திக்குகள் எட்டிலும் தெரிந்திருப்பாள்-என்
திகைப்பையும் தெளிவையும் கணக்கெடுப்பாள்
பக்கத்தில் நின்று பரிகசிப்பாள்-என்
பார்வையில் படாமலும் ஒளிந்திருப்பாள்
நிர்க்கதியோ என்று கலங்குகையில்-அந்த
நாயகி நேர்பட நின்றிருப்பாள்
எக்கணம் எவ்விதம் நகருமென்றே -அவள்
என்றோ எழுதி முடித்திருப்பாள்
அழுதால் அவளுக்குப் பிடிக்காது-நான்
அழாவிடில் தரிசனம் கிடைக்காது
விழுதாய்க் கண்ணீர் இறங்குகையில்-எந்த
வீழ்ச்சியும் துரோகமும் வலிக்காது
தொழுதால் அவளைத் தொழவேண்டும்-அட
விழுந்தால் அவள்முன் விழவேண்டும்
எழுதாக் கவிதைகள் எழுதவைத்தாள்-அவள்
என்னுயிர் புதிதாய் ஒளிரவைத்தாள்
வாழ்க்கை நாடகம் தொடர்ந்துவரும்-அதில்
வரவுகள் செலவுகள் நிகழ்ந்து வரும்
கேட்கும் ஒருகுரல் உள்ளுக்குள்ளே-அதில்
கேள்விகள் யாவையும் அடங்கிவிடும்
தீர்க்கமாய் ஒரு திருவிளக்கு-அது
தினமெந்தன் மனந்தனில் தெரிந்திருக்கும்
தீர்க்க முடியா வழக்கெல்லாம் -அந்தத்
திருக்கட வூரில் முடிந்துவிடும்
முக்தியின் வேதம் அபிராமி-நல்ல
மௌனத்தின் நாதம் அபிராமி
பக்தியின் சாரம் அபிராமி-இங்கு
படைகொள்ளும் வீரம் அபிராமி
யுக்திகள் எல்லாம் அபிராமி -வரும்
யோசனை தருபவள் அபிராமி
சக்தியின் கனிவே அபிராமி-எனை
சந்ததம் தொடர்பவள் அபிராமி

Comments

  1. நிர்க்கதியோ என்று கலங்குகையில்-அந்த
    நாயகி நேர்பட நின்றிருப்பாள்//

    ஆத்தாளை எங்க‌ள் அபிராம‌வ‌ல்லியை ம‌ன‌மொன்றித் தொழ‌ ம‌ற்றுமொரு அற்புத‌ பாட‌ல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *