“சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை”
– சிலப்பதிகாரம்

கடற்காற்றின் குளுமை சதிராடிக் கொண்டிருந்த இளங்காலைப் பொழுதில்
திருக்கடவூர் வீதிகளில் கோலமிடத் தொடங்கியது கதிரொளி.வீதிகளெங்கும்
மாவிலைகளும் தோரணங்களும் ஒளிபட்டு மின்ன, இன்றென்ன
கொண்டாட்டம் என்றறியும் ஆவலில்,தன் தேரை விரைந்து செலுத்தி
வந்து நோக்கினான் வெய்யிலோன்.

சித்திராபதியின் மனையிலிருந்து மெல்லென்றொலித்தன
இசைக்கருவிகள்.குழலிசையும் யாழிசையும் இழைந்திருக்க
ஒத்தபடி மத்தளமும் அதிர்ந்திருக்க,குடமுழா, இடக்கை
கூடி ஒலிக்க நடந்து கொண்டிருந்தது நடன ஒத்திகை.

பக்கத்து மனைகளில் தாயர்கள் பிள்ளைகளைத் துயிலெழுப்பும்
குரல்கள் கேட்டன.”பொற்கொடி! எழுந்திரு! பொழுது விடிந்துவிட்டது.
அரங்கேற்றத்திற்குப் போக வேண்டாமா?” “வில்லாளா! எத்தனை
நேரம் எழுப்புவது! எழுந்திரப்பா! அரங்கேற்றம் காண வரவில்லையா?”

வாய்பிளந்து தூங்கிய பிள்ளைகள் வாரிச்சுருட்டி எழுந்தன.உற்சாகமாய்
புறப்பட்டன.அவர்களின் விளையாட்டுத் தோழி மாதவியின் நடன அரங்கேற்றம் அரசன் முன்னிலையில் நிகழ்வதாக ஏற்பாடு.
திருக்கடவூரின் நால்வீதிகளிலும் ஒடித்திரிந்த பிள்ளைகளில் பிஞ்சுப்
பருவம் முதலே மாதவி தனியாய்த் தெரிந்தாள். பொன்னிறக் கீற்றாய்ப்
பொலியும் அழகு. சின்னஞ்சிறு வயதிலிருந்து கலைப்பயிற்சிகளில்
திளைத்தமையால் வந்த தெளிவு.விளையாடும் பருவத்திலும்
விளைந்துநின்ற பொறுமை.எல்லாம் சேர்ந்து மாதவியை திருக்கடவூரின்
செல்லமகள் ஆக்கியிருந்தது.

நான்கு வீதிகளிலும் உள்ளவர்கள் மாதவியை நன்கறிந்திருந்தனர். ஐந்து
வயதில் வழிபாடு நிகழ்த்தி, நாள்பார்த்து நல்லோரை பார்த்து, ஆடலும்
பாடலும் பயிலத் தண்டியம் சேர்த்த நாள்முதலாகவே,மாதவி கலைகளைக்
கருத்தூன்றிப் பயின்றது கண்டு “என் தங்கமே” என்று மாதவியை மெச்சிக்
கொள்ளாதவர்கள் இல்லை.பிள்ளைகளுடன் விளையாடிக்
கொண்டிருந்தாலும், காலை மாலை இரண்டு வேளைகளும் நாட்டியப்
பயிற்சிக்கான நேரம் வந்தால் தானாக ஓடிவிடுவாள் மாதவி.’சிரமம்
இருபொழுது ‘என்னும் இந்த நியமம் குழந்தைப் பருவத்திலேயே படிந்தது
கண்டு ஊரார் வியந்தனர்.

ஏழாண்டுக் காலம் இடைவிடாத நாட்டியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும்
மாதவியை அரங்கேற்றத்துக்கான முழுத்தகுதி கொண்டவளாய் ஆக்கியிருந்தது.அரங்கேற்ற மரபின்படி அரசன் முன்னிலையில் தங்கள்
சிற்றூரின் செல்வி கலைத்திறனை வெளிப்படுத்துவதைக் கொண்டாடும்
விதமாக விழாக்கோலம் பூண்டிருந்தது திருக்கடவூர்.புத்தாடை உடுத்தி குடும்பம் குடும்பமாய் கூட்டம் கூட்டமாய் பூம்புகார் நோக்கிப் புறப்பட்டனர்.

நான்கு காதங்கள் பரந்து விரிந்திருந்த காவிரிப்பூம்பட்டினத்தின்
தென்பகுதியில்இருப்பது திருக்கடவூர். .திருக்கடவூரிலிருந்து வடக்கு நோக்கி அரைக்காதம்
அரைக்காதம் நடந்தால் காவிரிப்பூம்பட்டினத்தின் மைய நகராகிய பூம்புகாருக்குவந்துவிடலாம். திருக்கடவூரிலிருந்து மட்டுமின்றி ஆக்கூர்
மருதிப்பள்ளம் போன்ற சிற்றூர்களிலிருந்தும் மாதவி
அரங்கேற்றம் காண மக்கள் சாரிசாரியாகப் பூம்புகார் நோக்கிப் போய்க்
கொண்டிருந்தார்கள்.

முகத்திலறைந்த உப்புக்காற்றும் பற்பல இடங்களில் தென்பட்ட
உப்பங்கழிகளும் காவிரிப்பூம்பட்டினத்தை நெருங்கிவிட்டதை உணர்த்தியது.
ஊருக்கு முன்புறம் போரில் வென்றதன் நினைவாய் எழுப்பப்பட்ட கொற்றப்
பந்தல்கள்இருந்தன.வணிக நிமித்தமாய் வந்து தங்கியிருந்த யவனர்களின் தோற்றத்தை வியந்து
பார்த்துநின்ற பிள்ளைகளைத் தாயர்கள் தங்களுடன் சேர்த்திழுத்து நடந்தனர்.
கம்பத்தில் கட்டப்பட்ட யானைகள் அசைவதுபோல் கொடிகள் கட்டப்பட்ட
மரக்கலங்கள் அலைகளின் தாலாட்டில் அசைந்து கொண்டிருந்தன.
பல்வகைப் பூக்கள் மலர்ந்து செழித்த தோட்டங்களையும், கட்டுத்தறியில் கட்டப்பட்ட
குதிரைகள்போல் தோணித்துறைகளில் கட்டப்ப்பட்டிருந்த படகுகளையும்
கண்ணாரக் கண்டபடி கிராமமக்கள் நடந்தனர்.

காவிரிப்பூம்பட்டினத்தை வலம் வந்தும் நாளங்காடியில்நேரம் போக்கியும் கடலாடி மகிழ்ந்து கடல்நீராடியும் கரையோரம் அமர்ந்து பொதிச்சோற்றினைப் பிரித்துண்டும்,
மண்டபங்களில் இளைப்பாறிக் கொண்டும் இருந்தவர்கள் அரங்கேற்ற
வேளை நெருங்க நெருங்க தலைக்கோல்தானத்தின் முன்னர் திரண்டனர்.
நாட்டியங்கள் அரங்கேற்றப்படுவதற்காகவே அமைந்த மண்டபம் அது.

சற்றுநேரத்தில் தொலைவில் முரசொலியும் மங்கல வாத்தியங்களின்
இன்னிசையும் கேட்டன. “தலைக்கோல் ஊர்வலம் வருகிறது” என்று
பரபரபானது கூட்டம்.பல்விதமாய் அலங்கரிக்கப்பட்ட பட்டத்துயானை
அசைந்தசைந்து வருவதைப் பார்த்ததும் எழுந்த ஆரவாரம் அலையோசைக்கோர்
அறைகூவல்போல் ஒலித்தது.

பட்டத்துயானையில் கொண்டுவரப்படும் தலைக்கோலைப் பார்க்க எல்லோரும்
முண்டியடித்தனர். ஒவ்வொரு கண்ணுவும் ஒருசாண் நீளம் எனுமளவில்
ஏழுசாண்களில் அமைந்த செழித்த மூங்கிலை நவரத்தினங்களால் இழைத்து
பொன்தகடு போர்த்தியிருந்தனர்.அந்த மூங்கில் இந்திரன் மகன் சயந்தனாக
உருவகிக்கப்பட்டு புனித நீராட்டுவித்து மலர்மாலைகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஊர்வலத்தில் அமைச்சர்கள் சூழ நடுநாயகமாய் புன்னகையுடன் வந்துகொண்டிருந்த
சோழப்பேரரசன் பெருநற்கிள்ளியைக் கண்டதும் வாழ்த்தொலிகள்
வான்வரை இயம்பின. தேரில் வந்த புலவர் தலைக்கோலை எதிர்முகமாய்
வைத்துப் பூசித்து சமிக்ஞை செய்ததும் அரங்கேற்றம் தொடங்கியது.
தரையிலிருந்து ஒருகோல் உயரத்தில், ஏழடி அகலமாய் எட்டுக்கோல்
நீளமாய் அழகிய மேடை அமைக்கப்பட்டிருந்தது.

தூண்களின் நிழல்கள் அரங்கில் விழாத வண்ண்ணம் இடம்பார்த்துப் பொருத்தப்ப்ப்ட்ட
விளக்குகள் ஒளிர்ந்தன.அரங்கின் திரைவிலக மேற்கட்டி விதானத்தில்
மின்னிய ஓவியங்களும் மூவகைத் திரைகளும் முத்துமாலைகளுமாய்
எழில்கொஞ்சிய அரங்கினைக்கண்டு அவையினர் பிரம்மித்தனர்.

நாட்டியம் கற்பித்த ஆசான்,இசையாசிரியர்,நன்னூற் புலவர், தோற்கருவிகள்
வாசிப்பதில் சிறந்து விளங்கிய தண்ணுமை முதல்வர்,குழலிசைக் கலைஞர்,
யாழிசைக் கலைஞர்,ஆகியோர் அரசனையும் அவையையும் வணங்கி வரிசையில்
அமர்ந்தனர்.

இருவகையான தெய்வ வணக்கப்பாடல்கள் இசைக்கப்பட்டன. ஒருபாடல்
நன்மைகள் நிகழ்த்துமாறு வேண்ட, மற்றொரு பாடல் தீமைகளை அகற்ற
இறைஞ்சியது.தெய்வ வணக்கப்பாடல்கள் நிறைவு பெற்றமைக்கான
அடையாளமாய் அத்தனை கருவிகளும் முழங்கின. “அந்தரக் கொட்டு
முடிந்தது!வந்துவிடுவாள் மாதவி!” அவையோர் கிசுகிசுப்பாய் பேசிக்
கொள்ள அடுத்த விநாடி மேடையில் தோன்றினாள் மாதவி.

பொன்னில் குளித்த மின்னல் கொடிபோல் ஒசிந்து நின்று ஆசான்கள்
அடிபணிந்து அவையை வணங்கி அபிநயக் கோலத்தில் சிலைபோல்
நிற்க சிலிர்த்தது கூட்டம்.முதலில் தேசிக்கூத்து. மூன்றொத்துள்ள
மட்ட தாளத்தில் தொடங்கி ஓரொத்துடைய ஏகதாளத்தில் நிலைகொண்டு
மாதவி பதம்பிடித்தாடிய துல்லியமும் பேரெழிலும் இந்திர சபையில்
இருப்பது போன்ற பரவசத்தை ஏற்படுத்தின.

பின்னர் மார்க்கக் கூத்து.இது பஞ்சதாளத்தில் அமைக்கப்படுவது.வடுகில்
ஒத்தை,தேசியில் ஒத்தை ஆகிய ஆறும்,இரட்டிக்கு இரட்டியாகிய நான்கும்
நிறைவு பெற்றபின் தேசி நடனம் போலவே மட்டதாளம் தொடங்கி ஏகதாளம்
வரை வெகு நேர்த்தியாக ஆடினாள் மாதவி.

“ஏழாண்டு காலப் பயிற்சியில் மாதவி வானவில் போல் பொலிந்திருப்பாள்
என்று கருதினேன். இவள் வானம் போலல்லவா விரிந்திருக்கிறாள்!!”
நாட்டியக் கலையின் நுட்பம் நன்கறிந்தவர்களின் புகழ்மொழிகள்
திருக்கடவூர்க்காரர்களின் செவிகளில் விழுந்தது. ஒருவரையொருவர்
பெருமிதம் பொங்கப் பார்த்துக்கொண்டனர்.

இடிபோல் எழுந்த கரவோசை,அரங்கேற்றம் நிறைவு பெற்றதை உணர்த்திற்று.
மனம் மகிழ்ந்த மன்னன்,தலைக்கோல் பட்டத்தையும் பச்சை மாலையையும்
ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னையும் பரிசளிக்க, பணிந்து பெற்றாள் மாதவி.
அவையோர் வாழ்த்தொலி எழுப்பி மெல்ல மெல்லக் கலையலாயினர்.

குழந்தைகள் பேசிக் கொண்டனர்.”மாதவி இனி திருக்கடவூர் வரமாட்டாளாம்.
காவிரிப்பூம்பட்டினத்திலேயே தங்கி விடுவாளாம்.” இதைக் கேட்டு
பொருள்பொதிந்த பார்வையைப் பரிமாறிக் கொண்ட பெரியோர்
பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டனர்.”ஏதோ! இந்தக் கலையரசியின்
அருமை புரிந்தவனாய் ஒருவன் வந்தால் சரி!”

மெல்ல நடந்து கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி சொன்னாள்.
“வருவான்! வருவான்! வராமலா போய்விடுவான்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *