உண்ட மயக்கம்

மாலவனின் பாற்கடலில் மிக்க வருமலைகள்
ஓலமிட்டால் கண்ணுறங்க ஒண்ணாதே-கோலமிக்க
தேவியவள் பூமடியில் தேவதேவன் கண்ணுறங்க
மேவிவரும் மௌன மயக்கு.

நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ
மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை
உண்ட மயக்கமோ உத்தமியாள் பேரழகைக்
கண்ட மயக்கமோ கூறு

நாயன்மார் வீடுகளை நாடி நடந்தவரின்
தூய உபசரிப்பில் தான்திளைத்தும்-நேயரை
ஆட்டிப் படைத்தும் அருள்கொடுத்தசோர்வினிலே
நீட்டிப் படுத்தாயோ நீ.

பெண்டு தனைக்கேட்டு பிள்ளைக் கறிகேட்டு
திண்ணனவன் கண்களையுந் தான்கேட்டு-மண்மிசையே
சுந்தரர்க்காய் வீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு
நொந்துபடுத் தாயோ நவில்.

தாழ்சடைகள் அம்மை திருமடியி லேபுரள
ஆழ்துயிலில் உள்ளதோர் ஆபத்து-ஆழிசேர்
கங்கை மறைந்திருக்கக் கண்டால் விடுவாளோ

எங்குறங்கு வாய்நீ இனி

Comments

  1. படுத்தவனைச் சற்றே படுக்க விடாமல்
    அடுத்தடுத்துப் பாட்டென்ன தம்பி? மடுக்கும்
    தமிழினிமை கேட்டுத் தலையசைத்து மெல்லச்
    சிமிழ்திறக்கக் கூடும் சிவம்!

    ரமணன்

  2. நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ
    மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை
    உண்ட மயக்கமோ உத்தமியாள் பேரழகைக்
    கண்ட மயக்கமோ கூறு//

    அருமை முத்தையா..

  3. சுருட்டப்பள்ளி சிவனின் காட்சியும், விரிந்த கவிதையும் அற்புதம்… அற்புதம்! மறுபடி மறுபடி வாசித்துப் பார்க்க வந்தது கிறக்கம் எங்களுக்கும்!! ரமணனின் பின்னுட்டமும் ரசித்தோம். வாழிய!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *