எட்டயபுரமும் ஓஷோபுரமும்

பாரதி, கண்ணனைப் பற்றிய தன் பாடல்களுக்கு வைத்த தலைப்பு, “கண்ணன் பாட்டு”.

“கண்ணன் பாட்டு” என்கிற தலைப்பு, எவ்வித அதிர்ச்சி மதிப்பையும் ஏற்படுத்தவில்லை நமக்கு. கண்ணன் என்கிற கடவுளைப் பற்றிய துதிப் பாடல்கள் என்று வகைப்படுத்துவதற்கான எல்லா சாத்தியங்களையும் இந்தத் தலைப்பு நமக்குத் தந்துவிடுகிறது, அதே நேரம், அப்படி வகைப்படுத்துவதற்கான அவசியமின்மையும் இந்தத் தலைப்பிலேயே இருக்கிறது,

கண்ணனை வெவ்வேறு நிலைகளில் பாரதி அனுபவித்திருந்தாலும், பக்தி மரபு சார்ந்த பார்வையாக “கண்ணன் பாட்டு” கருதப்பட்டுவிட முடியாது. கண்ணனை பக்தியாளர்கள் பாடிய காலத்திற்கும் பாரதி பாடிய காலத்திற்கும் உள்ள வேறுபாடு, பாடு பொருளின் அணுகுமுறையிலும் பல மாற்றங்களை விளைவித்தது.

காவியங்கள், கடவுளர்கள், அனைத்தையும் சமூகச் சூழலில், நிகழ்கால நடப்புக்கேற்ப புதிய பரிமாணத்தில் பார்த்தவன் பாரதி. அவனுடைய பாஞ்சாலி சபதம், அவன் காலத்தில் மண்ணடிமைக்கு எதிரான குரல். கூடவே பெண்ணடிமைக்கும் எதிரான குரல். சூழல் சார்ந்த பொருத்தத்தை, பழைய சித்தாந்தங்களுக்கும் பாய்ச்சியவன் பாரதி. “வேதம் புதுமை செய்” என்று பாடியவனல்லவா அவன்.

‘வேதாந்தமாக பொருளை விரித்துரைக்க,’ குயில் பாட்டில் மட்டுமில்லை, கண்ணன் பாட்டிலும் இடமுண்டு.

‘கண்ணன்’ என்கிற வாழ்க்கைத் தத்துவம் பற்றிய பாரதியின் புரிதல் என்று கண்ணன் பாட்டைச் சொல்லலாம். கண்ணனை எல்லாம் வல்ல பரம் பொருளாகப் போற்றிப் பரவுகிற பக்தர்கள் ஒருபுறம். கண்ணனைக் காமுகனாக சித்தரித்துத் தூற்றுகிற கடவுள் மறுப்பாளர்களின் கருத்துருவாக்கம் மறுபுறம். இந்த இரண்டின் சாயலுமே இல்லாமல், தனித்தவொரு தொனியில் ஒலிக்கிறது பாரதியின் கண்ணன் பாட்டு.

ஆராதனைப் புகையுமில்லாமல், அவதூற்றுப் புழுதியும் படியாமல், கண்ணன் – கண்ணனாகவே காட்சி தருகிற பாட்டுச் சித்திரத்திற்கு பாரதி “கண்ணன் பாட்டு” என்று பெயர் சூட்டியுள்ளான்.

இந்தத் தலைப்பில் இருக்கும் சௌகரியமே, இதனை மேற்கூரிய இரண்டு விதங்களிலும் புரிந்து கொள்ளலாம். ஆனால், அந்த வாய்ப்பை ஓஷோ வழங்கவில்லை. KRISHNA-THE MAN & HIS PHILOSOPHY என்கிற தலைப்பை நேரடியாக மொழி பெயர்க் கொண்ட பிறகு “கண்ணன் என்னும் புருஷோத்தமனும் அவன் சித்தாந்தமும்” என்ற தமிழில் சொல்லலாமெனத் தோன்றுகிறது.

கடவுள் என்று வகைப்படுத்துவதற்கும், கடவுட் தன்மையை முழுவதும் எட்டிய மனித தத்துவம் என்று வகைப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டா? இல்லையா? இந்தக் கேள்விக்கான விடை, ஒரு மொட்டின் இதழ்கள் அவிழ்வது போல் பாரதி, ஓஷோ இருவரின் பார்வையிலும் இயல்பாக வெளிப்படுகிறது,

கட்டுகளுக்குள் சிக்காத காற்றாய், கோடுகளே இல்லாத கடலாய், உற்சாகத்தின் உற்சவமாய் கண்ணனைக் கண்டவர்கள் பாரதியும் ஓஷோவும்.

கீழைத் தத்துவ வானத்தின் இரண்டு வெளிச்சங்கள் கண்ணன் என்னும் பேரொளியைக் காட்டுகின்றன நமக்கு.

பாகவதத்திலும், பாரதத்திலும் காணக்கிடைக்கிற கண்ணன் கதைகளை, மனித வாழ்க்கையின் தராசுகளுக்குள் நிறுத்திப் பார்க்கிறவர்கள், கண்ணனை பகுதி பகுதியாகத்தான் ஒப்புக் கொள்கிறார்கள். பாகவதக் கண்ணன் – பாரதக்கண்ணன் – குருஷேத்திரக் கண்ணன் என்று அவரவர் போக்கிலும் நோக்கிலும் தவணைமுறை தரிசனங்கள் மேற்கொள்ளும்போது, “எல்லையின்மை” என்னும் பரிமாணத்தில் கண்ணனைக் கண்டதோடு, காட்டவும் செய்கிறார்கள் பாரதியும் ஓஷோவும்.

காலத்தால் பிற்பட்டிருந்தாலும் ஓஷோ, பாரதியைப் படித்திருக்க வாய்ப்பில்லை, 1970 ஜுலை 20ல் மும்பையிலும், அதே ஆண்டில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை குலுமணாலியிலும் தன் சீடர்கள் மத்தியின் கண்ணன் குறித்து ஓஷோ நிகழ்த்திய உரைகள், “KRISHNA-THE MAN AND HIS PHILOSOPHY” ” என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டன,

வாழ்க்கையை முழுமையாக, எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொண்ட கண்ணனை, சுயம் -சுதந்திரம் ஆகியவற்றின் வார்ப்பாக ஓஷோ தன் உரைகளில் வெளிப்படுத்துகிறார்.

“கண்ணனின் முழுமைக்குக் காரணமே, கண்ணன் ஒரு தனிமனிதனல்ல. அவனே வாழ்க்கை. அவன் கண்ணாடி போல, இந்தப் பிரபஞ்சத்தையே அவன் பிரதிபலிக்கிறான,” என்கிறார் ஓஷோ. அதனால்தான் கீதையை சங்கரர் மாயையின் விளக்கமாய் பார்க்கிறார். ராமானுஜர் பக்திக்கான வழியாகப் பார்க்கிறார், போர்களத்தில் சொல்லப்பட்ட இந்த நூலை காந்தியடிகள் அகிம்சைக்கான போதனையாகப் பார்க்கிறார்” என்கிறார்.

“From the Geeta, Shankara finds that the world is an illusion. From the same book Ramanuja discovers that devotion is the path to God. Tilak finds that Geeta stands for the decipline of action. And curiously enough, from this sermon on the battle field, Gandhi unearths that nonviolence is the way. Nobody has any difficulty finding in the Geeta what he wants to find. Krishna does not come in their way”.

இந்தப் பத்தியின் தொடக்கத்தில் இரண்டு வரிகளை ஓஷோ தனக்கேயுரிய பாணியில் சொல்லியிருக்கிறார். “கீதைக்கான உரைகளெல்லாம், நமக்குக் கண்ணனை உணர்த்தவில்லை. உரையாளர்களின் உள்ளங்களையே உணர்த்துகின்றன” என்பது அவர் கருத்து.

இதில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், கண்ணனைக் கண்ணனாகவே காணவேண்டும் என்கிற ஓஷோவின் நோக்கம் நன்றாகப் புரிகிறது.

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *