எட்டயபுரமும் ஓஷோபுரமும்

‘கண்ணன்’ என்னும் பெயருக்குப் பொதுத்தன்மை ஏற்பட்டுப் பல காலங்கள் ஆகிவிட்டன. கடவுளின் பெயர் மட்டுமல்ல அது. காதலர்கள் ஒருவரையருவர் அழைத்துக் கொள்கிற பெயர், குழந்தையைக் கூப்பிடுகிற பெயர், நண்பனை விளையாட்டாக அழைக்கிற பெயர், சவால் விடும் நேரங்களில் எதிரிக்கு வைக்கிற செல்லப் பெயர் என்று பட்டியல் நீள்கிறது.

கடவுளுக்கு உரியதாய்க் கருதப்படும் வேறெந்தப் பெயரும், இப்படி வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டதில்லை. என்ன காரணம்? கண்ணன், குழந்தையாகவும் இருந்திருக்கிறான், காதலனாகவும் இருந்திருக்கிறான், நண்பனாகவும் இருந்திருக்கிறான், எதிரியாகவும் இருந்திருக்கிறான்.

அது மட்டுமல்ல காரணம். அவனைப் போல் ஒரு குழந்தை இருந்ததில்லை. அவனைப் போல் ஒரு காதலன் இருந்ததில்லை. அவனைப் போல் ஒரு நண்பன் இருந்ததில்லை. அவனைப் போல் ஓர் எதிரியும் இருந்ததில்லை.

ஏன் தெரியுமா? எல்லா நேரங்களிலும் கண்ணன், கண்ணனாக மட்டுமே இருந்திருக்கிறான். மற்றவர்கள்தான் அவனை மேற்கூறிய உறவு முறைகளில் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

‘கண்ணன்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில், கலவை உணர்வுகள் நமக்குள் ஏற்பட இதுதான் காரணம். ஒரு காதல் கதையில் ‘கண்ணா’ என்ற சொல் நமக்குத் தருகிற அர்த்தம் வேறு. ஒரு தாயின் மனநிலையில் அர்த்தம் வேறு,

இப்படி வெவ்வேறு மனநிலைகளில் நின்று, கண்ணனை ஆழ்வார்கள் அனுபவித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பார்வையின் அடிநாதமென்னவோ ஆன்மீகம்தான். பரநிலையின் மூலப் பரம்பொருள், வியூக நிலையில் திருமாலாகி, அவதார நிலையில் கண்ணனாகத் தோன்றியது பற்றிய தெளிவு அவர்களிடம் இருக்கிறது,

ஆனால், ஓஷோ, முற்றிலும் விலகி நின்று கண்ணனை விருப்பு வெறுப்பற்ற நிலையில் எடை போடுகிறார். தன் சீடர்கள் மத்தியில் கண்ணனைப் பற்றி ஆற்றிய உரைகளுக்கு அவர் கொடுத்த தலைப்பு, Krishna – The Man and his philosophy.

இந்தத் தலைப்பை மேலோட்டமாகப் பார்க்கிற போது ஓர் அதிர்ச்சி ஏற்படக் கூடும்.

“Man” என்று ஓஷோ கண்ணனைக் குறிப்பது ஏன் என்கிற கேள்வி வரும். அந்த உரைத் தொடரில் கண்ணனைப் பற்றி ஓஷோ உச்சரிக்கும் முதல் செய்தி முக்கியமானது.

“நிகரேயில்லாதவன் கண்ணன். ஒப்புவமை இல்லாதவன். கடந்த காலத்தவன் எனினும் கண்ணன் எதிர்காலத்துக்குரியவன். கண்ணனுக்கு நிகர் சொல்லும் அளவு மனிதன் தன்னை இன்னும் வளர்த்துக் கொள்ளவேயில்லை. “இது ஏன் என்றும் ஓஷோ விளக்குகிறார். “நம் வரலாற்றிலேயே ஆன்மீகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் தொட்ட மகத்தான மனிதன் கண்ணன். எனினும் ஒருபோதும் இறுக்கமாகவோ கண்ணீரிலோ கண்ணன் இருந்ததில்லை, சமயம் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் பொதுவாகவே இறுக்கமாகவும் சோகமாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் ஆட்டமும் பாட்டும் சிரிப்புமாய் வந்தவன் கண்ணன். அது மட்டுமல்ல. கடவுளின் முழுமையான அவதாரமாய் கருதப்படுபவன் கண்ணன” என்கிறார் ஓஷோ.

“வாழ்வின் எதிரெதிர் அம்சங்களையும் ஒன்றாக ஏற்பவன்தான் முழுமையானவனாக முடியும். அந்த வகையில் கண்ணனே முழுமையானவன்” என்பது ஓஷோவின் கருத்து.

“Krishna symbolizes acceptance of the opposites together. And he alone can be whole who accepts the contradictions together” (14) என்கிறார் ஓஷோ.

வைணவ மரபில், கண்ணனைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்லி, மற்ற உயிர்களெல்லாம் பெண்கள் என்று சொல்கிற சம்பிரதாயம் உண்டு. ஏறக்குறைய அதே தொனியில் கண்ணனை, “Man” என்று குறிப்பிடுகிறார் ஓஷோ.

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *