கவியரசு கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த வேளையில் எழுதிய நூல் தைப்பாவை. சமயப்பற்றுள்ள குடும்பத்தில் பிறப்பு,சமய நூல்களில் லயிப்பு ஆகியன அவரிடம் திருப்பாவை,திருவெம்பாவை ஆகிய நூல்களைக் கொண்டு சேர்த்திருந்தது.

அவற்றின் யாப்பழகும் ஓசைச் செப்பமும் அவர் மனதில் இடம் பிடித்ததன் விளைவாக எழுந்த நூல் தைப்பாவை.

திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் பாவை வடிவமொன்றைச் செய்து அதனை முன்னிலைப்படுத்தி பாவாய் என அழைத்து தோழியர் பாடுவதாக அமைந்திருக்கும்.

ஆனால் தைப்பாவையில் கவியரசு கண்ணதாசன் தைமகளையே தைப்பாவாய் என அழைத்துப் பாடியிருப்பார்.

தைத்திங்கள் முதல்நாளை தமிழர் திருநாள் என்று கொண்டாடும் தமிழர் இயல்பையும் திராவிட இயக்க கருதுகோளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழர் மரபு, வேளாண்மை, காதல் வாழ்வு, மூவேந்தர் மாண்பு உள்ளிட்ட பற்பல அம்சங்களைக் கொண்டு தைப்பாவை எனும் நூலைசுவைமிக்க கவிதைகளால் தொடுத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன்.

தைமகள் வருகையால் தமிழர்களுக்குரியஎல்லா மேன்மைகளும் கிட்டவேண்டும் என்றும் கன்னியருக்கு திருமணம் கைகூட வேண்டுமென்றும்,மூவேந்தர் மாண்பு துலங்க வேண்டுமென்றும் பற்பல அம்சங்களை இந்நூல் பாடுகிறது.

“எந்தமிழர் கோட்டத்து இருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல் இடுவெங் களம் சிவக்க
எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ் செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய்;முன்னேற்றம் தான் தருவாய்
தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்
வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்”

இது தைப்பாவையின் முதல் பாடல். தமிழரின் வாழ்வியல்புகள் பலவற்றையும் சுட்டுகிறது.தைமகள் வருகையால் தமிழர் நலன் மேம்பட வேண்டும் எனும் வாழ்த்தையும் இப்பாடலில் கவியரசர்
கூறுகிறார்.
( இன்னும் சில காண்போம்)