கண்ணன் குறித்து ஓஷோவிடம் கேட்கப்படுகிற இன்னொரு கேள்வி, “கண்ணன் அர்ச்சுனனுக்குத் தோழன் என்கிறீர்கள். ஆனால், ஒரு சூழலில் அர்ச்சுனனை எதிர்த்தும் கண்ணன் போரிடத் தயாரானது ஏன்-? என்பது.

(இக்கதை வியாசபாரதத்திலோ வில்லி பாரதத்திலோ இல்லை. தமிழைப் பொறுத்தவரை புகழேந்தி எழுதிய பாரதத்தில் இப்படியரு செய்தி உள்ளது. சந்தியா வந்தனம் செய்ய கண்ணன் நீரை அள்ளும் போது ஆகாயத்தில் பறந்த கந்தர்வன் ஒருவன் அதில் உமிழ்கிறான். அவனைக் கண்ணன் கொல்ல முயல்கையில் அர்ச்சுனனிடம் சரணடைகிறான். அப்போது நடந்த வாக்கு வாதத்தில் அர்ச்சுனனோடு போரிடக் கண்ணன் தயாரானதாகக் குறிப்பு)

இதற்கு ஓஷோ அருமையான விளக்கம் சொல்கிறார். “வாழ்க்கையின் வெவ்வேறு எதிர் நிலைகளை ஒன்றாகக் காணும் பக்குவம் ஏற்பட்டால், இது புரியும். ஒரு நண்பன் எப்போதும் நண்பனாக இருக்க வேண்டுமென்றும் ஒரு பகைவன் எப்போது பகைவனாக இருக்க வேண்டுமென்றும் ஒரு பகைவன் எப்போது பகைவனாக இருக்க வேண்டுமென்றும் நீங்கள் கருதுகிறீர்கள். கண்ணன் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் வாழ்க்கை விநாடிக்கு விநாடி மாறுகிற தன்மையுடையது. அதுமட்டுமல்ல. மகாபாரதமே அப்படியரு யுத்தம்தான். மாலை வரை எதிரெதிர் அணிகளில் போரிடுபவர்கள் மாலை வந்த பிறகு ஒருவர் முகாமுக்கு ஒருவர் போய் நலம் விசாரிக்கும் காட்சிகளெல்லாம் மகாபாரதத்தில் உண்டு.

“கண்ணனைப் பொறுத்தமட்டில், அவனுக்கு நண்பர்களும் இல்லை. பகைவர்களும் இல்லை. அதனால்தான் அர்ச்சுனன், துரியோதனன் இருவருமே உதவி கேட்டு வந்தபோது, ஒருவருக்குத் தன் படைகளைக் கொடுத்தான். ஒருவருக்குத் தன் படைகளைக் கொடுத்தான். ஒருவருக்குத் தன்னைக் கொடுத்தான்” என்கிறார் ஓஷோ. (373)

கண்ணனைத் தோழன் என்று பாடுகிற பாரதியும், இதே கருத்து கொண்டவன் தான். எப்போதும் நட்பு பாராட்டிக் கொண்டு மட்டும் கண்ணன் இருப்பதில்லையாம்.

“உள்ளத்திலே கருவம் கொண்ட போதினில்
ஓங்கி யடித்திடுவான் – நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டடொரு வார்த்தை சொன்னால் அங்கு
காறி உமிழ்ந்திடுவான்” என்று பாடுகிறான்.

“கண்ணன்&என் தந்தை” என்ற பாடலிலும்,

“பயமில்லை; பரிவென்றில்லை – எவர்
பக்கமும் நின்று எதிர்பக்கம் வாட்டுவதில்லை!
நயம் மிகத் தெரிந்தவன்காண் – தனி
நடுநின்று விதிச் செயல் கண்டு மகிழ்வான்”

என்று பாடுகிறான். “விதிச்செயல்” என்று பாரதி குறிப்பது. கர்மவினை&விதி என்கிற பொருளில் அல்ல, வாழ்க்கையின் போக்கு. நிபந்தனையில்லாமல் வாழ்க்கையை ஏற்கிற மனிதனால் தான் நடுநிலையில் நின்று அதன் போக்குகளைக் கண்டு மகிழ முடியும்.

ஏனெனில், கண்ணன் பாட்டிலேயே “விதி” என்கிற சொல்லுக்குப் புதுமையான தோர் விளக்கத்தை பாரதி வழங்குகிறான். மனிதர்களைக் கட்டுப்படுத்துகிற விதியை கண்ணன் ஒரு பார்வையாளனாக நின்று பார்ப்பதில்லை. விதியை ஏவுகிறவனாகவும் கண்ணன் திகழ்கிறான் என்கிறான் பாரதி. கண்ணனுக்கு ஒரு மந்திரி இருப்பதாகவும், அந்த மந்திரிக்குப் பெயர் விதி என்றும் பாடுகிறான்.

“ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு – விதியென்பவன்
(கண்ணன் என் தந்தை 6-வது பத்தி)
எனவே விதியின் போக்கு தெரிந்த முதிர்ந்த ஞானத்தின் முழுமையே கண்ணன் என்பது புலனாகிறது.

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *