வானத்தில் எழுந்தகுரல் வாசகமா? இல்லை!
வாழ்க்கையினை உணர்த்துமொரு வார்த்தைகூட இல்லை!
ஞானத்தின் பாதைதரும் மந்திரமா ? இல்லை!
நாளையினை உணர்த்துமொரு ஜோதிடமும் இல்லை!

ஏதோவொரு பாட்டிசைக்க இறைவனுக்கு விருப்பம்
என்செவியில் முணுமுணுப்பு கேட்டதுதான் திருப்பம்
பாதிச்சொல் பாடியவன் பார்த்துவிட்டுத் திகைத்தான்
பார்த்துவிட்டு வெட்கமுடன் பரம்பொருளும் சிரித்தான்

நாதத்தால் இறைவனைப்போய் நாமடைய முயல்வோம்
நாதத்தை அடைவதற்கே நாயகனும் முயல்வான்
கீதத்தின் லயங்களுக்குக் காலமெல்லாம் பிரியன்
பாதங்கள் அசைத்தாடும் பெருங்கொண்ட வெறியன்

ஆட்டங்கள் ஆடுவதில் அவன்பெரிய மேதை
ஆடவிட்டுப் பார்ப்பதிலோ அவனுக்கு போதை
பாட்டிசைக்கும் இடங்களிலே பார்வையாளன் அவன்தான்
பாட்டுக்குப் பொருளாகப் பொலிபவனும் சிவன்தான்

இவன்பாட்டில் இருப்பதனை இவன்கூட அறியான்
அவன்பாட வைப்பதனால் இவன்பாடித் திரிவான்
சிவன்பாட நினைப்பதனை எவன்பாட முடியும்
அவன்பாடும் மங்களத்தில் அத்தனையும் முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *