யோக நெறி, பரந்துபட்ட அளவில் நால்வகைப் பகுப்புகளாக உள்ளன. கர்மயோகம், க்ரியா யோகம், ஞானயோகம், பக்தி யோகம், பக்தி யோகம் ஆகியன அவை.

இவை தனித்தனியே பகுக்கப்பட்டாலும் இவற்றின் கலவையே மிக உன்னதமான யோகியை உருவாக்குகிறது. யோக மரபில் ஒரு கதை சொல்வார்கள். குறுகலான அறை ஒன்றில் முதலில் ஒருவர் மழைக்கு ஒதுங்கினார். அவர், ஞானயோகி. சற்று நேரத்தில் இன்னொருவர் வந்தார், அவர் பக்தியோகி. அந்த அறை இருவரை மட்டுமே கொள்ளும்.

இந்நிலையில் மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர் கர்மயோகி. மூவரும் நெருக்கியடித்துக் கொண்டு நிற்க நான்காவதாய் க்ரியா யோகி ஒருவரும் வந்து சேர்ந்து கொண்டாராம். உடனே அந்த அறையில் பேரொளி சூழ, சிவன் தோன்றினாராம். “இந்த நால்வகை யோகங்களும் சேரும் இடத்தில் நான் இருக்கிறேன்” என்றாராம்.

இந்த நால்வகை யோகங்களையும் எது சேர்க்கிறது என்று பார்க்க வேண்டும். மற்ற மூன்று யோக முறைகளையும் ஒன்றாக்கும் வித்தை பக்தி யோகத்தில் இருக்கிறது. அதுவே சாந்தி ரூபமாகவும், பரமானந்த ரூபமாகவும் இருக்கிறது.

“சாந்தி ரூபாத் பரமானந்த ரூபாச்ச” என்பது நாரத பக்தி சூத்திரம். இதற்கு உரையெழுதப் போந்த சுவாமி ஹர்ஷானந்தர் “மற்ற சாதனை மார்க்கங்களில் இலக்கை அடைந்தபின் சாந்தியும் ஆனந்தமும் இருக்குமே ஒழிய முயற்சியில் ஆனந்தம் இருக்காது.

ஆனால் பக்தி சாதனை அவ்வாறல்ல, “இதயத்தில் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கையான அன்பை தெய்வத்திடமே திருப்புவது பக்தி. ஆதலால் அது எப்பொழுதும் ஆனந்தத்தையும் சாந்தியையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது” என்றார்.

இதனை இன்னும் விரிவாக விளக்குகிறார் திருமூலர்.

பற்பல யோக நெறிகளில் நிற்கக் கூடியவர்கள், அவர் காலத்தில் சாரணர் – சித்தர் – சமாதியர் & தத்துவச் சாத்தியர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், இறைவன் மீது பக்தி பெருகி அதனால் ஆனந்தத்தில் லயித்திருந்தவர்கள் என்கிறார்.

“சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாந்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள் தன்மையோரே”

என்பது திருமந்திரம்.

இவர்களைத் தனித்தனியே சீலத்தர் -நோன்பினர் – செறிவினர் – அறிவினர் என்றும், ஒருங்கே பூரண ஆனந்த அருளாளர் என்றும் குறிப்பது உரை மரபு.

இலக்குவனிடத்தில் பக்தி யோகமும் கர்ம யோகமும் வெளிப்படுகின்றன. அவன் பர்ண சாலை அமைத்த நேர்த்தியைப் பார்த்து, “இதனை நீ எப்போது கற்றனை” என்று இராமன் வியக்கிறான். தேவை ஏற்பட்ட போது தெப்பம் செய்யும் திறனும் பெற்றிருந்தான்.

“மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாஇல் எம்பிகை சாலை அமைத்தன
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே

என்று சிந்தித்து, இளையவர் பார்த்து இரு
குன்று போலக் குவவிய தோளினாய்
என்று கற்றனை நீ இதுபோல் என்றான்
துன்று தாமரைக் கண்பனி சோர்கிறான்.”

இராமனின் நீங்காத பொன் வண்ண நிழலாய் பக்தி யோகத்தில் கனிந்தான். பொன்மானைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கு வந்த ஐயமும், சீதை கடத்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு ஒரே மாதிரியான குண்டலங்கள் சிதறிக் கிடப்பதால் பல தலைகள் கொண்ட ஒருவனே இச்செயலைச் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவதும் இதனை உறுதி செய்கின்றன. ஆனால், நுண்மான் நுழைபுலன் வாய்க்கப் பெற்றிருந்தும் எளிதில் உணர்ச்சி வயப்படுபவனாகவும் எளிதில் புண்படுபவனாகவும் இருந்தான்.

நால்வகை யோகங்களும் கனிந்த நிலையில் இருந்தவனாய் இலக்குவனைக் கொள்ள இயலாது. ஆனால் கர்ம யோகமும் பக்தி யோகமும் கனிந்திருந்தது.

குகன் பக்தி யோகத்தின் சாரம். வீடணன், நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறி பற்றியே இராமனை முதலில் சார்கிறான். இராமனின் பெருங்குணங்களும் பேரருளும், வீடணனை பக்தனாய் பரிணமிக்கச் செய்கின்றன.

நீதிக்குப்பின் பாசமா, பாசத்துக்குப்பின் நீதியா என்னும் போராட்டத்தில் நீதிக்கு முதலிடம் கொடுத்தாலேயே வீடணனை இறுக்கமான குணத்தினன் என எண்ணிவிடலாகாது.

இதயத்தை இளகச் செய்யும் பக்தி வீடணனைக் குழைத்தது என்பதாலேயே “அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானோம்” என்கிறான் இராமன்.

அச்சத்தாலும் அவ நம்பிக்கையாலும் பீடிக்கப்பட்டே தன் வாழ்வின் முக்கிய தருணங்களைக் கடந்த சுக்ரீவன் இதில் எந்தப் பகுப்பிலும் வரமாட்டான். தன் சகோதரன் என்று குறிக்கும் போது கூட “குன்று சூழ்வான் மகன்” என்றே இராமன் குறிப்பிடுவது, பொருள் பொதிந்த சொற்றொடர் ஆகும்.

குகனையும் வீடணனையும் தன் சகோதரன் என அறிவித்தான் இராமன். சுக்ரீவனை சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி, தன் இறுதி நிமிடங்களில் வாலி இராமனிடம் பரிந்துரை செய்கிறான்.

“அனுமன் என்பவனை – ஆழி
ஐய – நின் செய்ய செங்கைத்
தனுஎன நினைதி மற்றென்
தம்பிநின் தம்பி ஆக
நினைதி”

என்கிறான்.

தம்பியர் பட்டியலில் சுக்ரீவனை இடம் பெறச் செய்தது, இராமனின் பெருந்தன்மையும் வாலியின் பரிந்துரையும் ஆகும்.

பக்தியின் உச்சத்தில் இருந்தவன் பரதன், தன்னகங்காரம் துளிக் கூடத் தலைகாட்டாத தன்மை அவனுடையது.

பொதுவாக, ஒருவரது சிறப்பினைக் குறிப்பதென்றால், சிகரம், இமயம் என்றெல்லாம்தான் உவமை சொல்வார்கள். ஆனால் பரதனை,

“தள்ளரிய பெருநீதித் தனியாறு புக மண்டும்
பள்ளமெனும் தகையானை பரதன் எனும் பெயரானை”

என்கிறார் கம்பர்.

ஒருவருக்கு “பள்ளம்” என்பது புகழ்ச்சொல் ஆனது வியப்புகுரியது. வைணவ மரபில் பரதாழ்வாரின் பக்தியைப் போலவே இன்னோர் ஆழ்வாரின் பக்தியும் பள்ளமடை என்று பாராட்டப்படுகிறது. அவர், ஆண்டாள் நாச்சியார்.

ஏனைய ஆழ்வார்கள் திருமாலை நாயகி பாவத்தில் பாடியிருப்பினும் ஆண்டாளின் நாயகி பாவம் இயல்பாகவே பொருந்துவதால் பள்ளத்தை நோக்கிப் பாய்கிற வெள்ளம் போன்றது என்று சொல்லப்படுவதுண்டு-.

எனவேதான் பரதன் மூன்று இராமர்களுக்கு சமமென்று வசிட்டனாலும், ஆயிரம் இராமர்களுக்கு சமமென்று குகனாலும், எண்ணில் கோடி இராமர்களுக்கு சமமென்று கோசலையாலும் பாராட்டப்படுகிறான்.

இம்மூன்று நிலைகளில் மட்டுமின்றி, குகனின் உள்ளத்தில், இயல்பாக எழுந்தவொரு பாராட்டு, பரதனின் சீர்மைக்கு பவித்திரமான சான்றிதழாகத் திகழ்கிறது.

பரதன் படையெடுத்து வந்ததாக எண்ணி போர்க்கோலம் பூண்டு வருகிற குகன் நெருங்கி வந்து பார்க்கும் போது தான் எண்ணியது தவறோ என்று சிந்திக்கிறான். “பரதனைப் பார்த்தால் இராமனைப் போல் தோன்றுகிறான். அருகே நிற்பவன் இலக்குவனைப் போல் தோன்றுகிறான். துன்பமே வடிவாக, இராமன் இருக்கும் திசை நோக்கித் தொழுதபடி நிற்கின்றனர்” என்று எண்ணும் குகனின் கள்ளமில்லாத உள்ளத்தில் “பளிச்” ஓரெண்ணம் எழுகிறது.

“நம்பியும் என் நாயகளை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியை ஒக்கின்றான் தவவேடம் தலை நின்றான்
துன்பமொரு முடிவில்லை திசைநோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு”

இதில், “தவவேடம் தலைநின்றான்” என்னும் சொற்றொடர் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

இதற்கு முன்னர் குகன் உள்ளத்தில் ஆழப் பதிந்தது இராமனின் தவவேடம் ஆகும். அந்தத் தவவேடம், தந்தையிடம் சிற்றன்னை கேட்ட வரத்தினால் இராமன் பூண்டதன்றி, தானாக முன்வந்து பூண்ட வேடமன்று.

ஆனால், இராமன் கானகம் ஏகினான் என்று கேள்வியுற்ற மாத்திரத்தில் தவக்கோலத்தைத் தானாக விரும்பி ஏற்றவன் பரதன்.

இலக்குவனுக்காவது, ஆணை பிறப்பிக்க சுமித்திரை இருந்தாள். ஆனால், யார் தடுத்தும் கேளாமல் தானாக முன்வந்து பரதன் தவக்கோலம் மேற்கொண்டதால், இராமனை விடவும் பரதனுக்கே அந்தக் கோலம் மிகவும் பொருந்தியது என்பது இதன் பொருளாகும்.

பரிபூரண பக்தியில், தன் வழிபாட்டுக்குரிய நாயகனையும் விஞ்ச முடியும் என்பதற்கு பரதன் சான்றாகத் திகழ்கிறான்.

இன்றைய உலக வழக்கில், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்பவர்களை “கர்ம யோகி” என அழைக்கிறார்கள். செயல்களில் ஒன்றிச் செயல்படுவதன் மூலம் விடுதலைக்கான வழியைத் தேடுபவர்கள் கர்ம யோகிகள். “செயல்களை ஈடுபட்டுச் செய்வது மட்டும் கர்ம யோகத்திற்கான இலக்கணம் ஆகாது. அந்தச் செயலின் இலட்சியம் முக்தி பெறுவதாக இருக்க வேண்டும்” என்பார் சுவாமி தயானந்த சரஸ்வதி.

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தியானத் தன்மை இடம்பெறும்போது அந்த நாடு இயல்பாகவே வளமுடன் திகழ்வதுடன், அத்தகைய மனிதர்கள் செய்யும் செயல்களில் ஓர் ஒழுங்கும் நிதானமும் உருவாகிறது.

“தவம்செய்வார் தம்கருமம் செய்வார், மற்றெல்லாம்
அவர்செய்வார் ஆசையும் பட்டு”

என்ற குறளை ஆராய்வோம்.

இன்று பற்பல அலுவலகங்களில் செயல்திறன் பெருக அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் தியானப் பயிற்சியைக் கட்டாயமாக்குகிறார்கள். நல்ல பலனும் கிடைக்கிறது.

இதன் காரணம், தங்கள் நிறுவன மேம்பாட்டுக்காக அவர்களைப் பயிற்சி மேற்கொள்ளச் செய்தாலும் தவப் பண்புகள் அந்த மனிதர்களின் இயல்பிலேயே ஒரு நிதானத்தையும் பக்குவத்தையும் தருகிறது. அவர்கள் செய்யும் அன்றாடப் பணிகளே கர்மயோகம் ஆகிறது.

“பண்புடையார் பட்டுண்டுலகம்” என்பது தவப் பண்பைத்தான் குறிக்கிறது போதும்!

யோகத்தின் நால்வகை நன்னெறிகளும் ஒருவரிடத்திலேயே முழுமைப்பெற்று ஒளிர்ந்தமைக்கு இராமாயணத்தில் அனுமனே சான்று.

முதல் முதலில் அந்தணக் கோலத்தில் இராம இலக்குவரை எதிர்கொண்ட அனுமனைப் பார்த்து “நீ யார்” என்று வினவுகிறான் இராமன்.

விடை கூறும் முகத்தான், நான்கு வரிகளைப் பேசுகிறான் அனுமன். அதில் முதல் இரண்டரை வரிகள், இராமன் யாரென்று இராமனுக்கு சொல்கின்றன. மீதமுள்ள ஒன்றரை வரிகள், தன்னைப் பற்றியதாய் இருக்கின்றன.

“மஞ்செனத் திரண்ட கோல மேனிய மகளிர்க்கெல்லாம்
நஞ்செனத் தகையதாகி, நளிரிடும் பணிக்குத் தேம்பாக்
கஞ்சமொத்து அலர்ந்த செய்கண்ண & யான் கற்றின் வேந்தர்க்கு
அஞ்சனை வயிற்றின் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன்.”

இது சொல் வினயம் மட்டுமல்ல, கனிந்த ஞானத்தின் பக்குவம் என்பதைக் கண்டு கொள்கிற இராமன்.

“நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும்
கோட்படாய் பாதமே ஐய! குரக்குரு கொண்டது”

என்று இலக்குவனிடம் வியந்து பேசுகிறான்.

அனுமன் பேசத் தொடங்கும் முன்னர், “நீ யார்” என்று இராமன் கேட்டது வினவுதலின் பாற்பட்டது. அவன் பேசிய பிறகு “யார் சொல் இச்சொல்லின் செல்வன்” என்று கேட்டது வியப்பின்பாற்பட்டது. “விரிஞ்சனோ விடைல்லானோ” என்னும் வியப்பு.

இராமனுக்கு, முதன் முதலில் ஒரு ஞானயோகியாக அறிமுகமாகிறான் அனுமன். இராம நாமத்தையே பற்றுக்கோடாக கொண்டு கடல் கடக்கும்போது கனிந்து கரையும் போதும் பக்தி யோகியாகப் பரிமளிக்கிறான். ஏவிய பணிகளை இடை நிறுத்தமின்றி செல்வனே செய்து முடிக்கையில் கர்ம யோகியாகிறான்.

காற்றின் மைந்தன் என்பதற்குக் காற்றை வசப்படுத்தியவன் என்று பொருள். பிராணாயாமம் முதலிய க்ரியா யோகங்களில் கரை கண்டவனாக அனுமன் விளங்குகிறான்.

இந்த நால்வகை யோகங்களும், முழுமை பெற்றுத் துலங்கிய பாத்திரமாக அனுமன் திகழ்வது பற்பல கோணங்களிலும் பார்த்து அனுபவிக்கத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *