சேவை மனப்பான்மை மனிதனுடன் ஒட்டிப் பிறந்த ஒரு குணம். அடுத்த உயிர் நலம் பெறும்படி, மகிழ்ச்சி பெறும்படி செய்ய வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்குமே உண்டு. பிறந்து வளர்ந்த சூழ்நிலை, வாழ்கிற சூழல் போன்றவற்றின் அடிப்படையில் அவற்றின் விகிதாச்சாரங்கள் வேறுபடலாமே தவிர உலகின் பெரும்பான்மையான மனிதர்களுக்கு தொண்டு என்கிற உந்துதல் உயிரிலேயே உள்ளது.

ஒரு நல்ல தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் இருக்கிறது திருத்தொண்டர் புராணம். இன்று பொதுத்தொண்டு என்ற பெயரால் பலரும் சுயநலப்போக்கில் ஈடுபட்டு வருவதை இன்றைய உலகம் கண்கூடாகக் காணுகிறது. பொதுத்தொண்டில் ஈடுபடுவதற்கு யாருக்கு தகுதியுள்ளது என்று சேக்கிழாரைக் கேட்டால் அடிப்படையில் இரண்டு இலக்கணங்களை வகுக்கிறார்.

ஒன்று, சுயத் தேவைகள் குறைவாக இருக்க வேண்டும். இரண்டாவது, இதயம் அன்பு மயமாக இருக்கவேண்டும். தங்கள் தேவைகளை குறைத்துக் கொண்டு மற்றவர்களுடைய தேவைகளுக்கு ஆவன செய்கிற அன்பின் உந்துதல் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தொண்டர்களாக வரத்தக்கவர்கள். பெரிய, விலை உயர்ந்த நகை ரகங்கள் கழுத்திலும் கைகளிலும் மணிக்கட்டுகளிலும் அணிந்து கொள்ள மாட்டார்கள், அதிகபட்சமாக உருத்திராட்ச மாலை ஒன்றை அணிந்திருப்பார்கள். ‘ஆரம் கண்டிகை’ என்கிறார் சேக்கிழார்.

பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டு பணி செய்வது என்பது சிரமம். சேவையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதால் ஆடை மிக விரைவில் பழையதாகி இருந்தாலும் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனச்சாய்வுகூட நல்ல தொண்டர்களுக்கு இராது என்கிறார் சேக்கிழார்.

“ஆரம் கண்டிகை ஆடையும் கந்தலே”
எந்த இலட்சியத்தியத்திற்காக தங்களை ஒப்புக் கொடுத்திருக்கிறார்களோ, அந்த இலட்சியத்தை நோக்கி பயணம் செய்பவர்களாக அதைத் தவிர வேறு எதிலும் மனம் செலுத்தாதவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்கிற முறையில்,

“ஆரம் கண்டிகை ஆடையும் கந்தலே
பாரம் ஈசன் பணியலது ஒன்றிலர்”
அப்படியானால் அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கும் ‘ஈர ஆன்பினர்’ என்கிறார் சேக்கிழார். அவர்களுடைய இதயம் வறண்டிருக்காது, வளமான அன்பிலே தளதளத்து இருக்கும், இவர்கள் தங்கள் தனி வாழ்க்கையில் வருகிற இடர்பாடுகளைக்கூட எதிர்கொண்டு வீடு, நான், எனது என்கிற வேட்கையை எல்லாம் அடக்கிய வீரர்களாக நிற்கிறார்கள் என்கிறார்.

இந்தப் பாடலை முழுமையாக ஒருமுறை பார்ப்போம்.
“ஆரம் கண்டிகை ஆடையும் கந்தலே
பாரம் ஈசன் பணியலது ஒன்றிலர்
ஈர அன்பினர் யாதும் குறைவலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ”

நல்ல தொண்டுக்கு இது ஒன்றுதான் இலக்கணமா என்று பார்த்தால் இல்லை. இதையும் கடந்து சில இலக்கணங்கள் உள்ளன. அவர்களுக்கு நல்லது தீயது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது. ஒருவர் துன்பம் என்று முறையிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் முன்னொரு காலத்தில் இந்தத் தொண்டரை ஏசியவராக இருப்பார். அவர் நமக்கு வேண்டாதவர் என்கிற மனச்சாய்வு வந்துவிடுமேயானால் அவருடைய துன்பத்தை துடைப்பதற்கு நமது உள்ளம் ஊக்கம் பெறாது.

எனவே அணுகுமுறையிலேயே வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று எந்த பேதமும் பாராதவர்கள் தொண்டர்கள். ‘ஆக்கமும் கெட்ட திருவினார்’ இது மட்டுமா நல்ல தொண்டர்களுக்கு பொருளாசை பெரிதாக இராது.

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *