குமுதம் வார இதழில் ‘வைரமுத்து சிறுகதைகள்’ எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன்.

நான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு கொண்ட அபிமானி என்பதும் கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டியவன் என்பதும் என் இலக்கிய முன்னோடிகளும் நண்பர்களும் நன்கறிந்த விஷயம்.

ஜேகே யின் ஓரிரு நூல்களைப் படித்தவர்களுக்குக் கூட அந்தக் கடிதம் அவரின் எழுத்துப் பாணியில் இல்லை என்பது நன்றாகத் தெரியும் .எனவே செய்தி வெளிவந்த போதே கவிஞர் வைரமுத்துவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். “ஜே.கே. தரப்பிலிருந்து உங்களிடம் யார் பேசினார்கள், கடிதம் அனுப்பும் வேலையை யார் ஒருங்கிணைத்தார்கள் என்பதையெல்லாம் நீங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்குமே’ என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று சொன்னார்.இதில் திரு யு.எஸ்.எஸ்.ஆர்.நடராஜன் முக்கியப் பங்கு வகித்திருப்பார்  யூகித்தேன்.

இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் இது தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் திரு.நடராஜன்,தான் ஜேகே யிடம் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதையை வாசித்துக் காட்டியதாகவும்,ஜே.கே மெல்லிய குரலில் ‘நல்லாயிருக்கே’என பாராட்டியதாகவும் இதைக் கேள்விப்பட்டு ஆனந்தப்பட்ட கவிஞர் வைரமுத்து சிறுகதைகள் தொகுக்கப்படும் போது பயன்படுத்த ஜேகே ஒரு வாழ்த்துமடல் தருவாரா என்று கேட்டதாகவும் சொல்லியுள்ளார்.

ஜேகே ஒப்புதலின் பேரில் தானும் ஜேகே அவர்களின் இரண்டாவது மனைவி திருமதி கௌசல்யா அவர்களும் அந்தக் கடிதத்தின் வரைவைத் தயாரித்து ஜேகேயிடம் படித்துக் காட்டி அவர் கையெழுத்து போட முடியாத நிலையில் பழைய கையெழுத்தை ஜேகே ஒப்புதலுடன் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாடியில் இருந்த ஜேகே மகள் தீபா அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்காது என்னும் திரு.நடராஜன்,திருமதி கௌசல்யாதான் ஜே.கேவின் இலக்கிய உதவியாளர் என்றும் தெரிவிக்கிறார்.

//அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.// என்று ஜேகே அவர்கள் மகள் தீபாசொன்னதை நக்கீரன் சுட்டிக் காட்டியுள்ளது.

ஜேகேஒப்புதலுடன் அனுப்பப்பட்ட கடிதம் என்பதை இவர்கள் முன்னரே தெளிவுபடுத்தி, இது ஜேகே யின் கடைசி எழுத்து என்ற வரியையும் நடராஜன் தவிர்த்திருந்தால் விஷயம் இவ்வளவு பெரிய சிக்கலாகியிருக்காதோ என்னவோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *