எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…

அமெரிக்காவின் தொன்மையான மாநிலமாகிய டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ், பழமையின் சின்னங்களைக் காப்பாற்றி வைத்திருக்கும் கலையழகு நகரம். ஒற்றை நட்சத்திர அந்தஸ்து கொண்டது டெக்ஸாஸ் மாநிலம்.

புதிதாய் ஒரு தேசத்திற்குள் போகிறபோது அதன் புறத்தோற்றத்தின் பிரம்மிப்புகள் கொஞ்ச நேரத்தில் அடங்கும். புத்திக்குள் புலனாய்வு ஆர்வமொன்று தொடங்கும்.

அமெரிக்காவை அப்படி அறிந்து கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாய் டல்லாஸ் அமைந்தது. நாங்கள் தங்கியிருந்த ரெனாய்ஸன்ஸ் நட்சத்திர விடுதியின் வாசலிலேயே ரயில் நிலையமொன்று இருந்தது. உள்ளூர் ரயில்கள் அங்கே விரைந்து வந்து வினாடிக் கணக்கில் நின்று “விர்”ரென்று புறப்படும். தானியங்கி எந்திரங்கள் தான் டிக்கெட் கொடுக்கின்றன.

ஒரு நாள் இரவு, விடுதிக்குத் திரும்பும்போது, வாயிலை நெருங்கும் நேரத்தில் ரயில்வே கேட் போடப்பட்டது. அதுவும் தானியங்கி தான். “அடடா! ரயில்வே கேட் போட்டாச்சே” என்று சொல்லி முடிப்பதற்குள் ரயில் கடந்தது. அடுத்த விநாடியே கேட் திறந்தது.

கூப்பிடு தூரத்திற்கு ரயில் வந்த பிறகே கேட் போடுகிறார்கள். அதிகபட்சம் ஐந்து விநாடிகளுக்குள் திறந்து விடுகிறார்கள். இந்த ஒழுங்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது சென்னையின் மின் ரயில் திட்டம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

அமெரிக்காவின் அற்புதமான அம்சங்களில் ஒன்று, பசுமைக்குத் தருகிற முக்கியத்துவம். டல்லாஸில், எங்கள் விடுதியைத் தொட்டுக் கொண்டே கணிசமான ஏக்கர் அளவில் அடர்த்தியானதொரு நகரக் காடு இருந்தது. URBAN NATURALIST என்ற பலகை, உள்ளே உள்ள பறவைகள் மற்றும் சிறு விலங்குகள் பற்றிய பெயர்ப் பலகை, அந்த நகரக் காடு யாருடைய நினைவில் நிறுவப்பட்டிருக்கிறது என்கிற விபரம், எல்லாவற்றையும் படிப்படியாகப் படித்தபடியே நடை பயில்வதற்குக் கான்க்ரீட் சாலையும் இருந்தது.

அந்தக் கான்க்ரீட் சாலையின் திருப்பங்களில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கும் குறு முயல்கள், காலடிச் சத்தம் கேட்டவுடன் குதித்தோடி விடுகின்றன.

குயிலோசையும் ரயிலோசையும் அருகருகே கேட்கிற அதிசயம் அங்கே அன்றாடம் அரங்கேறுகிறது. டல்லாஸில் நாங்கள் பார்க்க விரும்பிய மற்றோர் இடம், அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி சுடப்பட்ட இடம். ஒரு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் பதுங்கியிருந்த கொலையாளியின் துப்பாக்கிக் குண்டுக்கு, திறந்த காரில் பயணமான கென்னடி பலியானது டல்லாஸ் நகரில்தான். 1963 நவம்பர் 22ல் நடந்த சம்பவம் அது. மிக இளைய வயதில் ஜனாதிபதியாகி, ஆயிரம் நாட்களுக்குள் கொல்லப்பட்ட ஜான் கென்னடியை அமெரிக்கா இன்னும் மறக்கவில்லை.

டாக்டர்.கு.ஞானசம்பந்தனின் கல்லூரித் தோழர் திரு.ராம்குமார், எல்லா இடங்களுக்கும் கையில் கதைப் புத்தகத்துடனேயே வரும் அவருடைய குட்டிப் பையன் சுபாஷ், திரு.ராம்குமாரின் நண்பர் திரு.சந்தானம் ஆகியோருடன் சிக்ஸ்த் ஃப்ளோர் மியூசியம் என்ற அந்த இடம் நோக்கிப் புறப்பட்டோம்.

பலத்த பாதுகாப்புடன் திகழும் அந்த மியூசியத்தில் கணிசமாய் ஒரு கட்டணம் வாங்கிய பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். “காசு கொடுத்து விட்டோம் என்பதற்காக இங்கே குடியேறி விடாதீர்கள்” என்று சொல்வதைப் போல, சுற்றிப் பார்ப்பதற்கென்று நேர வரையறையும் உண்டு.

ஜான்கென்னடியின் புகைப்படங்கள், அவரது உற்சாகமான உரைவீச்சு, அரசியல் வாழ்க்கை, ஜாக்குலின் உடனான காதல் வாழ்வு, என்று திரும்பும் இடமெல்லாம் புகைப்படங்களும், திரைப்படங்களும்!

ஜான்கென்னடியின் கடைசி நிமிடங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆறாவது மாடியில் பதுங்கியிருந்த கொலையாளி பிடிபடுவதிலிருந்து, அடுத்த சில நாட்களிலேயே போலீஸ் காவலில் இருக்கும்போதே அவன் சுட்டுக் கொல்லப்படுவது வரை பரபரப்பான காட்சிகள் கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களாய் ஓடுகின்றன. சாட்சியங்கள் பற்றிய தகவல்கள், கொலையைப் படம் பிடித்த காமிராக்கள் என்று ஏகப்பட்ட ஆவணங்களும் பொருட்களும் அணி வகுத்திருக்கின்றன.

ஜான்கென்னடி சுடப்பட்ட செய்தி தாங்கி 1963ல் வெளியான பத்திரிகைகளின் பிரதிகள், இன்றும் ஐந்து டாலர், ஆறு டாலர் என்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வளாகத்தின் பல இடங்களில், ஜான்கென்னடியின் உத்வேகமூட்டும் சொற்பொழிவுகள் ஒலி பரப்பப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *