கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் முதல்நாள் சென்னையிலிருந்து வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே மீண்டும் அழைப்பு வரும். கையில் இரண்டு மூன்று பாட்டில்கள் சிறுவாணித் தண்ணீருடன் மீண்டும் புறப்படுவேன். பிஃப்த் எஸ்டேட்டில் புதிதாகச் சேர்ந்திருந்த ஆங்கில விளம்பர எழுத்தாளர் ராதிகாவிடம் நீலம் என்னை இப்படித்தான் அறிமுகம் செய்தார்.

“இவருக்கு சென்னை தண்ணீர் பிடிக்காது. வேலை என்று அழைத்தால் ஏதேனும் ஒரு ரயிலில் தொற்றிக் கொண்டு தண்ணீரும் கையுமாய் வந்து சேர்வார். தண்ணீர் தீரும்முன் வேலையை முடித்துவிடுவார். தண்ணீர் தீர்ந்ததும் கிளம்பி விடுவார்”.

பிஃப்த் எஸ்டேட்டில் மட்டுமின்றி சென்னையில் மாபோஸல், கவுன்ட்டர் பாய்ன்ட் போன்ற நிறுவனங்களும் நிறைய வேலை கொடுத்துக் கொண்டிருந்தன. ஒரு காலகட்டம் வரையிலும் எல்லா சென்னை நிறுவனங்களுக்கும் ஃப்ரீலான்ஸ் முறையில்தான் வேலை  பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சுதந்திரம் என்னவென்றால் ஒரே கிளையண்ட்டுக்கு இரண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து விளம்பர முன்வைப்புகளை வழங்குவதாக இருந்தால், இரண்டு நிறுவனங்களுக்கும் நீங்கள் எழுதிக் கொடுக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்வதில்லை என்பதில் நான் உறுதியாகஇருந்தேன். ஒருமுறை சென்னை மாபோஸல் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. எய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்துக்கான படைப்பாக்க முன்வைப்பை அவர்கள் உருவாக்க உத்தேசித்திருந்தார்கள். பொதுவாக எய்ட்ஸ்தடுப்பு விளம்பரங்களுக்கு தாமாக முன்வந்து பல விளம்பர நிறுவனங்கள் ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன்களை வழங்கும். ஒருவேளை பிஃப்த்எஸ்டேட் நிறுவனம் அதில் பங்கெடுத்தால் மற்ற நிறுவனங்களுக்குஎழுதலாகாது என்று தார்மீக அடிப்படையில் முடிவு செய்தேன்.

ராம்கியை அழைத்து விபரம் சொன்னேன். அவர் உடனடியாக, “நாம்இந்தப் பந்தயத்தில் ப்ங்கு பெறப்போவதில்லை. நீங்கள் அந்த நிறுவனத்துக்கு தாராளமாக எழுதலாம்” என்றார். இந்தத் தொலைபேசி உரையாடல் முடிந்து சில நிமிடங்களிலேயே கணேஷ் பாலிகா அழைத்தார், அவருடைய குரல் நெகிழ்ந்திருந்தது. “தாங்க்யூ வெரிமச்முத்தையா” என்று மட்டுமே சொன்னார். அதற்கான காரணம் பிறகுதான் தெரிந்தது.

பிஃப்த் எஸ்டேட்டிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் வெளியேறி தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றினைத் தொடங்கும் முடிவுக்கு வந்திருந்தார்கள். அந்தச் செய்தி அப்போதுதான் வெளியாகி கணேஷ் பாலிகா வருத்தத்தில் இருந்த நேரத்தில் நான் ராம்கியிடம் பேசியிருக்கிறேன். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. உடனிருந்தவர்கள் திடீரென்று விலகி நெருக்கடி தருகிற நேரத்தில், ஏற்கெனவே விலகிய ஓர் இளைஞன் தொழில் தர்மத்துடன் நடந்து கொண்டதில் கணேஷ்பாலிகா நெகிழ்ந்திருந்தார். அதன்பிறகு அவர் செய்த காரியம் அபாரமானது.

விலக முற்பட்டவர்களை அழைத்தார்.”புதிய நிறுவனம் தொடங்கும் நீங்கள், வரைகலைப் பிரிவுக்கான கருவிகளுக்கு அதிக முதலீடு செய்ய வேண்டிவரும். நம்மிடம் சற்றே பழைய கருவிகள் உள்ளன. நன்கு இயங்கக் கூடியவை. அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் அவர். பொதுவாகவே விளம்பர உலகில் ஒரு றுவனத்திலிருந்தே பல நிறுவனங்கள்   உதயமாகும். ஒருவர் தனியாக வேறு நிறுவனம்தொடங்கினாலும் அல்லது வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும் அப்போது வேலை பார்க்கும் இடத்திலிருந்து சிலரை அழைத்துச் செல்வார். கணேஷ் பாலிகா இதிலும் விதிவிலக்கு. மா போஸலில் இருந்து விலகும்போது யாரையும் அங்கிருந்து அழைத்து வரவில்லை. எதேச்சையாகநான் தொலைபேசியில் அழைத்துக் கேட்டது, ஏற்கெனவே அவரிடம் எனக்கிருந்த நல்ல பெயரையும் நல்லுறவையும் உறுதி செய்தது.

சென்னை மாபோஸல் நிறுவனத்தின் பொதுமேலாளராக அப்போதுஅபர்ணா தத்தா என்கிற பெண்மணி பொறுப்பேற்றிருந்தார். குள்ளமானஉருவம். இந்திராகாந்தி போலவே மூக்கும், சிகையலங்காரமும். ரேஷன் சிரிப்பு. அறிமுகம் முடிந்த ஐந்தாவது நிமிடமே வேலையைத் தொடங்கிவிட்டார் அவர். ஒரு விளம்பர வரிசையை உருவாக்கும் போதுபிள்ளையார் சுழியாக அமைவது பேஸ்லைன் எனப்படும் முகப்பு வாசகம்.

பெரும்பாலும் அந்த வாசகத்தை மையமாக்கித்தான் மொத்த விளம்பரங்களும் சுழலும். Be aware Take care என்ற ஆங்கில முகப்புவாசகத்துக்கு, “விழிப்புடன் இருப்போம் ! வரும்முன் தடுப்போம்!” என்ற என் மொழியாக்கத்தை அனைவரும் ஒப்புக் கொண்டதும் “மளமள”வென்று வேலைகள் தொடர்ந்தன. அப்போது நான் விளையாட்டாக எழுதிக் கொடுத்த ஒரு டாகுமென்டரி தேசியஅளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

இப்போது யோசித்தாலும் வெள்ளிப் பதக்கம் வாங்கும் அளவு அந்தத்திரைக்கதையில் என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. விண்ணுலகத்திலிருந்து கோபித்துக் கொண்டு மண்ணுலகுக்கு வருகிறரதியைத் தேடி பூமிக்கு மன்மதன் வருவான். அவனைக் கொல்ல நினைக்கும்வில்லனாக எமதர்மராஜா. சென்னை பல்லவன் பஸ்ஸில் ரதியைப் பார்க்கும் மன்மதன் ஆட்டோவில் துரத்த ஆட்டோ விபத்துக்குள்ளாகும். மன்மதனுக்கு ரத்தம் கொடுக்கும் போது அந்த ரத்தத்தைப் பரிசோதனைசெய்யச் சொல்லி அசரீரி ஒலிக்கும்.

இப்படி விட்டலாச்சார்யா பாணியில் எழுதப்பட்ட அபத்தமான கதை அது. ஆனால் அதற்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு என்ன காரணம் என்று யோசித்தபோது என் யூகம் இதுதான். எல்லா நிறுவனங்களும் அச்சமூட்டும் விதமாகவே எச்சரிக்கை அணுகுமுறையில் எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களை செய்து வந்ததால் நகைச்சுவையான அணுகுமுறையை மேற்கொண்ட இந்தத் திரைப்படம்வெற்றி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனமும் சரி, அதற்கு விளம்பரங்கள் உருவாக்கிய நிறுவனங்களும் சரி, “ஒருவனுக்கு ஒருத்தி”என்ற நீதிபோதனையுடன் நின்றுவிடாமல் தகாத உறவுகளுக்கான தற்காப்புமுறைகள் குறித்தும் துணிச்சலாக வலியுறுத்தி வந்தன. உபதேசங்களால் மாற்றத்தை உருவாக்க முடியாது என்கிற உண்மையை உணர்ந்ததால்தான் ஒரு விழிப்புணர்வைப் பெரிய அளவில் உருவாக்கமுடிந்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் உருவாக்கிய எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களில் ஒரு விளம்பரத்துக்கு நான் தந்த தலைப்பு வாசகங்களில் சில: “கொஞ்சம் அப்படி இப்படி இருப்பவரா நீங்கள்?எப்படிஇருந்தாலும்ஆணுறை அணியுங்கள்”. “ஆணுறைகள்- சபலிஸ்ட்டுகளுக்கான ஸ்பெஷலிஸ்ட்”.

ஆணுறை வாங்க கூச்சப்படுகிறார்கள் என்கிற நிலையை எதிர்கொள்ள இத்தகைய அணுகுமுறைகள் தேவைப்பட்டன. மிகச்சில ஆண்டுகளுக்குமுன்னால், இதுகுறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்த ஒரு நிறுவனம் திட்டமிட்டது. ஆணுறைகள் வாங்க மக்கள் தயங்குவது ஏன் என்பது போன்ற கள ஆய்வுக் கண்டறிதல்கள் குறித்து பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களும் நானும் தொலைபேசியில் விவாதித்துக்கொண்டிருந்தோம். வீட்டில் எவ்வளவுதான் கவனமாக ஆணுறைகளை ஒளித்து வைத்தாலும் குழந்தைகள் கண்ணில் பட்டால் எடுத்து விளையாடுகிறார்கள் என்பதுஒரு பிரச்சினையாகக் கண்டறியப்பட்டிருந்தது. பேராசிரியர் ஞான்சம்பந்தன் சிரித்தபடியே கேட்டார்,”அதுக்காக போட்டுகிட்டேவா அலைய முடியும்”. நான் சொன்னேன், “போட்டுகிட்டே அலைய முடியாது. ஆனா அலையறவன்லாம் போட்டுக்கணும்”.

இந்தத்தொலைபேசி உரையாடலை டேப் செய்து யாராவது வெளியிட்டிருந்தால் இன்னொரு வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்குமோ என்னவோ!!

(தொடரும்)

Comments

  1. "ரேசன் சிரிப்பு" என்ற வார்த்தை பிரமாதம். இதை எல்லாமா எழுதுவது என்று பழமைவாதிகள் கேட்க கூடும். பிறகு யார் தான் எழுதுவது? என்பது நம் கேள்வி. இதை எழுதுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அதிலும் சுவை குன்றாத உங்கள் அங்கத நடை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்!!

  2. நான் இந்த விளம்பரங்களை எல்லாம் கவனித்திருக்கிறேன் , (ரசித்தும்) நம்மாளா எழுதியது , சரிதான் 🙂

  3. உளிகள் நிறைந்த உலகமிது – 11
    கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் முதல்நாள் சென்னையிலிருந்து வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே மீண்டும் அழைப்பு வரும். கையில் இரண்டு மூன்று பாட்டில்கள் சிறுவாணித் தண்ணீருடன் மீண்டும் புறப்படுவேன். பிஃப்த் எஸ்டேட்டில் புதிதாகச் சேர்ந்திருந்த ஆங்கில விளம்பர எழுத்தாளர் ராதிகாவிடம் நீலம் என்னை இப்படித்தான் அறிமுகம் செய்தார்.

    "இவருக்கு சென்னை தண்ணீர் பிடிக்காது. வேலை என்று அழைத்தால் ஏதேனும் ஒரு ரயிலில் தொற்றிக் கொண்டு தண்ணீரும் கையுமாய் வந்து சேர்வார். தண்ணீர் தீரும்முன் வேலையை முடித்துவிடுவார். தண்ணீர் தீர்ந்ததும் கிளம்பி விடுவார்".
    :-))
    "ரேசன் சிரிப்பு" என்ற வார்த்தையும் பிரமாதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *