சத்குரு விட்ட பட்டம்”Oh! Its a long time since i flew a kite” என்று சத்குரு சொன்னபோது ஒளிப்பதிவுக்கருவிகளின் கோணங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். கங்கைக்கு மேலே பறந்து கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்துக்  கொண்டிருந்த சத்குருவின் வலக்கரம் பட்டத்தின் நூலை விடுவது போலவும் சுண்டியிழுப்பது போலவும் சில விநாடிகள் பாவனை செய்தன.

மிகவும் இயல்பாக நிகழ்ந்த அந்த உரையாடலில் சத்குரு கங்கையாகப் பெருகிக் கொண்டிருந்தார். சிவனையும் காசியையும் சுற்றிப் பின்னப்பட்டிருந்த புராணத்தின் பட்டுக் கயிறுகளை அநாயசமாய் விடுவித்து அவற்றுக்குள் பொதிந்து கிடந்த ஆன்மீக அறிவியலை மலர்த்திக் கொண்டிருந்தார்..

“மனித உடல் இதற்குமேல் பரிணாம வளர்ச்சி கொள்ளாது என்று நவீன அறிவியல் பேசுகிறது. இதை ஆதியோகி பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டார். ஆனால் சூட்சும நிலையிலும் சக்திநிலையிலும் அடுத்த கட்டத்திற்குப் போகிற வாய்ப்பு மனிதனுக்குக் கட்டாயம் உண்டு. முக்தியை சாத்தியமாக்கும் பொருட்டு பிரம்மாண்டமான அளவில் படைக்கப்பட்ட எந்திரம்தான காசி. மனித உடலும் அதே நோக்கத்துடன் படைக்கப்பட்ட சிறிய எந்திரம். மனிதன் தன்னுடைய சிறிய எந்திரத்தின் அடுத்த நிலைக்காக காசி என்ற பெரிய எந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”என்று சத்குரு சொன்னபோது, கடந்து போன ஒரு படகுக்குள் இருந்த மிதிவண்டி என் கண்களில் பட்டது.

“காசியில் இறக்க முக்தி” என்று சொன்னதாலோ என்னவோ,பலரும் இறக்கும் தருணத்தில் காசிக்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களே?” என்ற என் கேள்வியை இடைமறித்தார் சத்குரு. “எந்தக் காலத்திலே அப்படி சொன்னாங்கன்னு பார்க்கணும். உங்க ஊர் திருக்கடையூர் தானே. அங்கிருந்து ஆயிரம் வருஷம் முன்னே வரணும்னா வாகனம் கிடையாது. இரண்டாயிரம் மூவாயிரம் கிலோமீட்டர் நடந்துதான் வரணும்.அவ்வளவு தூரம் நடந்து வர்றவங்க ஊருக்குத் திரும்பப் போற திட்டம் வைச்சுக்க மாட்டாங்க. அதனால அப்படி சொல்லியிருக்கலாம். இப்ப அப்படி இல்லை. காலையில புறப்பட்டா சாயங்காலம் காசி வந்துடலாம். அதனாலே எல்லாரும் திடமா இருக்கறப்பவே காசியை பயன்படுத்திக்கணும்” என்றார்.

ஒளிப்பதிவுக் கருவியின் பதிவெல்லைக்குள் கங்கைக் கரையில் சாவதானமாகப் பல்தேய்த்துக்கொண்டிருந்த ஒருவரை படப்பிடிப்புக் குழுவினர் சற்றே தள்ளிச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தபோது சத்குரு தடுத்தார்.”அவரை விட்டுடுங்க!காசி எப்படி இருக்குமோ அப்படியே எடுங்க!அவர் காசியின் பிரதிநிதியா தெரியறார். என்ன …. கொஞ்சம் தாமதமா எழுந்துட்டார் போல!! இப்பதான் பல்தேய்க்கிறார் என்று சத்குரு சொன்னார். அந்தக் “கொஞ்சம் தாமதமான” நேரம் மாலை நான்கு மணி.

சிவனின் வெவ்வேறு ரூபங்கள், காசியில் மரணமடைய மக்கள் விரும்புவதன் தாத்பர்யம்,கங்கை போன்ற நதிகளைப் புனித நதிகள் என்று சொல்வதன் காரணம்,தண்ணீரை தீர்த்தமாக்கும் ஆன்மீக ரசாயனம் என்று வெவ்வேறு அம்சங்கள் குறித்துக் கேட்கக் கேட்க் சத்குரு அந்த மகத்துவங்களை மூடியிருந்த மர்மத் திரைகளை விலக்கினார்.

ஒளிப்பதிவு முடிந்து கங்கைக்கரையைச் சுற்றி வந்த சத்குருவின் கண்களில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள் பட்டனர். அங்கு பறந்த பட்டங்களிலேயே மோசமாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பட்டத்தை சத்குரு வாங்கி,”பறக்க விடுகிறேன் பேர்வழி”என்று கயிற்றைச் சுண்ட அது ஒரு குட்டிக்கரணம் அடித்து எதிரே இருந்த பள்ள்த்தில் விழுந்து முக்தியடைந்தது. சிறுவர்களின் உற்சாகக் கூச்சலில் சத்குருவும் சேர்ந்து கொண்டபோது, அவ்ரைப்பற்றி நான் பல நாட்களுக்கு முன்னர் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

“கட்டில்லாத வானத்தில்நான் பட்டமாகிறேன்
நூலறுந்துன் காலடியில் வந்து வீழ்கிறேன்
வெட்டவெளி எங்கும்போகும் பறவையாகிறேன் -உன்
வாசமலர்ப் பாதமென்னும் கூடு சேர்கிறேன்

என்திசையில் நான்பறந்தால் எதுவும் நேரலாம்
எத்தனையோ வலைகளிலே விழுந்து வாடலாம்
உன்னுடைய சந்நிதிதான் எனக்கு நிம்மதி
உன்னருகே நானிருந்து பாட அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *