வானம் எனக்கென வரைந்து கொடுத்த
 வரைபடம் ஒன்றுண்டு
நானே என்னைத் தேடி அடைந்திட
நேர்வழி அதிலுண்டு
ஊனெனும் வாகனம்   ஓட்டி மகிழ்வது
ஒருதுளி உயிராகும்
ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது
எங்கோ அதுபோகும்
காலம் அமைக்கிற சாலைகள் எல்லாம்
காலுக்குச் சுகமில்லை
ஆலாய்ப் பறந்து அடைந்தவை போலே
வேறெதும் சுமையில்லை
நீலம் பரவிய வானிலிருந்து
நகைப்பது கேட்கிறது
ஆலம் பரவிய கண்டத்திலிருந்து
அதுவாய் எழுகிறது
மாற்று வழிகளில் புகுந்தவன் வந்தேன்
மறுபடி கருப்பைக்கு
நேற்று வரைக்கும் நான்செய்த எல்லாம்
நிரம்பும் இரைப்பைக்கு
கீற்றென எழுகிற வெளிச்சத்தின் வகிடு
கிழக்கே நீள்கிறது.
ஊற்றெழும் அமுதம் ததும்பும் கோப்பை
உள்ளே வழிகிறது

பொன்னை எண்ணிப் பூமியைத் தோண்ட
பூதம் வருகிறது
ஜன்னல் மூடிய நெஞ்சுக்குள்ளே
புழுக்கம் நிறைகிறது
தன்னைக் கொஞ்சம் தள்ளி வைத்தால்
தெய்வம் தெரிகிறது
மின்னல் கொஞ்சும் முகிலாய் ஆனால்
மழையாய்ப் பொழிகிறது

ஆகாயத்தின் வரைபடம் புரிந்தால்
அடிகள் வைத்திடலாம்
பாகாய் உருகும் பக்குவம் வந்தால்
பாரை அளந்திடலாம்
நோகச் சொன்ன வார்த்தைகள் கனிந்து
நேயம் கமழ்ந்திடலாம்
வேகம் தணிந்து வேட்கை அவித்தால்
வேதம் விளங்கிடலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *