தென்றல் வந்து தீ வீசும்.

கண்ணன், கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் ஜீவநதி. கண்ணனைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளும், பாகவதமும், மகாபாரதமும் ஏற்படுத்தி ஆழ்வார்களின் அமுத மொழிகள்.

திருமாலே பரம்பொருள் என்ற தங்களின் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு ஆழ்வார்களின் பாசுரங்கள் தோன்றின. திருமால் வழிபாட்டில் தங்களுக்கு நிகழ்ந்த இறையனுபவத்தின் பிழிவுகள் அந்தப் பனுவல்கள்.

பரநிலையிலும், வியூக நிலையிலும், திருமாலை உணர்ந்த ஆழ்வார்கள் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சை நிலைகளையும், அவதார நிலைகளையும் சேர்த்தே சிந்தித்தனர்.

இவற்றில் பூர்ணாவதாரம் என்று பாராட்டப்படும் கிருஷ்ணாவதாரத்தை ஆழ்வார்கள் பெரிதும் அனுபவித்தனர்.

பெரிய திருமொழியில் மற்றைய எல்லா அவதாரங்களோடும் தொடர்புபடுத்தி திருமங்கை யாழ்வார், கண்ணனின் எளிமையைப் பெரிதும் அனுபவிக்கிறார். “எங்கானும் ஈதொப்பதோர் மாயமுண்டோ” என்று அதிசயிக்கிறார்.

கடவுளுக்குள்ளேயே காதலன், சேவகன், வீரன் என்று எல்லா அம்சங்களையும் கண்ட நிறைவு, கண்ணன் வழிபாடு வழியே அவர்களுக்குக் கிடைத்தது.

கண்ணனை குழந்தையாகவும், காதலனாகவும் பாவித்து ஆழ்வார்கள் பாடிய பாடல்களே கண்ணனின் உயிர்ப்புள்ள உற்சவத்தன்மையை நம் மனங்களில் உயிரோவியமாய் நிலைநிறுத்தின.

கடவுள்&பக்தன் இருவரிடையிலான மரபு சார்ந்த மன்றாடல்கள், உயர்வுகளை விதந்தோதும் உருக்கம் ஆகிய சராசரி அணுகுமுறைகளைக் கடந்து, இருவரிடையிலான மரபு சார்ந்த மன்றாடல்கள், அணுகுமுறைகளைக் கடந்து, கவித்துவம், நெருக்கம், விளையாட்டு அத்தனையும் கண்ணனைப் பாடும் போது பாட்டும், கூத்துமாய் பிரவாகமெடுக்கலாயின.

பெரியாழ்வார் கண்ணனுக்குத் தாயாகத் தன்னை வரித்துப் பாடுகிறார். பெறற்கரிய பிள்ளையைப் பெற்ற பெருமிதம், மற்ற பெண்களுக்கு தன் குழந்தைமேல் இருக்கிற மயக்கம் பற்றிய புரிதல், அத்தனையும் அந்த அணுகுமுறையில் கைகோர்க்கிறது.

கண்ணனைப் பாலருந்த அழைக்கும் அன்னையின் மனநிலையில் உருவாகிறது பாடல். “உன்னைப் போல் ஒரு பிள்ளையைப் பெற வேண்டும் என்ற ஆசையில்தான் எல்லாப் பெண்களும் வாழ்கிறார்கள். உன்னைப் பார்த்த மயக்கத்தில் அவர்கள் செய்தவறியாது திகைக்கிறார்கள். உன்னைத் தங்கள் வீட்டிற்குத் தூக்கிச்செல்ல அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அங்கே உன்னை முத்தம் தரச் சொல்லி கேட்கத்தான் எத்தனை போட்டாபோட்டி. நீ பாலருந்து” என்று பாடுகிற பாசுரத்தில் தாய்மையின் அற்புத தரிசனம் கிடைக்கிறது.

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப்
பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார்
கண்ணிணையால் கலக்கநோக்கி
வண்டுலாம் பூங் குழலினார் உன்
வாயமுதம் உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார்
கோவிந்தா நீ முலையுணாயே.

இதே புதுமையும், உரிமையும் நாயகீ பாவப் பாடல்களிலும் பொங்கி வரக் காண்கிறோம்.
கண்ணனின் வீரத்தை நினைத்து ஏங்கும் நேரத்தில், வீசுகின்ற தென்றலும் தீயைத்தான் வீசுகிறது என்கிறார் திருமங்கையாழ்வார்.

குன்ற மொன்றெடுத் தேந்தி மாமழை
அன்று காத்தஅம் மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீர மேகொலோ?
தென்றல் வந்துதீ வீசும்? என்செய்கேன்?
என்று கவித்துவமும், காதலும் கனல்கிறது.

பொதுவாக தன்னைத் தாயாக வரித்துக் கொண்டோ, காதலியாகக் கருதிக்கொண்டோ, கடவுளைப் பாடும் போது, பாடுபொருள் பரம்பொருள்தான் என்கிற சுவடு எங்கேயாவது வரும். ஆனால் கண்ணனைப் பாடுகிற வேளையில் ஆழ்வார்கள் தாயாகவும், காதலியாகவும் மாறிவிடுகிறார்கள்.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *