அறிவு என்கிற சொல்லை திருவள்ளுவர் எங்கெல்லாம் கையாள்கிறார் என்று பார்த்து அந்த குறட்பாக்களைக் கொண்டு வந்து கண்ணப்ப நாயனார் வரலாற்றோடு பொருத்திப் பார்த்தால் அத்தனையும் ஆங்கே ஆழகாகப் பொருந்துகின்றன. எடுத்துக்காட்டாக சிலவற்றை நாம் பார்க்கலாம்.

கண்ணப்பர் தோன்றியது கல்வியறிவு இல்லாத வேட்டுவர் குலம். பிறந்த சூழல் பேதமை நிறைந்ததாக இருந்தாலும் இறைவனை அவர் கண்டுணர்கிறார். இங்கே ஒரு திருக்குறள் பொருத்தமாக அமைகிறது.

“பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”
கண்ணப்பர் சென்றதோ பன்றிவேட்டை. கண்டு கொண்டதோ பரம்பொருளாகிய குடுமித் தேவரை. தீய நோக்கம் ஒன்றுடன் அவர் சென்றாலும்கூட சென்ற இடத்தில் அறிவை செலவழித்துவிடாமல் அதை இறைவன் பால் செலுத்தினார்.

“சென்றயிடத்திற் செலவிடாத் தீது ஒரிஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு”
மலையேறிப் போனால் மலைக்குப் பின்னால் பொன்முகலி ஆறு இருக்கிறது. அங்கே தாகம் தணியும் என்று உடன் இருந்த தோழன் நாணன் சொன்னான். ஆனால் மலையேறிப் போனபோது, பிறவித் தாகத்தைத் தீர்க்கக்கூடிய பேரமுதாகிய இறைவனைக் கண்டார்.

“எப்பொருள் யார்யார் வாய்க் – கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
அதுமட்டுமல்ல. சிவலிங்கத்தில் குருதி வடிவதை பார்த்த மாத்திரத்தில் அவரால் அதை தாங்க முடியவில்லை. அது தனக்கே ஏற்பட்டது போல் துன்பப்படுகிறார். இறைவனுக்கு ஏற்படுகிற துன்பம் தனக்கே ஏற்பட்டதாகக் கருதுவதுதான் அறிவின் அடையாளம் என்கிறார் திருவள்ளுவர்.

“அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தன்நோய் போல் போற்றாக் கடை”
என்னும் திருக்குறளை இங்கு பொருத்திப் பார்க்கலாம். உடனே அறிவுக்கு என்ன தோன்றுகிறது. கண்ணைப் பெயர்த்து வைத்தால் அந்தக் கண்ணிலே இருந்து வரும் குருதி நிற்கும் என்று தோன்றுகிறது. இதையே அறிவு அற்றம் காக்கும் கருவி என்கிறார் சேக்கிழார்.

இதனாலேயே சிவபெருமான் சேக்கிழாரிடம் கண்ணப்பரைப் பற்றிச் சொல்லும்போது,
“இவனுடைய அறிவெல்லாம் எமையறியும் அறிவென்றும்
இவனுடைய அன்பெல்லாம் எம்பக்க அன்பென்றும்
இவனுடைய செயலெல்லாம் எமக்கினியவாம் என்றும்
இவனுடைய நிலை இவ்வாறு என்றறிநீ என்றறிவித்தார்”
என்கிறார் சேக்கிழார். சமயோசிதம், அன்பு, உதவும் குணம் ஆகியவையே அறிவின் அடையாளம் என்பது கண்ணப்பநாயனார் வழியே காட்டப்படுகிறது.

அறிவின் பெயரால் சுயநலம், அடுத்தவர் துன்பத்தில் பங்கு பெறாமை போன்ற குணங்கள் பெருகுகிற சூழலில் எதிர்காலத் தலைமுறைக்கு எது அறிவு என்று உணர்த்துகிறது கண்ணப்ப நாயனார் புராணம்.

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *