ஷோபிகா பட்டுத் திருவிழாவுக்கு ஆடித்தள்ளுபடி போன்ற சொற்களை நேரடியாகப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக விளம்பரம் வேண்டுமென்று மா போஸல் ராமகிருஷ்ணன் சொன்னார். அந்த விளம்பர வரிசைக்கான கரு, என் மனதில் உருவாகியிருந்தது. புதிதாகத் திருமணமாகியிருந்த என் நண்பர் ஒருவர், பிரசவத்துக்காக பிறந்தகம் சென்றிருந்த தன் மனைவிக்கு
அனுப்ப ஒரு கவிதை கேட்டிருந்தார்.

“வீட்டுக்குள் பகலினிலும் வெளிச்சமில்லை வாசலிலே பளிச்சென்று கோலமில்லை போட்டுவைத்த படுக்கையின்னும் சுருட்டவில்லை படுத்திருந்தேன் இரவெல்லாம்…உறக்கமில்லை”

என்று தொடங்கும் கவிதை ஒன்றினை எழுதிக் கொடுத்திருந்தேன்.அதற்குத் தலைப்பு, “அப்பா வீட்டில் சீதை! அசோக வனத்தில் இராமன்”.

தலை ஆடிக்காகவும் கணவன் மனைவியைப் பிரித்து வைப்பார்கள் என்ற விஷயம் நினைவுக்கு வந்தது.அதையே அடிப்படையாகக் கொண்டு விளம்பர வரிசையை உருவாக்க முடிவு செய்தேன். ஒவ்வொரு வாரமும் ஒரு விளம்பரம் வர வேண்டும் என்பது ஒப்பந்தம். சென்னைக்குக் கல்யாணமாகிப் போன பெண் ஆடிக்காக அம்மா வீட்டுக்குக் கோவை வருகிறாள். கணவன் கடிதம் போடுகிறான். இது முதல் வாரம். இந்தப் பெண் எழுதும் கடிதம் இரண்டாவது வாரம்.அவன் போடுகிற கடிதம் மூன்றாவது வாரம். தன்னை அழைத்துச் செல்ல வருமாறு கணவனுக்கு அந்தப்பெண் எழுதுகிற கடிதம்
நான்காவது வாரம்.

படிப்பவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக திரைப்படப் பாடல் வரிகளையே தலைப்பு வாசகம் ஆக்கினேன்.முதல் விளம்பரத்துக்கான தலைப்பு, “அன்புள்ள மான்விழியே !ஆசையிலோர் கடிதம்”! இந்த விளம்பரத்தில் கணவன், வீட்டில் கல்யாண ஆல்பத்தை புரட்டிக் கொண்டிருப்பதாகவும் அழகான ஷோபிகா பட்டில் அவள் ஜொலிப்பதாகவும் குறிப்பிடுவான். “இந்த ஆடியிலும் உனக்குப் பிடித்தமான பட்டுத்திருவிழா ஷோபிகாவில் தொடங்கியிருக்குமே” என்றெல்லாம் விசாரிப்பதாக அந்தக் கடிதம் இருக்கும்.

அடுத்த கடிதத்தை அவள் எழுதுவாள்.அதற்கான தலைப்பு,”காதல் சிறகைக் காற்றினில் விரித்து…”ஷோபிகா பட்டுத் திருவிழாவுக்குக் கிளம்பும் வேளையில் கடிதம் வந்ததாகவும், அவனுக்குப் பிடித்த அந்த ஷோபிகா புடவையை அப்போது அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருப்பாள். அந்தப் புடவை முந்தானையையே காதல் சிறகாகக் காற்றினில் விரித்து ,பறந்துவர விரும்புவதாகவும் அந்தக் கடிதம் இருக்கும்.

மூன்றாவது கடிதம் கணவனின் பிரிவுத் துயரத்தை வெளிப்படுத்தும். “தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்” என்பது அதன் தலைப்பு, ஷோபிகா பட்டுப்புடவைகளை தலைக்கு வைத்துக் கொண்டு
தூங்குவான் பாவம்.

நான்காவது கடிதம்,தன்னை அழைத்துச்செல்ல கணவனை விரைந்து வரச்சொல்லி அவள் எழுதுவது. அதன் தலைப்பு, “பிரிந்தவர் மீண்டும் சேரும்போது”… தான் இம்முறையும் ஷோபிகா பட்டுத் திருவிழாவில் நிறைய புடவைகள் எடுத்திருப்பதாக அவள் குறிப்பிட்டிருப்பாள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இந்த விளம்பரம்,விளம்பர நிறுவனங்கள் மத்தியிலும் பிற ஜவுளிக்கடைகள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஜவுளிக்கடைகளுக்கு விளம்பரங்கள் செய்து கொண்டிருந்த பிற நிறுவனங்கள் என்னை அணுகத் தொடங்கின. ஆரம்பத்திலேயே “காஸ்ட்லி ரைட்டர்” என்ற பெயரை எடுத்திருந்தேன். தங்கள் க்ளையண்ட்டுகளே என்னை வைத்து விளம்பரங்கள் எழுதி வாங்கப் பணித்திருந்ததால் அந்த நிறுவனங்கள் பேரம் பேசவில்லை. கேட்ட  சம்பளத்தைக் கொடுத்தன.

வெற்றிகரமான விளம்பரம் என்பது பார்க்கிறபோதோ படிக்கிற போதோ ஒரு புன்னகையை வரவழைக்க வேண்டும். இதே போல வேல் ஹோட்டல்ஸ் என்றோர் அசைவ உணவகத்துக்கு விளம்பரம் எழுதும்போது ஒரு சுவாரசியம். புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் அதிகம்.அந்தக் காலங்களில் அசைவ உணவகங்களுக்கு வாடிக்கையாளர் வருகை மிகவும் குறைவாக இருக்கும். அசைவப் பிரியர்கள் புரட்டாசி முடியும்வரை எப்படி பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருப்பார்களோ அதுபோல உணவக உரிமையாளர்களும் காத்திருப்பார்கள்.

புரட்டாசி முடிந்ததும் ஐப்பசி முதல் தேதியிலேயே தன் உணவக விளம்பரம் ஒன்று வெளிவர வேண்டுமென்று வேல் ஹோட்டல்ஸ் உரிமையாளர் விரும்பினார். அந்த விளம்பரத்துக்கும் அப்போது பிரபலமாக இருந்த திரைப்படப் பாடல்வரி ஒன்றையே கொஞ்சம் மாற்றிப் பயன்படுத்தினேன். “கொக்கு சைவக் கொக்கு..வேல் ஹோட்டல்ஸ் வந்து…விரதம் முடிச்சுடுச்சாம்!!”

என்னைப்பொறுத்தவரை விளம்பரங்களில் புதுமை என்பது வேறொன்றுமில்லை. விளம்பரம் செய்யும் தயரிப்பு பற்றிய அதீதமான புரிதல்தான்.வாடிக்கையாளர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்கிற தெளிவுதான்.இப்போது விஜய் கார்ஸ் என்ற நிறுவனத்தை பல கிளைகளுடன் வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் என் நண்பர் கோவை ரமேஷ், அப்போது நிதி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஐயாயிரம் ரூபாய் முதலீட்டுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார்.

அதற்கு நானொரு விளம்பரம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதற்கு வரைகலை அமைத்தவர் கால்குலேட்டர் ஒன்றை வரைந்திருந்தார் கால்குலேட்டர் ஆன் செய்யப்பட்டிருக்கிறது என்று காட்ட ஒரு காரியம் செய்திருந்தார். கால்குலேட்டர் திரையில் 0 என்ற எண் மின்னிக் கொண்டிருந்தது. அவருடைய யோசனை என்னவோ சரிதான்.ஆனால் நிதிநிறுவனம் ஒன்றிற்கான விஷுவலில் பூஜ்யத்தைக் காட்டுவது அபத்தம். அதற்கு பதில் 5000 என்ற எண்ணை வரைந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

சில சமயங்களில் வரைகலையாளர்கள் இப்படி சில அபத்தங்கள் செய்வார்கள். ஒரு தயாரிப்பின் விளம்பர வாசகம் ஒன்று நன்றாக அமைந்துவிட்டால், அந்த வாசகங்களை நிறுவனத்தின் எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது இயல்பான விஷயம். உதாரணமாக வோடாஃபோன் நிறுவனம், Happy to  help  என்ற வாசகத்தைப் பயன்படுத்துகிற்து. இது விளம்பரத்துக்கு மட்டுமின்றி விற்பனையாளர்கள் தங்கள் டீ ஷர்ட்டுகளில் அணியவோ பேட்ஜாக அணியவோ பொருத்தமான வாசகம்.

ஆனால் கோவையில் புகழ்பெற்று விளங்கிய ஜவுளி நிறுவனம் ஒன்றிற்கான ஆடி விளம்பரம்,T ake advantage என்று ஆங்கில வாசகத்தையும்,”பயன்படுத்திக் கொள்ளுங்கள்”என்ற தமிழ் வாசகத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதன் வரைகலையாளர், அதே வாசகத்தை பணியாளர்களுக்கான பேட்ஜாகவும் வடிவமைத்தார்.அவருக்கும் தமிழ் தெரியாது. பெண் பணியாளர்கள் அதிக அளவில் பணிபுரியும் கடையில் Take advantage என்றும்,”பயன்படுத்திக் கொள்ளுங்கள் ” என்றும் பேட்ஜ் கொடுத்து குத்திக் கொள்ளச் சொன்னால் குழப்பம் நேராதா?உரிய நேரத்தில் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *