எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…

படகு நிரம்பியதும் பயணம் தொடங்கியது. வெள்ளருவியின் மீது வானவில் கோலமொன்று தகதகத்தது. அருவியை நெருங்க நெருங்க குரல்கள் மங்கத் தொடங்கின. அருவியில் நனைகிற சந்தோஷச் சப்தங்களை விழுங்கியது, அருவி எழுப்பிய சந்தோஷச் சப்தம். கண்திறக்க முடியாத அளவு நீர்த் துகள்களை வாரியிறைத்து வரவேற்றது நயாகரா. முகத்தில் அறைந்த மல்லிகைப் பூக்களாய் நீர்த்துளிகள். தொட்டுவிடப் பார்க்கும் தூரத்தில் அழைத்துப்போய் தொடும் முன்னே திரும்பி விடுகிறது படகு. அருவி விழுகிற மலைப்பகுதி குதிரையின் குளம்புபோல் இருப்பதால் “ஹார்ஸ்&ஷ§” என்று அதற்குப் பெயர்.

நயாகராவில் நுழைந்து வெளிவந்த நுட்பமான அனுபவத்தில் நனைந்து கிடந்தது மனசு. படகில் வந்த பலரும், நயாகரா பயணத்தின் நினைவாக அந்த நீலநிறக் கோட்டை சுமந்து சென்றார்கள். நான் அருவியைச் சுமந்துகொண்டு, அந்தக் கோட்டை அங்கிருந்த கூடைக்குக் கொடுத்து விட்டேன்.

பல்வேறு இடங்களில் நின்று பார்த்தாலும் பாற்கடல்போல் பரந்து கிடக்கிறது நயாகரா. “இது நீருக்கு வீழ்ச்சியல்ல! எழுச்சி” என்று நயாகராவில் நனைந்தபடி கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் மனதில் அலைமோதின. கனடா நாட்டிலிருந்து கண்ணுக்குத் தெரியும் நயாகராதான் இன்னும் பிரம்மாண்டமாய் இருக்குமென்று சொல்கிறார்கள்.

அன்று மாலை, நயாகராவில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கினோம். வெய்யில் விலகாத இரவில், நயாகராவின் தெருக்களில் திரிந்தோம். வீதியின் இருபுறங்களிலும் கேளிக்கை விடுதிகளும் சூதாட்டக்களங்களும் நிறைந்திருந்தன.

இலக்கில்லாமல் தெருக்களில் திரிந்து, அறைக்குத் திரும்பி, நீளப்பேசி, களைப்பு வந்து கண்களை அழுத்தும் வரையில் பேச்சு நீண்டது.

மறுநாள் காலை நயாகராவிலிருந்து ஃபிலாடல்ஃபியா செல்வது என் பயணத் திட்டம். பாதி தூரத்தில் என் உறவினர் சுரேஷ் வந்து அழைத்துக் கொள்வதாய் ஏற்பாடு.

திரும்பும் வழியில்தான் அமெரிக்காவைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாய் நண்பனிடம் விசாரித்தேன். அமெரிக்காவை ஆள்பவர்களோ, அமெரிக்காவில் வாழ்பவர்களோ அந்த மண்ணின் பூர்வகுடிகள் அல்லர். ஆனால், அமெரிக்காவின் மீது அங்கே வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாய் இருப்பது ஏன்?

கொஞ்சம் யோசித்துவிட்டு அருண் சொன்ன பதில் நியாயமாய்ப்பட்டது. “அமெரிக்கா என்பது ஒரு தேசம் மட்டுமல்ல. அது ஒரு Idea” உண்மைதான். தங்கள் கனவுதேசம் என்று பலரும் அமெரிக்காவைக் கருதுகிறார்கள். சட்டத்தின் முன் அத்தனை பேரும் சமம் என்கிற உணர்வு அங்கே நிலவுகிறது. சட்டத்திற்கு எதிரான விஷயங்களில் மக்களும் ஈடுபடக்கூடாது, சட்டத்திற்கு மாறான அசௌகரியங்கள் குடிமக்களுக்கு தரப்படக் கூடாது என்கிற உணர்வு அங்கே உறுதியாக இருக்கிறது.
தாலிபானில் ஓர் இந்தியர் சம்பவத்தையே தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட எடுத்துக் கொள்ளுங்கள். இத்தகைய அசம்பாவிதம், அமெரிக்காவின் குடிமகன் யாருக்காவது எந்த நாட்டிலாவது நேர்ந்தால், அந்த தேசத்தை அமெரிக்கா உலுக்கி எடுக்கும். அமெரிக்கா மற்ற நாடுகளைக் கையாள்கிற முறை குறித்து நமக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால், அமெரிக்கா தன் குடிமக்களுக்குத் தருகிற முக்கியத்துவம் அபாரமானது.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர், இந்தியா வருவதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அவரை காவல் துறையோ இராணுவமோ துரத்தினால், அமெரிக்கக் குடியுரிமை அட்டையைக் காட்டிவிட்டு அவர் அமெரிக்கத் தூதரகத்திற்குள் கால்வைத்து விட்டால் போதும். தூதரகம் அவரைப் பாதுகாக்கும்.

பொதுவாகவே, தூதரகம் என்பது வெறும் கட்டிடமல்ல. அதுவே தன்னளவில் ஒரு தேசம்தான். அமெரிக்காவில் இருக்கிற இந்தியத் தூதரகம் என்பதே, இந்தியாதான். அதற்குள் நீங்கள் நுழைவதென்பது இந்திய தேசத்திற்குள் நுழைவதற்குச் சமம். இது, தூதரகங்களுக்கு இருக்கிற அங்கீகாரம். எல்லாத் தூதரகங்களும் தங்களை அந்த அளவுக்கு நிலை நிறுத்துகின்றனவா என்ற கேள்வி எழலாம். ஆனால், அத்தகைய கொள்கையில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.

அமெரிக்க மக்கள் தொகையின் கணிசமான பகுதி வந்தேறிகளைக் கொண்டது என்பதால் அமெரிக்கா, கண்காணிப்போடு இருக்கிறது. “சீனாவுடன் யுத்தம் வந்தால் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்” என்கிற கேள்வியை அமெரிக்காவில் வசிக்கும் சீனர்களிடம் அமெரிக்கத் தொலைக்காட்சிகள் சில அடிக்கடிக் கேட்பதுண்டு என்கிறார்கள்.

அதேபோல, மரணத்திற்கு முன்பு மனிதர்கள் தங்கள் சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை அறக்கொடைகளுக்காக எழுதிவைத்து விடுகிறார்கள். அறப்பணிகளுக்குக் கொடை த-ருகிற விஷயம், குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தப்படுகிறது.

வார இறுதிகளில், குழந்தைகள், தங்கள் சேமிப்பில் கிடைத்த ஒரு தொகையை ஏதேனும் அறப்பணிகளுக்கு நன்கொடையாகத் தருகிறார்கள். அந்தக் காட்சிகளை அமெரிக்கத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றன. கொடை கொடுப்பதை ஊக்குவிக்கின்றன. இவை எல்லாம் அமெரிக்காவில் பலரும் எனக்குச் சொன்ன விஷயங்கள்.

இதில் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. டல்லாஸில் இருந்தபோது தமிழ் மாநாட்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அங்கிருந்த பிரம்மாண்டமான ஏரி ஒன்றில் படகுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று காலை வேகக் காற்று வீசி இருந்தது. காற்றின் வீச்சு சமச்சீராக இருப்பதற்கான சமிக்ஞை சரியாகக் கிடைக்காததால் விசைப்படகிலேயே காத்திருந்தோம். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் அமர்ந்திருந்து உணவு உண்ணவும் கலந்து பேசவும் ஏதுவாக பரந்து விரிந்திருந்த படகு அது.

ஆனால், காற்றின் அளவு திருப்திகரமாக இல்லாததால் படகின் ஓட்டுனர் படகை இயக்க மறுத்துவிட்டார். நின்றிருந்த படகிலேயே விருந்து நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் சமீபத்தில் வந்த புயலின்போது ஓட்டுனர் மறுத்தும் பயணிகள் வற்புறுத்தி பேருந்தைப் பாலத்தில் ஓட்டச் செய்ததும் பேருந்து கவிழ்ந்ததும் எவ்வளவு பொறுப்பற்ற சம்பவம்.

ஆனால், அத்தகைய நாட்டில் சமீபத்தில் வீசிய சூறாவளிகளின்போது ஆயிரக்கணக்கானவர்கள் நிர்க்கதியாய் நின்றதும், அண்டை மாநிலங்களே உதவ மறுத்ததும் எப்படி என்பது தான் புரியாத புதிர்.

மனிதர்களை எடைபோடச் சரியான எடைக் கற்கள் சூழ்நிலைகள்தான் என்பது இத்தனையும் யோசிக்கும்போது புரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *