திருக்கடவூர் பிள்ளையெனப் பெயர்பெற்றவர் – துன்பம்
தீர்ப்பதிலே கர்ணனென வளம் பெற்றவர்!
திருக்கடைக்கண் அபிராமி அருள்பெற்றவர் – இன்று
திருக்கயிலை நாதனிடம் இடம் பெற்றவர்!

-அருளிசைக்கவிமணி.சொ.அரியநாயகம்

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருமுகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடின. பூம்புகார் பண்பாட்டுக் கல்லூரி நிர்வாகத்தில் தன்னுடைய உழுவலன்பர் கே.கனகசபைப் பிள்ளையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒருவருக்கொருவர் பேசித் தீர்வு காணும் ஒத்திசைவு நிலையையும் தாண்டி கருத்து பேதங்கள் வலுத்தன. அடிகளாரை தலைவராகக் கொண்ட தெய்வீகப் பேரவை அரசின் அங்கீகாரம் பெற்று தனித்தன்மை கொண்ட அமைப்பாய் இயங்கி வந்தது. கல்லூரி நிர்வாகக் குழுவில் அதற்கு முக்கிய இடம் தரப்பட்டதால் பூம்புகார் பேரவைக் கல்லூரி என்று பெயர் பெறலாயிற்று. ஆனால் இருவர் இடையிலான கருத்து மோதலில் மக்களும் மாணவர்களும் கே.கே.பிள்ளை பக்கமே நின்றனர்.

அவர் கட்டளைத் தம்பிரானாக இருந்த காலத்தில் குன்றக்குடி ஆதீனமாக அவரை நியமிக்க வேண்டுமென்று தருமையாதீனம் இருபத்தைந்தாவது குருமகா சந்திதானங்களிடம் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தவர்களில் கனகசபைப் பிள்ளையின் தந்தை கயிலாசம் பிள்ளை முக்கியமானவர்.

குருமகாசந்நிதானம் இசைவு தந்தபின், ஒரு நாள் தருமபுர ஆதீன வளாகத்திலிருந்து ஒரு கார் அடிகளாரை அழைத்துக் கொண்டு குன்றக்குடி நோக்கிப் புறப்பட்டது. அது இந்துஸ்தான் நியூ லுக் கார். கனகசபைப் பிள்ளையின் கார். MDY 3361 என்ற எண்ணுடைய அந்தகாரில் அடிகளாரும் கனகசபைப் பிள்ளையும் இருந்தனர். அதை ஓட்டிச்சென்றவர், கனகசபைப் பிள்ளையின் மகனும் பொறியாளருமான திரு.கைலாசம்.

“நல்தகையர் நம்தம் கனகசபைப்பிள்ளை
பண்டு புகழ்க்குடிமைப் பண்பை உறைவிடமாய்க்
கொண்டிலங்கும் நல்லோர்; குறிக்கோளுடன் வாழும்
வற்றா மனஊற்றம் வாய்ந்த பெருந்தகையர்;
அபிராமியம்மை அருட்குழந்தையாகி, என்றும்
தவறா அறங்காவல் தன்பணியாக் கொண்டு பணி
ஆற்றிவரும் தொண்டர்; அருந்தமிழ்ப் பண்பாட்டைப்
போற்றிவரப் பூம்புகார்க் கல்லூரி போற்றுபவர்”

என்று கே.கே.பிள்ளைக்கு ஆசிக்கவிதை எழுதிய குன்றக்குடி அடிகளார், அவரையும் கல்லூரியையும் விட்டு வெளியேறும் சூழல் நேர்ந்தது. காலப்போக்கில் காயங்கள் மறைந்தன. ஒருவர் மேல் ஒருவர் வைத்த அன்பும் மதிப்புமே கூட்டிக் கழித்த பின்னும் துலங்கின.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு அறநிலையத்துறைக்கு இணை அமைப்பாக பேரவை செயல்படுவதாகக் கருதி அந்தப் பேரவையையும் கலைத்தார். ஒரு முறை தமிழக அமைச்சரவையிலிருந்து கே.கே.பிள்ளைக் கொரு கடிதம் வந்தது. மதுரையில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டின் விருந்தோம்பல் குழுத் தலைவராக கே.கே.பிள்ளையை முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்திருப்பதாக அறிவித்திருந்த அந்தக் கடிதத்தில் அமைச்சர் ராஜா முகமது கையொப்பமிட்டிருந்தார். முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலத்தின் நெருங்கிய நண்பராய் இருந்து, காமராஜருடனும் அறிமுகமாகி, கலைஞர் ஆட்சியில் தாளாளர் ஆகி, எம்.ஜி.ஆரின் அன்பையும் பெற்றார் அவர்.

தருமபுரம் இருபத்தைந்தாவது சந்நிதானங்கள் கயிலையில் முக்தியடைய இருபத்தாறாவது குருமகா சந்நிதானங்கள் அருளாட்சிப் பொறுப்பேற்றார். சந்நிதானங்களின் சீரான நிர்வாகத்திலும் தமிழாற்றலிலும் கனகசபைப் பிள்ளைக்கு பெரும் மயக்கமுண்டு. பிச்சைக் கட்டளை நிர்வாகத்தை தருமையின் இந்த இருபெரும் அருளாளர்களின் வழிகாட்டுதலுடன் நிகழ்த்தி வந்தார் கே.கே.பிள்ளை.

திருக்கடவூர் ஊராட்சி மன்றத் தலைவராக முப்பது ஆண்டுகள் செயல்பட்ட கே.கே.பிள்ளை, பெற்றோர் பெயரில் இரு மருத்துவமனைகளை அமைத்து அரசின் பொறுப்பில் ஒப்படைத்தார். குங்கிலியக் கலய நாயனாருக்கும் காரி நாயனாருக்கும் திருமடம் அமைத்த அவர் இலவச தேவாரப் பாடசாலை ஒன்றையும் அமைத்தார். தேவாரம் பயில வரும் சிறுவர்களுக்கு உணவும் உடைகளும் தங்கமிடமும் இலவசம். சில ஆண்டுகள் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறுபவர்கள் திருக்கோயில்களில் ஓதுவாமூர்த்திகளாகப் பணிக்கமர முடியும்.

பாடசாலைக்கென்றே தேவார ஆசிரியர், புல்லாங்குழல் வித்வான் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். ரத்தினம் பிள்ளை என்பவர் தேவார ஆசிரியர். “வாத்தியாரய்யா” என்பது பொதுப்பெயர். அவருக்கு வீடு கொடுத்து வீட்டைத் தொட்டாற்போல பாடசாலையையும் அமைத்திருந்தார்கள். ரத்தினம் பிள்ளை சிதம்பரத்துக்காரர்.

உயரத்தைக் கூட்டிக் காட்டும் ஒற்றை நாடி தேகம். தான் மிகவும் கறார் பேர்வழி என்பதை, கிராப்பிலேயே காட்டுவார். நரைத்த தலை நட்சத்திர உணவகங்களின் புல்வெளி போல் சீராக வெட்டப்பட்டிருக்கும். குறைந்தபட்ச சிகையையும் எண்ணெய் தடவி வாரியிருப்பார். நெற்றியில் திருநீறு. புருவங்கள் மத்தியில் குங்குமம். கழுத்துக் கண்டத்தை ஒட்டி ஒற்றை ருத்திராட்சம் சிவப்புக் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும். வேட்டியும் மேல்துண்டும் அணிந்து சீராகக் கைகளை வீசி அவர் நடந்து வரும் பாங்கே, “நான் வாத்தியார்! நான் வாத்தியார்!” என்று பறை சாற்றுவது போலிருக்கும்.

ஒரே நேரத்தில் பாடசாலையில் பத்துப் பதினைந்து பையன்கள் தங்கிப் படிப்பார்கள். அத்தனை பேருக்கும் உணவு பாடசாலையிலேயே தயாராகும். குழம்பு ரசம் அனைத்தையும் கே.கே.பிள்ளை தினம் ருசி பார்ப்பார்.

அவருடைய பண்ணை வீட்டிலிருந்து இருபதடி தள்ளித் தான் பாடசாலை. ருசி பார்ப்பதென்றால் கிண்ணங்களில் குழம்பு ரசத்தைப் பண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்தால் போதும்தானே? ஆனால் அவர் ஒத்துக்கொள்ள மாட்டார். சமையல்காரர்கள் தங்களுக்கு சமைத்துக் கொள்ளும் உணவை ருசி பார்க்க அனுப்பி விட்டு பையன்களுக்கு மட்டமான உணவைப் போட்டு விட்டால்?? அதற்கொரு விதி செய்தார் அவர். சொக்கலிங்கமும் பெரிய ரெட்டியாரும் குழம்பு ரசம் தயாரானதும் தவலையோடு பண்ணை வீட்டுக்குத் தூக்கி வருவார்கள். பெரிய ரெட்டியாருக்கு சற்றே கூன் விழுந்திருக்கும். தவலைக்குக் காதுகளாக பெரிய இரும்பு வளையங்கள் இருக்கும். ஒரு காதைப் பற்றிக்கொண்டு சொக்கலிங்கம் முன்னால் நடக்க, ஒரு கையால் தவலையின் காதைப் பிடித்துக் கொண்டு பூமியைப் பார்த்த வாக்கில் இன்னொரு கையை சொக்கலிங்கத்தின் முழங்கைக்கு மேலே ஊன்றிக் கொண்டு காலை அகட்டி அகட்டி வருவார் பெரிய ரெட்டியார்.

திருக்கடவூரில் ஆனைகுளம் பூசைக்குளம் ஆகியவையும் உண்டு. பாடசாலைப் பசங்கள் அனைவரும் கண்டிப்பாக சனிக்கிழமையன்று ஆனை குளத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். சின்னப் பசங்களுக்கு எண்ணெய் தேய்த்து விடவும், குளத்தில் குளிக்கையில் கண்காணிக்கவும் பண்ணை ஆட்கள் போவார்கள். சனிக்கிழமையன்று மதிய சாப்பாடு பருப்புத்துவையல், மிளகுக்குழம்பு, பூண்டு ரசம், சுட்ட அப்பளம். அன்று மட்டும் மோர் கிடையாது. மதியம் வகுப்பும் கிடையாது.

பாடசாலைக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குழாய் ஸ்பீக்கர்கள் வழியே தினமும் அதிகாலை வேளையிலும் அந்தி நேரங்களிலும் திருமுறைகளையும் அபிராமி அந்தாதியையும் பாடசாலை மாணவர்கள் பாடுவார்கள்.

அவர்களுக்கு சொல்லித் தரவென்றோ அல்லது பக்க வாத்தியமாகவோ புல்லாங்குழல் தாத்தா என்றழைக்கப்பட்ட ராஜாமணி அய்யர் இருப்பார். அவரை ஒரு கைக் குட்டைக்குள் மடித்து விடலாம். மூத்து முதிர்ந்த குள்ள உருவம். உதடுகளும் கைகளும் நடுங்க ஈனஸ்வரத்தில் புல்லாங்குழல் வாசிப்பார். அப்புறம் ஓர் ஓரமாய் கண்ணுக்குத் தெரியாவண்ணம் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அதிதீவிரமான எம்.ஜி.ஆர். ரசிகர் அவர்.

ரத்தினம் பிள்ளை சிதம்பரத்தில் போய் குடியேறிய பிறகு கீழப்பெரும்பள்ளத்திலிருந்து சம்பந்தம் பிள்ளை என்பவர் வந்து தேவாரப் பாடசாலை ஆசிரியராய் பொறுப்பேற்றார். அவருக்குப் பிள்ளைகளைக் கண்டிக்கவே தெரியாது. தேவாரப் பண்களை எளிதில் பதியச் செய்ய அவர் கற்றுக் கொடுத்த ஒரு பாடல் அவர்மேல் அதிருப்தியை ஏற்படுத்தியது.

“நான் என்றைக்குமே இட்லி எட்டு திம்பேன்
சட்னி தொட்டு திம்பேன்
அல்வா தட்டு திம்பேன்
லட்டு எட்டு திம்பேன்” என்று பண்ணோடு பாடுவார்.

இவர்களுக்கிடையில் பிச்சைக்கட்டளையின் ஆஸ்தான புலவர் நாராயணசாமி செட்டியார், பழுத்த தனது புலமையினை பாலையில் நிலவாய் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பார். கே.கே.பிள்ளை பற்றிய சித்திரக்கவிகள் எழுதிய நேரம்போக, தன் புலமை விடைப்பை தீர்த்துக் கொள்ள ஆள் கிடைக்காமல் திணறிப்போவார்.

“ஆத்திரத்தாலே ஒரு பாத்திரத்திற் பிடித்த
மூத்திரத்தை என்ன செய்யலாம்?
சூத்திரம் தெரியாமலே
சாத்திரம் பயில்பவனின்
நேத்திரத்தில் அதை ஊற்றலாம்!”

என்பது அவருடைய பாடல்களில் ஒன்று.

“செட்டியாரய்யா! தட்டு வைச்சாச்சு! சாப்பிட வாங்க!” என்று ஷண்முகம் பிள்ளை சொன்னால், “ஏன் தட்டு? இலைத் தட்டோ?” என்பார். ஷண்முகம் பிள்ளைக்கு ஒன்றும் புரியாது. அவருக்கேற்ற புலமைத் தோழர் தியாகப்ப செட்டியார். இலக்கியங்களை முறையாகக் கற்றவர். எதிரே ஆள் ஒருவர் கூட இல்லையென்றாலும் ஐம்பது பேர் அமர்ந்திருந்தாலும் கவலையில்லாமல் அமுதகடேசர் சந்நிதி வெளிப்பிரகாரத்தில் பெரிய புராணம் விரிவுரை நிகழ்த்துவார் தியாகப்ப செட்டியார்.

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்”

என்று திருத்தொண்டத் தொகையை சற்றே இடை நிறுத்தம் செய்து, “தில்லை வாழ் அந்தணர், திருநீலகண்டக் குயவர்” என்று பாடினார் சுந்தரர். என் அடியார்களை ஜாதி வாரியாக வகைப்படுத்துகிறாயா என்று சிவபெருமான் கேட்டார். இல்லையே என்று சொல்வது போல்,”இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்” என்றார் சுந்தரர்” என்பதாக நயம் சொல்வார்.

ஒரு சிறுவனுக்குத் துணையாக வந்து நேரெதிரே அமர்ந்திருக்கும் நாராயணசாமி செட்டியார் நமட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருப்பார். அதற்குக் காரணம், ஒரு சைவரின் பண்ணையில் வேலை பார்த்தாலும் நாராயணசாமி செட்டியார் அதிதீவிர வைணவர் என்பதுதான். திருக்கடவூர் அமிர்த நாராயணப் பெருமாள் ஆலய நிர்வாகமும் பிச்சைக் கட்டளையை சேர்ந்தது என்பதால்தான் அங்கே வேலைக்குச் சேர்ந்தார் என்று சொல்பவர்களும் உண்டு.

“நீறில்லா நெற்றி பாழ்” என்ற பழமொழிக்கு அவர் சொல்கிற விளக்கம் வேடிக்கையாக இருக்கும். ஒரு வீட்டுக்கு சுவர்தான் நெற்றி. அதில் சுண்ணாம்பு பூசாவிட்டால் வீடு பாழாகும். அதைத்தான், “நீறில்லா நெற்றி பாழ்” என்றார்கள் என்பது அவர் தந்த விசித்திரமான விளக்கம்.

மண்சாலையிலுருண்ட காலச்சக்கரத்தின் காலடியில் தார்ச்சக்கரங்கள் தோன்றின. கே.கே.பிள்ளையின் மகன் திரு. கைலாசம் சென்னையில் பொறியாளராக இருந்தார். இரண்டு மகள்கள். ஒருவர் மீனாட்சி. இன்னொருவர் அலமேலு. முதலாமவர் சென்னையிலும் இரண்டாமவர் கோவையிலும் வசித்து வந்தனர்.

உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கே.கே.பிள்ளை 1983 ஜøலை மாதம் 10 ஆம் நாள் காலமானார். செய்தியறிந்து தமிழக அரசின் சார்பில் அமைச்சர் குழந்தைவேலு மருத்துவமணை வளாகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நீதியரசர். பு.ரா.கோகுலகிருஷ்ணன் தாமே முன்னின்று அவர் சடலத்தைத் திருக்கடவூர் கொண்டு செல்வதற்கான அனுமதியளிக்கும் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். தொழிலதிபர் திரு.எம்.ஏ. சிதம்பரம் அவர்தம் புதல்வர் திரு.ஏ.சி.முத்தையா போன்றோர் உடனிருந்து தங்கள் குடும்ப நண்பருக்கு இறுதி விடை தந்தனர்.

திருக்கடவூரில் திரண்டுவந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கல்யாணச்சாவு என்பதால் இரட்டை மேளம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதி ஊர்வலம் தொடங்கியதும், ==உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா++ என்னும் கர்ணன் படப்பாடலை நாதசுரத்தில் வாசித்தனர். இது கனகசபைப் பிள்ளைக்கு முன்பே அமரராகிவிட்ட அவருடைய நண்பர் கவியரசு கண்ணதாசனின் அஞ்சலிக் குரலாய் அமைந்தது.

சிதம்பரம் அறப்பணிச்செல்வர் திரு.ஜி.வாகீசம்பிள்ளை தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பலரும் புகழஞ்சலி செலுத்தினர். கோவை இராமகிருஷ்ண வித்யாலய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சொ. அரிய நாயகத்தின் சரமகவியை, பூம்புகார் கல்லூரி பேராசிரியர் செந்தமிழ் முழக்கம் ஆ.செகந்நாதன் வாசித்தார்.

“கார்காத்தார் குலவிளக்கு அணைந்தது – அமுத
கடேசரது திருத்தாளில் இணைந்தது – நம்
சீர்காத்த மலையொன்று மறைந்தது – அந்தோ
சிந்தனையில் துயர்வெள்ளம் நிறைந்தது!

பூம்புகார்க் கல்லூரித் தந்தை –தமிழ்ப்பைம்
பொழிலுக்கு வளந்தந்த எந்தை – மனதில்
நான்புகா சேவைதரும் சிந்தை – அந்த
நல்லவர்க்கும் இறப்புண்டா? விந்தை!

அமுதமென அருளூறும் மனமெங்கே? அந்த
ஆனந்தச் சிரிப்பூறும் முகமெங்கே? மாலைக்
குமுதமென வரவேற்கும் கரமெங்கே? சைவக்
குன்றதனை உலகமினிக் காண்பதெங்கே?”

என்று வளர்ந்த அந்தக் கவிதை கூடியிருந்தவர்களின் உணர்ச்சியைப் பிரதிபலித்தது. கனகசபைப் பிள்ளைக்காக திருக்கடவூர் கோபுரத்தின் மீது மலைப்பாம்பாய் புரண்ட திரியின் உச்சியில் மேல்நோக்கி ஒளிர்ந்தது மோட்சதீபம்.

** ** **
பெருந்தோட்டம் கனகசபைப்பிள்ளை மகன் கைலாசம் பிள்ளை. அவர் மகன் பிச்சைக்கட்டளை எஸ்டேட் அதிபர் கனகசபைப்பிள்ளை. அவருடைய மகன் பெயரும் கைலாசம். அவருடைய நேர்த்தியான நிர்வாகத்தில் பிச்சைக் கட்டளை எஸ்டேட் அபிராமி அம்பாள் ஆலயத் திருத்தொண்டை தொடர்ந்து நிகழ்த்துகிறது. தருமபுரம் ஆதீனம் இருபத்தாறாவது குருமகாசந்நிதானத்தின் அருட்பார்வையும் அரவணைப்பும் பிச்சைக்கட்டளைக்கு பெரும்பலம்.

கணவர் இறந்து பதினேழு ஆண்டுகளுக்குப்பின் 2000 ஆகஸ்ட் 13இல் சென்னையில் காலமானார் ருக்மணி ஆச்சி. இறப்பதற்கு ஒருவாரம் முன்பாக தன் மூத்தமகள் மீனாட்சியையும் பெயர்த்தி உமாவையும் அருகே அழைத்து ருக்மணி ஆச்சி சொன்னார், “இனி ரொம்பநாள் இருக்க மாட்டேன். நாள் கணக்குதான் யாருக்கும் சிரமம் கொடுக்க மாட்டேன்.”

மெலிந்து சுருங்கிய தனது வலக்கரத்தை மெல்ல உயர்த்திச் சொன்னார், “இந்தக் கையால் ஒரு லட்சம் பேருக்காவது சாப்பாடு போட்டிருப்பேன். ஒருத்தர் கூடவா என்னை வாழ்த்தியிருக்க மாட்டாங்க.” சொன்னது போலவே சில நாட்களில் மறைந்தார்.

உயிர் பிரியும் முன் அவர் உதடுகள் உச்சரித்த கடைசிச்சொல், “அபிராமி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *