லம்யம் எனுமோர் லயமும் அதிர்வுடன்

நம்குரு நாதன் நவிலவே-செம்பிது

பொன்னாய்ப் புடமாக பொன்னம் பலமாக

அன்னான் நடமாடு வான்.

வான்மின்னல் கீற்றாய் வெயில்நிலவாய் நீர்த்தழலாய்

தேன்மெல்ல உள்ளே துளிர்க்குமே-நானென்னும்

ஒற்றைஅடை யாளம் உலகெங்கும் தானாக

பற்றோ கரையும் பனி.

பனிதங்கும் வேணியன்; பக்தை கரத்தே

கனிதங்க வைத்தகா ருண்யன் -இனியிங்கு

வந்துவந்து போகும் விதிமாற்றித் தன்கழலை

தந்துவந்து காக்கும் திறம்

திறம்தந்தான் பாடத் தமிழ்தந்தான் வாழ

அறம்தந்தான் அத்தனையும் தந்தான்- விறண்மிண்டர்

கோபத்துக் கஞ்சும் குணக்குன்றன் ஆரூரில்

தீபத்தில் கொஞ்சும் தயை.

தயையே வடிவானான் தாயொரு பாகன்

கயிலை மலையிலிடம் கொண்டான்-துயரேதும்

அண்டாமல் காக்கும் அருளாளன் தானிந்த

அண்டமெ லாமழிக்கும் ஆள்.

ஆளான சுந்தரர்ர்க்கும் ஆளாவான் நாலிரண்டு

தோளாட ஆடுகிற தாண்டவன் -மாளாமல்

தேவரெலாம் வாழவே தானள்ளி உண்டானே

ஆவலுடன் ஆலகா லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *