எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…

எதிரெதிர் திசைகளில் வருகிற வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று உரசாத வண்ணம், சாலையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும் நீளச்சுவர்கள், சாலையின் மத்தியிலும், இரு புறங்களிலும் படுத்துக் கொண்டே போக்குவரத்தைப் பார்வையிடும் புல்வெளிகள், நகர்ப் புறங்களைக் கடந்து நகரும்போது நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிற மரங்கள், சாலைப் பயணத்திற்கு சுகமான நாடு அமெரிக்கா.

ஆயிரக்கணக்கான மைல்களைக் காரில் கடந்தாலும் அலுப்பு வராத வண்ணம் சாலைகள் சமச்சீராக இருக்கின்றன. காரில் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும்.

கார்கள் எவ்வளவு சொகுசாக இருந்தாலும் சரி, குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு பயணம் செய்தால் அப்பா அம்மாவுக்கு அபராதம் தான்!!

பிறந்த குழந்தைக்கென்று பிரத்யேகமாய் கார்த் தொட்டில்களை அரசாங்கம் வடிவமைத்திருக்கிறது. மருத்துவமனையில் குழந்தை பிறந்து, வீட்டுக்குப் புறப்படும் நாளில், குழந்தையை அம்மாவின் கைகளில் தரமாட்டார்கள். செவிலிப்பெண், குழந்தையைத் தூக்கிக்கொண்டு கார் வரையில் வருவார். பிறந்த குழந்தைக்கு பிரத்யேகமான கார்த் தொட்டில் உங்கள் காரில் இருந்தால்தான், உங்கள் குழந்தை உங்களுக்கு. இல்லையென்றால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்த செவிலிப்பெண் மருத்துவமனைக்குள் சென்று விடுவார்.

சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கென்று வேறு விதமான கார் இருக்கை அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் குழந்தை வளர வளர, அதற்கேற்ற இருக்கையை உங்கள் காரில் நீங்கள் பொருத்திக்கொள்ள வேண்டும். மாறாக, சராசரி இருக்கையிலோ மடியிலோ அமர்த்தினால் காவல்துறை பின் தொடர்ந்து வந்து அங்கேயே  அபராதம் விதிக்கும்.

எவ்வளவு மோசமான விபத்து நடந்தாலும் குழந்தைக்கு அடிபடாத விதமாக அந்த இருக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் உயிருக்கும் உரிமைக்கும் அதிகபட்ச முக்கியத்துவம் அமெரிக்காவில் தரப்படுகிறது. பெற்றோர் தங்களைத் திட்டுவதாகவோ அடிப்பதாகவோ குழந்தைகள் தொலைபேசி வழியே புகார் தந்தால் தொலைந்தது.

அவர்கள் புகார் தரக்கூட வேண்டாம். குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழுத்தினால் போதும், அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை வந்துவிடும். அடிப்படை விசாரணைகள் நடக்கும். பெற்றோர் குழந்தையை அடித்தது உண்மையென்று தெரிய வந்தால் குழந்தை, காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்படும். பெற்றோர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.

அமெரிக்காவின் சாலைகளில் இன்னோர் அற்புதமான அம்சம் இருக்கிறது சாலையோரங்களில் சிறுசிறு துளைகள் கொண்ட ஒரு பகுதி இருக்கிறது. ஏன் தெரியுமா? ஆயிரக்கணக்கான மைல்கள் கார் ஓட்டும் களைப்பில் ஓட்டுநர் கண்ணயர்ந்து விட நேரும். அப்படி நிகழ்ந்தால் கார் எப்படியும் வலப்புறமோ இடப்புறமோ ஒதுங்கும். சிறுதுளைகள் கொண்ட பகுதியைக் கார்ச்சக்கரம் தொட்டதும். “தடதட” வென ஓசையெழுப்பி, தூங்கும் ஓட்டுநரைத் தட்டியெழுப்பும். சாலைகளில் யாரும் பெரும்பாலும் ஹாரன் அடிப்பதில்லை. பின்னால் வருபவர்கள் ஹாரன் அடித்தால், தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக, வாகன ஓட்டிகள் பதறி விடுகிறார்கள்.

நீண்ட தூரப் பயணங்களில், ஆளரவமற்ற இடங்களில், காரை நிறுத்திவிட்டு “ஓரமாக ஓதுங்குவது” எல்லாம் அங்கே கிடையாது.

மிகக்குறைந்த இடைவெளிகளில் ‘எக்ஸிட்’ பிரிவுகளில் சாலையோர உணவகங்கள், கடைகள் உள்ளன. நீங்கள் எந்தப் பொருளையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஓய்வறைகளைப் பயன்படுத்தலாம். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தியும், ஓய்வு அறைகள் புதிது போல் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன.

அமெரிக்கப் பயணங்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயமும் உண்டு. பொதுவாக, ஒரு முகவரிக்குப் போக வேண்டும் என்றால், காரை நிறுத்தி யாரையும் விசாரிக்க முடியாது. மூடியிருக்கும் வீடுகளில் கதவைத் தட்டிக் கேட்பதும் சாத்தியமில்லை. வந்திருப்பவன் திருடன் என்று கருதி, வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்த கையோடு கைத் துப்பாக்கியால் சுட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மாறாக வீட்டில் இருந்து கிளம்பும் போதே, யாகூ போன்ற இணையதளங்களைப் பார்த்து, தாங்கள் இருக்கும் தெருவிலிருந்து, போக வேண்டிய தெருவிற்கான வரைபடத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

அந்த வரைபடத்தைப் பின்பற்றினாலே போக வேண்டிய இடத்திற்குப் போய்விடலாம்.

இது தவிர, அமெரிக்காவின் பெரும்பாலான கார்களில் கணினி வழிகாட்டி பொருத்தப்பட்டிருக்கிறது. காரைக் கிளப்பும்போது, நீங்கள் போக வேண்டிய இடத்தை டைப் செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு நண்பர் சந்தானம், காரில் ஏறியதும் ANY JAPANESE RESTAURANT (ஏதாவதொரு ஜப்பானிய உணவகம்) என்று டைப் செய்தார். உடனே அருகிலுள்ள ஜப்பானிய உணவகங்களின் பட்டியல் திரையில் மின்னியது.அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். உடனே, அங்கு செல்வதற்கான வழித்தடம், காரின் கணினித் திரையில் விரிந்தது.

எப்படிச் செல்ல வேண்டுமென்று ஒரு கோடு வழிகாட்டிக் கொண்டே வந்தது. “கோடு போட்டால் ரோடு போடுவது” என்பதன் அர்த்தம் எனக்கு அமெரிக்காவில்தான் விளங்கியது.

“ஒரு வேடிக்கை பாருங்கள்” என்று சொன்ன சந்தானம், வேண்டுமென்றே கணினி காட்டிய வழியை விட்டு வேறு திசையில் காரைத் திருப்பினார். உடனே கணினித்திரை “குய்யோ முறையோ” என்று அலறியது. “தவறான வழியில் வந்துவிட்டாய்” என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகத் திட்டிவிட்டு “சரி! போகட்டும் போ” என்ற பாவனையில் அங்கிருந்து மறுபடியும் போவதற்குப் புதிய வழியைக் காட்டத் தொடங்கியது.

அதேபோல, டல்லாஸின் தலைநகரமாகிய ஆஸ்டினுக்கு, என் பள்ளித் தோழன் விஜய ஆனந்த் குடும்பத்துடன் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். “அங்கே பார் டிராபிக் ஜாம்” என்று சாலையின் எதிர்ப்புறத்தைக் காட்டினான், ஏதோ ஒரு சாலை விபத்து.

பத்து மைல் தொலைவிற்கு வாகனங்கள் அணி அணியாகத் தெரிந்தன. அருகில் நெருங்கும் போது தான் ஒன்று புரிந்தது. “டிராபிக் ஜாம்” என்றாலும் ஒரு வாகனம் கூட நிற்கவில்லை. மிகமிக மெதுவாக ஒவ்வொரு வாகனமும் நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு வாகனத்திலிருந்து இன்னொரு வாகனத்திற்கு நடுவில் ஐம்பதடி இடைவெளி இருந்தது.

அமெரிக்காவில் பாலங்கள் அதிகம். ஆனால், பாலங்களின் உயரம் ஒரே மாதிரியாக வரையறுக்கப்பட்டுள்ளது. சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களின் உயரமும் மூன்று அளவுகளில் வரையறுக்கப்பட்டுள்ளன.

சரக்கு வாகனங்களின் உயரம், பாலங்களின் உயரத்தைவிடவும் குறைவாக இருக்கும்படி நிர்ணயித்துள்ளார்கள். எனவே, பாலங்களில் கனரக சரக்கு வாகனங்கள் தட்டிக்கொண்டு முட்டிக் கொண்டு நிற்க வாய்ப்பேயில்லை.

ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு விமானத்தில் போகிறவர்கள், அங்கே டாக்ஸி வைத்தால் அதிக செலவாகும். அதற்கு பதிலாக அவர்களே ஓட்டிக்கொண்டு போகும்படியாக வாடகைக் கார்கள் கிடைக்கின்றன.

விமானத்தில் போய் இறங்கி, ஒரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு வேலைகளை முடித்துக் கொண்டு வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த விமானத்தில் ஊர்திரும்புவது என்பது அமெரிக்காவின் அன்றாட வழக்கம்.

அதேபோல குடும்பத்துடன் நெடுந்தொலைவு போக நேர்ந்தால், “நகரும் வீடுகள்” வாடகைக்கும் கிடைக்கின்றன, விலைக்கும் கிடைக்கின்றன. ஒரு வீட்டின் வசதிகள் அனைத்தும் கொண்ட வாகனங்கள் அவை.

இத்தனை வசதிகளையும் ஒழுங்குகளையும் தாண்டி அவ்வப்போது சாலை விபத்துகள் சாத்தியமாவதுதான், “அதிசயமே அசந்து போகும் அதிசயம்”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *