சிவனடியாரை இயற்பகை கேட்டபோது, எதைக் கேட்டாலும் நீங்கள் இல்லை என்று சொல்ல மாட்டீர்கள் என்று கேள்விப்பட்டு வந்தேன். அது உண்மைதான் என்றால் நான் வந்த காரணத்தைச் சொல்கிறேன் என்று சிவனடியார் கேட்கிறார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று இயற்பகையார் சொன்ன மாத்திரத்தில்,
“மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு”
என்று வந்த சிவனடியார் சொல்ல, என் வசம் இருப்பதைக் கேட்டீர்களே என்று இயற்பகையார் மகிழ்கிறார்.

மனைவியிடம் சொல்கிறார். அவர் மனைவியார் சிறிது சிந்தை கலங்கி பின் தெளிந்து கணவன் ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்த உறுதிப்பாட்டிற்கு கை கொடுப்பதாக வந்த சிவனடியாருடன் செல்ல இசைகிறார்.

சட்டவரையறை என்ற எல்லைக்குள் நில்லாத ஒரு விதி விலக்காக இயல்பாகவே இயற்பகையார் இருக்கிறார். இதைப் பற்றி கேள்விப்படுகிற அவர் மனைவியின் சுற்றத்தவரும் அவரின் சுற்றத்தவரும் இயற்பகை அப்படித்தான். ஆனால் யாரோ ஒருவன் இந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போவதா என்று கோபத்துடன் வந்தார்கள். அவர்களுக்கும் இயற்பகையினுடைய இயல்பு தெரிந்தே இருக்கின்றது. எனவே சட்டரீதியான அளவுகோல்களுக்கு இயற்பகையார் உட்படாதவர் என்பதை உணர்த்துவதற்காகவே அவரைப் பற்றி உறவினர்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களை எல்லாம் சேக்கிழார் நமக்கு மிக நுட்பமாகக் காட்டுகிறார்.

வந்த சிவனடியாரோடு இயற்பகையாரின் மனைவியார் செல்லும்போது எதிர்த்துக் கொண்டு நிறைய பேர் வருகிறார்கள். சிவனடியார் அஞ்சியது போல் இயற்பகையாரின் துணைவியாரின் முகத்தைப் பார்க்கிறார். இப்போது இந்த அம்மையார் ஒரு வார்த்தை சொல்கிறார்.

“இறைவ நீர் அஞ்சவேண்டாம் இயற்பகை வெல்லும்” என்று அந்த அம்மையாரே கொடுக்கிற உறுதிமொழி பலவிதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.

“நாமார்க்கும் குடியல்லோம்” என்று ஒரு கட்டத்தில் திருநாவுக்கரசர் ஒரு கலகம் செய்கிறார். தங்களுடைய அடையாளங்களைக் தாண்டி எழுகிறபோது ஓர் உயிர் உயர்வு நோக்கிப் போகும் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்துகொள்கிறோம்.

சட்ட வரையறைகளை வைத்துக்கொண்டு நியதிகளை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு இயற்பகையின் வரலாற்றை யார் ஆராய நினைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறுவார்கள். ஆனால் தனக்கென்று வகுத்துக்கொண்ட தார்மீக நெறியின் வண்ணம் இயற்பகை யாவராலும் செய்ய இயலாத ஒரு செயலைச் செய்தார் என்பதனால்தான் சிவனடியாராக வரும் சிவபெருமானே, “செயற்கரும் செய்கை செய்த தீரனே” என்று இயற்பகையை பாராட்டுகிறார்.

இயற்பகையின் கதை நடந்தது என்று நாம் நம்புவோமேயானால் அது இறைவன் நடத்திய சோதனை என்பதையும் நாம் சேர்த்து நம்பியாக வேண்டும்.

இயற்பகையின் கதையை நம்புகிறேன். ஆனால் இறைவன் வந்ததை நம்பமாட்டேன் என்றால் அவர்களிடம் நாம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தான் மனதில் வகுத்துக் கொண்ட உறுதிப்பாட்டின் வழி நிற்பதற்கு ஒருவர் என்ன என்ன சோதனைகள் வந்தாலும் எல்லாவற்றையும் கடந்து மனதில் உறுதியோடு இருப்பார் என்பதை இயற்பகையின் புராணம் நமக்கு உணர்த்துகிறது.

சட்டமும் தார்மீகமும் வெவ்வேறு என்கிற நிலையில் விதிக்கப்பட்ட சட்டங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியல் முறைகள் வென்று வந்திருக்கின்றன என்பதை சேக்கிழார் தெளிவுபட உணர்த்துகிறார்.

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *