நிலவின் கிரணம் பருகும் விழிகள்
நட்சத் திரங்கள் எண்ணட்டும்
ஒளிரும் கதிரின் விடியல் பொழுதில்
உலகில் நுழைந்து வெல்லட்டும்
மலரும் அரும்பில் மதுவின் புதையல்
மனமே வாழ்வும் அதுபோலே
உலரா உறுதி உனக்குள் இருந்தால்
உயர்வுகள் எல்லாம மனம்போலே

பரவிக் கிடக்கும் இயற்கை அழகைப்
பருகும் மனதில் பலம்கூடும்
புரவிக் குளம்பின் ஒலியை நொடியின்
நகர்வில் உணர்ந்தால் விசைகூடும்
அருவிக் குளியல் போன்றது வாழ்க்கை
அரைகுறை நாட்டம் போதாது
குருவிக் கிருக்கும் குறுகுறு வேகம்
நமக்கேன் இருக்கக் கூடாது?

கொட்டிக் கிடக்கும் பிரபஞ்ச அழகு
கூவி அழைக்குது வாழ்ந்திடவே
எட்டிப் பிடிக்க எத்தனை சிகரம்
எல்லாம் அழைக்கும் ஏறிடவே
கொட்டி முழக்கிக் கிளம்பிடு நண்பா
கவலை தயக்கம் கூடாது
முட்டி முளைக்கும் விதையின் முனைப்பு
முயற்சியில் இருந்தால் தடையேது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *