சமயங்கள், மனித உயிரை உய்விப்பதற்கான ஏற்பாடுகள். ஆனால் காலப்போக்கில் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு மதங்களையும் மகான்களையும் மதிப்பிடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. யோகப் பயிற்சியை ஒருவர் கையாள்கிறபோது அந்தக் கலையில் ஏற்படுகின்ற சில சித்திகள் காரணமாய் சில அபூர்வமான சக்திகள் பிறப்பதுண்டு. பக்தி நிலையிலேயும் அது சாத்தியம். அவை ஒரு மனிதனின் ஆன்மீக முயற்சியில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்.

அதேபோல் சத்திமிக்க அதிர்வுகள் நிரம்பிய ஆலயங்களில் சில பிரார்த்தனைகள் பலிக்கின்றன. ஆனால் பிரார்த்தனைகளுடைய நோக்கம் உயிர் உய்வடையவேண்டும் என்பது தானே தவிர அன்றாட தேவைகளுக்கான கோரிக்கை மனு கொடுத்தல் அல்ல.

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வருகிற நாயன்மார்களின் வரலாறுகள் அற்புதங்களால் நிரம்பியவை. கொண்ட குறிக்கோளுக்காக உயிர் நீக்கவும் துணிகிற உத்தமர்கள் இறையருளால் மீண்டும் எழுகிறார்கள். கல்லிலே கட்டி அடியவர்களை கடலிலே போட்டாலும், அந்தக் கல்லே தெப்பமாக மாறுகிறது. அருளாளர்கள் பதிகம் பாடினால் அரவு தீண்டிய மனிதன் உயிர்த்தெழுகிறான். எலும்பு பெண்ணாகிறது. ஆண் பனை பெண் பனை ஆகிறது. இப்படி எத்தனையோ அற்புதங்களை சேக்கிழார் புராணம் முழுவதிலும் நாம் பார்க்கிறோம்.

இந்தப் புராணங்களைப் படிக்கிற ஒருவன் தன் வாழ்விலும் இத்தகைய அதிசயங்கள் நடைபெறவேண்டும் என்கிற வேட்கையை வளர்த்துக் கொள்வான் என்கிற எச்சரிக்கை உணர்வு பெரிய புராணம் பாடிய சேக்கிழாருக்கு இருக்கிறது. எனவேதான் அவர் ஓர் உத்தியைக் கையாளுகிறார்.

பெரிய புராணத்தை தொடங்கும் முன்பாக தில்லை வாழ் ஆந்தணர் குறித்துப் பாடத் தொடங்கும் முன்னர், மனுநீதிச் சோழனுடைய வரலாற்றை அவர் பாடுகிறார். அங்கேயும் இறையருளால் இறந்த கன்று எழுகிறது. இறந்த இளவரசன் எழுகிறான் என்றெல்லாம் புராணத்தில் பார்க்கிறோம்.

இது குறித்து பக்தி உலகில் ஓர் அருமையான கருத்து நிலவுகிறது. மனுநீதிச் சோழனுடைய மாண்பை நிலைநிறுத்துவதற்காக சிவபெருமானே பசுவாகவும் எம தர்மன் கன்றுக்குட்டியாகவும் வந்தான் என்று ஒரு கற்பனை உண்டு.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *