பொழுது போக்குக்கென்று எத்தனையோ வழிகளை மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். ஆனால் வாழ்வின் ஒவ்வொரு விநாடியுமே கொண்டாட்டமும் ஆனந்தமும் கொப்பளிக்கும் ஜீவஊற்றாகத் திகழுமென்றால் பொழுதுபோக்கு எதற்காக?

உண்மையில், எந்தப் பொழுதுமே போக்குவதற்கல்ல. ஆக்குவதற்கான். பணி நிமித்தம், சில இயந்திரத்தனமான கடமைகளில் தொடர்ந்து சில மணிநேரங்கள் இயங்கி விட்டு மாறுதலுக்காக சில நிமிடங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் எந்தப் பயனும் கிடையாது என்கிற பொருளில்தான் ஓஷோ இவ்வாறு சொல்கிறார்.

We had to find a substitute for celebration and entertainment is the substitute, because we do need a few moments of relaxation, a brief spell of diversion. (245)

வேலைதான் வாழ்க்கை என்று கருதுபவர்களுக்கு வாழ்க்கையை நகர்த்துவது அவ்வளவு கடினமாக இருக்கிறது. வேலையே அவர்கள் அடையாளமாகிவிட்டது. ஒருவர் பெயரைவிட அவர் செய்யும் தொழிவைச் சொல்லித்தான் உறவினர்களும் நண்பர்களுமே அவரைப் பற்றி விசாரிக்கிறார்கள். கண்ணனுக்கு, வாழ்க்கை என்பது ஒரு வேலையாக இருக்கவில்லை. லீலையாகத்தான் இருக்கிறது.

Krishna is all for celebration. He takes life as a great play, a might drama (248) என்கிறார் ஓஷோ.

பாரதி, மதுராபுரியில் கண்ணனைத் தேடிப் போவதாகக் கூறுகிற இடத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

“மாமதுரைப்பதி சென்று நான் – அங்கு
வாழ்கிற கண்ணனைப் போற்றியே -என்
நாமமும் ஊரும் கருத்துமே – சொல்லி
‘நன்மை தருக’ என்று வேண்டினேன்!”

என்கிறான். வடமதுரையை ஆள்கிறவன் கண்ணன். அடையாளம் சொல்கிறபோது, “மாமதுரைப்பதி சென்று நான் அங்கு ஆள்கிற கண்ணனைப் போற்றியே” என்று சொல்லாமல் “வாழ்கிற கண்ணனைப் போற்றியே” என்பதில் கண்ணன், வாழ்க்கையை அவ்வளவு தூரம் லயித்து வாழ்கிறான் என்று தெரிகிறது.

நாடு புரக்கிற மன்னவன் கவலையில்தான் இருப்பான் என்றும், ஆடலும் பாடலும் உள்ளவனுக்கு ஞானம் பற்றித் தெரிந்திருக்காது என்றும் முரண்பட்ட சிந்தனைகளில் பிளவுபட்டு நிற்கிறது மனம்.

நிலையாமை, மாயை போன்ற வார்த்தைகனைக் கேள்விப்பட்டு, அதுதான் ஞானமென்று நம்பிக் கொண்டிருப்பதால் வருகிற ஊசலாட்டம் இது.

அந்த நிலையில், கண்ணன் தனியாக அழைத்துக் கொணடுபோய் உபதேசம் தருகிறான். முதல் உபதேச வாசகமே “பளீர்” என்று விழுகிறது “நினை நன்று மருவுக”.

தனக்குள் தேடிப் பார்க்கத் தூண்டுவமுதான் ஒரு குருவின் பணி. “கண்ணனைப் பொறுத்தவரை ஞானம் என்ற ஒன்று மனிதன் இழந்ததல்ல. அது மனிதனுக்குள்ளே இருப்பது” என்கிறார் ஓஷோ.

In krishnas Vision, man does not have to recover a lost treasure that he once had – it is still with him, but he has forgotten that he has it.

ஓஷோவின் இந்த விளக்கமும், “நினை நன்று மருவுக” என்று கண்ணன் உபதேசிப்பதாய் பாரதி எழுதுவதும் பொருந்திப்போகிறது.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *