கண்ணன் என் தோழன்

கண்ணனைப் பற்றியும் கீதை பற்றியும் பேசும் இடங்களில், அர்ச்சுனனின் உளவியல் பாங்கை உணர்த்துவதில் ஓஷோ மிகுந்த அக்கறை காட்டுகிறார். அர்ச்சுனனுடைய குழப்பத்தின் ஆழம் புரிந்தால்தான், கண்ணனுடைய தெளிவின் துல்லியம் புரியும். கண்ணனே சாரதியாய் வந்த பிறகும், நெடுநாளைய சபதம் நிறைவேறுகிற வாய்ப்பாக குருஷேத்திரத்தைக் காணாமல் தனக்குள் தவிக்கிறான் அர்ச்சுனன்.

தோழன் என்ற நிலையில் கண்ணனை வைத்துப் பார்க்கிற போது, அர்ச்சுனனின் மனக்குழப்பங்களுக்கு கீதை எந்த விதத்தில் மருந்தானது என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

தன் கடமை என்ன என்பதில் தான் அர்ச்சுனனுக்குக் குழப்பம் ஏற்பட்டது. இது பற்றி ஓஷோவிடம் கேட்கிற கேள்வியாளர், கண்ணன் மீது சுவாரசியமானதொரு குற்றச்சாட்டை வைக்கிறார்.

கண்ணன் நினைத்திருந்தால் யுத்தத்தைத் தவிர்த்திருக்க முடியும். போர் புரிய விரும்பாத நிலையை அர்ச்சுனன் எட்டிவிட்டான். அதற்குக் கண்ணன் அனுமதித்திருக்கலாம்.

“அர்ச்சுனன், சத்திரிய நிலையிலிருந்து மீண்டு, ஓர் உயிரின் சுயநிலையை அடைய முற்படுகிறான். ஆனால் கண்ணன் தடுக்கிறான். போர் புரிய வற்புறுத்துகிறான்” என்பது அந்தக் குற்றச்சாட்டு.

ஓஷோ அதற்கு விளக்கமளிக்கிறார், “அர்ச்சுனன், யுத்தத்துக்கு எதிரான மனநிலையில் இல்லை. உறவினர்களைக் கொல்லக்கூடாது என்று தான் கருதுகிறான். யுத்தமே கூடாது என்ற மனநிலைக்கு அர்ச்சுனன் வந்திருந்தால் கண்ணன் அவனைக் களத்தில் இறக்கியிருக்கப் போவதில்லை. வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்கிற பேதம் பாராட்டாமல் கடமையாற்று என்பது தான் கீதையின் சாரம். அடிப்படையில் போர்வீரனுக்கான எல்லா சுபாவங்களும் கொண்ட அர்ச்சுனனுக்கு அவனது உண்மையான தன்மையை உணர்த்துவதுதான் நோக்கம். அர்ச்சுனனின் இதயம் ஆகாயம் என்று வைத்துக் கொண்டால், அதில் சில குழப்ப மேகங்கள் சூழ்ந்திருந்தன. அந்த மேகங்களை அகற்றியது தான் கண்ணன் செய்தது, அர்ச்சுனனை அர்ச்சுனனுக்கே உணர்த்தும் நோக்கில் உபதேசிக்கப்பட்டதுதான் கீதை” என்கிறார் ஓஷோ. (147)

The entire Geeta is just a process of uncovering. It reveals the pristine possibilities of Arjuna(155) என்பது அவரின் விளக்கம்.

ஆகாயத்தில் சூழ்ந்திருக்கும் மேகங்களை அகற்றுவது போல் கீதை பயன்பட்டது என்கிற உவமை ஓஷோவினுடையது. அதே பொருளை உணர்த்தும் விதமாக வேறோர் உவமை பாரதியால் கையாளப்படுகிறது, ‘கண்ணன்’ என் தோழன் பாடலில்!

“பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட
பாசியை எற்றிவிடும் – பெரு
வெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடுவான்”
என்கிறார் பாரதி.

தேவையில்லாததை அகற்றி, உண்மையை உணர்த்துவது கீதை என்பதை இருவரும் அவரவர் பாணியில் விளக்குகிறார்கள்.

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *