காதலுக்கென்றொரு கடவுள்

கண்ணன், காதலின் தெய்வம். கோபியர் கொஞ்சும் கோகுலக் கண்ணனின் வாழ்க்கைப் பாதையெங்கும் வளையோசைகள் கேட்டுக் கொண்டேயிருக்கும். கண்ணனின் பாடல்களைப் பார்த்தால், பெரும்பாலும் கண்ணனுக்காகக் காதலிகள் ஏங்கியதுதான் அதிகம். அதிலும், கண்ணன் மீதும் தனக்கு அளப்பரிய காதலிருக்க, கண்ணன் தன்னைக் காதலிக்கிறானா இல்லையா என்று தவிக்கிற பெண்ணின் மனப்பதிவை பாரதி எழுதியிருக்கிறான்.

கண்ணன் தன்னை நிராகரித்தால் கவலையில்லை என்கிற வீராப்பு ஒரு கணமும், தன்னை அவன் நிராகரித்துவிடக் கூடாது என்கிற தவிப்பு மறுகணமுமாக மாறி மாறித் தடுமாறும் பெண்ணின் இதயத் துடிப்பொலி இந்தப் பாடலில் கேட்கிறது.

“கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்”
என்று தோழியைத் தூதுவிடுகிற தலைவி,

“கன்னிகையாய் இருந்து தங்கமே தங்கம் – நாங்கள்
காலம் கழிப்பமடி தங்கமே தங்கம்!
அன்னிய மன்னர்மக்கள் பூமியில்உண்டாம் – என்னும்
அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம்’ என்று வீரம் பேசுகிறாள்.

“மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் – தலை
மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ”
என்று சீறுகிறாள்.

“ஆற்றங் கரையதனில் முன்னம் ஒருநாள் – எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி, நகர்முரசு சாற்றுவன் என்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்” என்று எச்சரிக்கிறாள்.

“சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே – அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியதில்லை என்று சொல்லிவிடடி”
என்று வீரம் பேசுகிறாள்.

இத்தனை உறுதியும் கோபமும் நிலைத்திருக்கிறதா என்றால், சில நிமிடங்களுக்குக் கூட நிற்பதில்லை.

“பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் – மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்” என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறாள்.

“பண்ணொன்று வேய்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்
பற்றி மறக்குவதில்லை பஞ்சையுள்ளமே” என்று உருகுகிறாள்.

உள்ளபடியே கண்ணன் மீது வெறுப்பும் வஞ்சினமும் அவள் மனதில் வளர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லையென்றே தெரிகிறது.

“நேரம் முழுதிலும் அப்பாவி தன்னையே – உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாள்.

கண்ணன், இத்தகைய காதல் உள்ளங்களை அலட்சியம் செய்பவனா என்கிற கேள்வி எழுகிறது.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *