ஒரு மனிதர் வெவ்வேறு நிலைகளில் தனக்கென்று திரட்டிக் கொள்ளும் அடையாளங்களை சுமந்து சுமந்து காலப்போக்கில் அந்த அடையாளங்கள்தான் தானென எண்ணத் தலைப்பட்டு விடுகிறார்.இதன் விளைவாக தன்னை ஓர் உயிராக மட்டுமே எண்ணும் வாய்ப்பை இழக்கிறார்.உள்ளே இத்தனை அடைசல்கள் இருக்கும் போது இறைத்தன்மை உள்ளே நுழைய வழிவிடுவதில்லை.ஒரு மனிதரின் அபிப்பிராயங்களைக் கட்டமைக்கக் கூடியவை அடையாளங்கள். சந்நியாசப் பாதையில் போகிறவர்களுக்கு குரு புதிய பெயர் சூட்டுவது இந்த அடையாளங்களை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான்.

மாணிக்கவாசகர் இப்படி ஒவ்வோர் அடையாளமாக அழிப்பதற்கான படிநிலைகளை முன்வைக்கிறார். நம் அடையாளங்களை நமக்கு அடையாளப்படுத்திக் கொண்டேயிருக்கிற உற்றவர்கள் ஊரார், நம் அறிவின் ஆணவத்தை உசுப்புகிற படித்தவர்கள், அறிவுக்கும் ஆணவத்திற்கும் ஒருசேர தீனி போடும் படிப்பு என ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே வருகிறார்.ஒரு கன்று தாய்ப்பசுவின் முலைப்பாலுக்கு கசிந்துருகுவது போல் சிவன் கழலுக்கு மட்டும் சிந்தை உருகும் என்கிறார் மாணிக்கவாசகர்.

” உற்றாரை யான் வேண்டேன்;ஊர்வேண்டேன்;பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்;கற்பனவும் இனியமையும்;
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குரை கழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே”

என்கிறார் மாணிக்கவாசகர். இத்தகைய அடையாளங்கள் குறித்தநம் பெருமித உணர்வை அடித்து துவம்சம் செய்யும் சம்மட்டி அடிகள் சிவவாக்கியரின் வரிகள். உயிராகிய பொன்னைப் புடம் போடும் கனல்கவிதை வரிகள்.

அவ்வரிகளை நோக்கிச் செல்லும் பயணத்தின் முதல் கட்டமாக சமூகத்தில் நன்கு அறிமுகமான சிவவாக்கியர் பாடல்கள், அவற்றுக்கு வழக்கில் இருக்கும் சில பாட பேதங்கள் ஆகியவை குறித்துப் பார்ப்போம்.ஆன்மீகத்தளத்தில் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் அதிகம் பேசப்பட்ட பாடல் ஒன்று உண்டு.

கறந்தபால் முலை புகா;கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்து போன சங்கிஒன் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூ உதிர்ந்த காய் மீண்டும் போய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை ;இல்லை;இல்லை;இல்லையே”

இது மறுபிறப்பை மறுக்கும் பாடல் என்று பலர் கருதுகிறார்கள். தம்மிடமிருக்கும் வினைத்தொகுதி முற்றாகக் கழிந்து விட்டநிலையில் உயிர் உடலை நீங்கினால் மறுபிறப்பில்லை. ஆனால் வெறுமனே இறப்பவர்கள் மீண்டும் பிறக்கத்தானே செய்வார்கள்? இந்தக் குழப்பத்திற்கு விடையளிக்கும் விதமாக இப்பாடலின் ஈற்றடியில் ஒரு பாட பேதம் உண்டு.
” இறந்தவர் பிழைப்பதில்லை;இல்லை,இல்லை,இல்லையே” என்பது அந்தப் பாடபேதம்.

அதேபோல இன்னொரு பாடல். இதுவும் பலராலும் அறியப்பட்டு பேசப்படும் பாடல்.

” நட்ட கல்லை தெய்வமென்று நாலுபுஷ்பம் சார்த்தியே
சுற்றி வந்து ‘மொணமொண’ன்னு சொல்லும் மந்த்ரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமே”

என்பது அந்தப் பாடல்.

இது மந்திரம்சடங்குகள் விக்கிரக வழிபாடுகள் ஆகியவற்றைக் கேலி செய்யும் பாடலென்றொரு பார்வை உண்டு.சடங்குகள், வேள்விகள் எல்லாம்உள்முகமான கவனக் குவிப்புடன் செய்யப்பட வேண்டியவையே தவிர வெறுமனே புறச்சடங்குகளாக நின்றுவிடலாகாது என்பது சிவவாக்கியரின் கொள்கை. “மந்திரமுண்டவர்க்கு மரணமென்பதில்லையே” என்று பாடியவர் அவர்.

” நட்ட கல்லை தெய்வமென்று நாலுபுஷ்பம் சார்த்தியே
சுற்றி வந்து ‘மொணமொண’ன்னு சொல்லும் மந்த்ரம் ஹேதடா என்பது பாடபேதம்.

ஹேது என்றால் வழி.மந்திர உச்சாடனமும் இறைநெறிக்கான வழியாகும் என்ற பொருளில் இந்தப் பாடபேதம் வழங்கி வருகிறது. அப்படியானால் அடுத்த வரி? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்பதை, ” நட்ட கல்லும் பேசும்-ஓ-நாதன் உள்ளிருக்கையில்” என்று பிரிக்க வேண்டும்.உள்நிலையில் தெய்வத்தை உணர்ந்தவர்கள் எங்கும் எதிலும் இறையை உணர்வார்கள். “கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்” என்பார் கவியரசு கண்ணதாசன்.

ஒரே மண்பாத்திரத்தில் தொடர்ந்து குழம்பு வைப்பவர்கள் அதனை வேறு சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள். கரண்டிகளில் கூட அப்படி புழக்கத்தில் விடுவதுண்டு.அதேபோல ஒரு விக்கிரகத்தின் முன் முறையாக மந்திர உச்சாடனங்களும் கிரியைகளும் நிகழ்த்தப்பட்டால் அதில் இறைத்தன்மை நிலைபெறும் என்கிற பொருளிலும் ‘சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமே” என்னும் வரியைக் காணலாம். SEN_0038

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *