பல கவிஞர்கள் தங்கள் ஒவ்வொரு கவிதையும் எப்போது பிறந்ததென்று குறித்து வைப்பார்கள்.அல்லது அந்த நாளில் நடந்த சம்பவமே முக்கியமானதாய் அமைந்து அந்தத் தேதியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். என் கவிதைகளில் பெரும்பாலானவற்றுக்கு ஜாதகமோ பிறந்த தேதியோ கிடையாது.

இன்று பழைய கோப்பு ஒன்றினைப் புரட்டிக் கொண்டிருந்த போது, தேதியிடப்பட்ட கவிதை ஒன்று கிடைத்தது. 26.07.2010 அன்று இந்தக்கவிதையை மலேசியாவில் இருந்தபடி எழுதியிருக்கிறேன்.

ஆனால் இந்தக் கவிதைக்கு தலைப்பிடப்படவில்லை.பிறந்த தேதி தெரிந்துவிட்டது.நேரம் ஞாபகமிருந்தால் ஜாதகம் கணித்து பெயர்சூட்டி விடலாம். பிறந்து ஒன்றரை வருடமாகிவிட்டது..

2010ல் இரண்டுமூன்று முறை மலேசியா சென்றதால் இந்தப் பயணம் எதற்காகவென்று தெரியவில்லை

உயிரெழுத்து மெய்யெழுத்து கத்துக்கிடலாம்-அவன்

ஓரெழுத்து போடாம பாட்டு வருமா?

பொய்யெழுத்தில் ஓலநீயும் செஞ்சுக்கிடலாம்-அவன்

கையெழுத்து போடாம காசுவருமா?

பையப்பைய நூறுபேச்சு பேசிக்கிடலாம்-அவன்

பையக் காலி செஞ்சுபுட்டா மூச்சு வருமா?

கையக்கால ஆட்டிநாம ஆடிக்கிடலாம்-அவன்

கட்டுத்திரை போட்டுப்புட்டா காட்சிவருமா?

சொந்தமுன்னும் பந்தமுன்னும் கொஞ்சிக்கிடலாம்-அவன்

சுட்டுப்புட்டா நெஞ்சுக்குள்ள ஆசவருமா?

வந்தபணம் என்னுதுன்னுஎண்ணிக்கிடலாம்-அவன்

வாங்கிக்கிட ஆளவிட்டா வார்த்த வருமா?

சந்தையில நின்னுநின்னு கூவிக்கிடலாம்-அவன்

சொன்னவிலை சொன்னதுதான் மாறிவிடுமா?

சிந்தையில கோயிலொண்ணு கட்டிக்கிடலாம்-அதில்

சிவகாமி வந்தபின்னே துன்பம்வருமா?

அஞ்சுபுலன் சேர்த்தகுப்பை நெஞ்சில்கிடக்கு-இதில்

அஞ்சுகாசு பத்துகாசு என்ன கணக்கு?

அஞ்சுபூதம் தந்ததுதான் இந்த அழுக்கு-இதில்

ஆசையென்ன ரோஷமென்ன வேண்டிக்கிடக்கு?

அஞ்சுகிற உள்ளத்துல வம்புவழக்கு-அது

ஆணவத்தின் பூட்டுப் போட்டு பூட்டிக்கிடக்கு

அஞ்செழுத்து மந்திரத்தில் சாவியிருக்கு-அதை

அன்னாடம் சொல்லிவந்தா வாழ்க்கையிருக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *