பூஞ்சிறகில் புயல் தூங்கக் கூடும் – அது
புறப்படும்நாள் தெரிந்தவர்கள் இல்லை
தேன்துளியில் கலை பதுங்கக்கூடும் – அது
தீப்பற்றும் நாளறிந்தோர் இல்லை
வான்வெளியும் விடுகதைகள் போடும் – அது
விளங்கும் பதில்சொல்பவர்கள் இல்லை
ஆனாலும் நம் பயணம் நீளும் – அதில்
ஆனவரை காண வேண்டும் எல்லை!

காற்றின்கை காகிதமாய் திரிந்தால்- அதில்
குறிப்பிட்ட இலக்கேதும் உண்டோ
நேற்றினது பாதிப்பை சுமந்தால் – நம்
நெஞ்சிற்கு அமைதிவரல் உண்டோ
மாற்றாமல் வைத்த பணம் போலே – இங்கு
மனிதசக்தி செயல்மறந்து போனால்
ஏற்றங்கள் உருவாவதில்லை – இதனை
எண்ணாமல் புகழ் பிறப்பதில்லை!

சூழல்கள் எவ்வளவோ மாறும் – உன்
சூத்திரங்கள் அதற்கேற்ப மாற்று
வாழத்தான் உயிர்களெல்லாம் ஏங்கும் – உன்
வாழ்வுக்கோர் காரணத்தைக் காட்டு
தாழ்வுகளைத் தள்ளிஎழும் உத்தி – அது
தானாக வந்துன்னைக் காக்கும்
தாழ்திறந்து வாசலைப்பார் தம்பி – நீ
தேடிவைத்த கன்றொருநாள் பூக்கும்!

 – மரபின்மைந்தன் முத்தையா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *