கவிஞர் வைரமுத்து நேற்று மாலை கோவைக்கு வந்தார்.அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர்களில் கோவையும் ஒன்று. இன்று காலை ஹோட்டல்
விஜய் பார்க் இன் என்னும் புதிய மூன்று நட்சத்திர விடுதியைத் திறந்து வைக்கிறார். அதன் உரிமையாளர் திரு. கோவை இரமேஷ், கவிஞருக்கு
ஏகலைவனாய் இருந்து அர்ச்சுனனாய் மாறியவர். அது தனிக்கதை.

அடிப்படை நிலையிலிருந்து பாடிப்படியாய் முன்னேறியவர் ரமேஷ்.
குண்டு வெடிப்பு கோவையில் நிகழ்ந்தபோது தனிமனிதராய் பலரைக்
காப்பாற்றியவர். அலைந்து திரிந்து ஒரே இரவில் 100 யூனிட் இரத்தம்
சேகரித்தவர். கோவையில் சர்க்கஸ் வந்தால் அனாதை இல்லக்
குழந்தைகளை அழைத்துச் செல்பவர். தொண்டுள்ளம் மிக்கவர்.

தொழிலில் ஏற்பட்ட சில தோல்விகளால் ஒர் ஆன்மீக இயக்கத்தில் முழுநேரப் பயிற்றுநராக விரும்பியவர் கோவை ரமேஷ். பத்தாண்டுகளுக்கு
முன்னர்,இந்தத் தகவலை நான் கவிஞரிடம் அவருடைய
கோவைப் பயணமொன்றின் போது தெரிவித்தேன்.

ஒரு முன்னிரவுப் பொழுதில் இரவு உணவுக்குப் பின் ரமேஷை அமரவைத்துக் கொண்டு, ஒருசில நண்பர்கள் மட்டும் உடனிருக்க
வாழ்வியல் வகுப்பெடுத்தார் கவிஞர் வைரமுத்து.

அவர் சொன்னவற்றில் முக்கியமான வரி. “ரமேஷ்!லௌகீக வாழ்வில்
இருப்பவர்களுக்கு  ஆன்மீகம் என்பது மின்சாரம் உற்பத்தியாகும் இடம்.
அதிலிருந்து மின்சாரம் எடுத்து வீட்டில் விளக்குகள் ஒளிர விடுங்கள்.
மின்விசிறியைச் சுழல விடுங்கள். உற்பத்தியாகிற இடத்திலேயே போய்
விழுந்து கிடப்பது உங்கள் வேலையல்ல”.

மறுநாள் காலை, சில ஆயிரம் ரூபாய்கள் முதலீட்டில் ரமேஷ் தொடங்கிய
விஜய் கார்ஸ் நிறுவனம் இன்று கோவையில் இரண்டு கிளைகளும்,
ஈரோடு ,கரூர் ஆகிய நகரங்களில் கிளைகளுமாய் வளர்ந்தோங்கி நிற்கிறது.
கிடைத்த லாபத்தை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்தவர்,இன்று
கோவையின் மையப்பகுதியில் மூன்று நட்சத்திர விடுதியை உருவாக்கி
திறப்புவிழா காண்கிறார்.

கவிஞருடன் கோவை ரமேஷ்

இந்தக் கட்டுரையை நான் எழுத நினைத்தது ரமேஷ் பற்றிச் சொல்வதற்காக
அல்ல. கடந்தவாரம் புதுச்சேரியில் சந்தித்தபோதே கவிஞர்,”இந்தமுறை
கோவைப் பயணத்தில் ம.ரா.போ. குருசாமி அய்யா வீட்டிற்குப் போக
வேண்டும் ” என்று என்னிடம் சொல்லியிருந்தார்.

அருட்செல்வர் மகாலிங்கம் அய்யாவும் மருத்துவமனையிலிருந்து சில
நாட்களுக்கு முன்னர்தான் வீடு திரும்பியிருந்தார். முதலில் அவரைக் காணச் சென்றோம் உற்சாகமாக உரையாடிய அருட்செல்வர், அவரை
நேர்காணல் செய்து கவிஞர் க.வை.பழனிச்சாமி எழுதியுள்ள நூலினை
எல்லோருக்கும் தந்தார்.

கோவை தாமுநகரில் இருக்கும் ம.ரா.போ.அய்யாவின் இல்லம் சென்று
அவரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அங்கிருந்த அவருடைய
மகன் திரு.எழில், மகள் திருமதி மாதவி, பெயர்த்தி செல்வி மாயா ஆகியோருடன் கவிஞர் உரையாடினார். ம.ரா.போவின் நூல்கள் பற்றிப்
பேசினார். அவருடைய ஆய்வுக்கட்டுரைகளின் திண்மை பற்றி வியந்து
பேசினார். விடைபெறும்போது திரு.எழில், ம.ரா.போ அவர்களின்
“பாரதியார் ஒரு பாலம்” நூலினையும்,”பழந்தமிழகம்” நூலினையும்
கவிஞரிடம் தந்தார்.

அந்தப் புத்தகங்களைக் கையில் வாங்கிக் கொண்டு சிந்தனை வயப்பட்டவராய்
காரில் ஏறினார் கவிஞர். கார் புறப்பட்டது. புத்தகங்களையே உற்றுப் பார்த்த
கவிஞர், பெருமூச்சுடன் சொன்னார்,”கடைசியில் மனிதன் சொல்லாகிறான்!!”

அமரர்.ம.ரா,போ.குருசாமி அவர்கள்

மனித உடலைக் காயம் என்பார்கள். “காயமே இது பொய்யடா” என்பது சித்தர் பாட்டு. மண்ணில் மனிதர்கள் நிலைபெறுவது காயத்தால்
அல்ல…காரியத்தால் என்பது புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *