(இசைக்கவி ரமணன் , விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமுனிப் பட்டினத்தில் பீடம்கொண்டிருக்கும் தன் குருநாதரை தரிசித்த அனுபவங்களைப் படங்களாய் பகிர்ந்திருந்தார்.அந்தப் படங்கள் பார்த்த உவகையில் இந்த வெண்பாக்கள் எழுதினேன்…..பாம்பறியும் பாம்பின் கால்!!!)
நெருப்பின் குளுமை நிழலை, இமயப்

பொருப்பின் சிகரப் பொலிவை-இருப்பை

தவானந்தம் பூத்த தருவைகை கூப்பி

சிவானந்த மூர்த்தியென்றே சாற்று

காவி இடைமறைக்க காருண்யம் கண்நிறைக்க

மேவு முகில்துகிலாய் மேனியிலே-பீமுனிப்

பட்டினத்தில் வாழும் பரஞ்சுடரின் பொன்னடிகள்

தொட்டதுமே பட்டவினை தூள்.

கைகட்டும் சீடன் கவிகட்டக் காரணமே

பொய்முட்ட ஏலாத பூரணமே-மெய்முட்டும்

ஆவியிலே நின்றொளிரும் அற்புதமே!நின்பெயரைக்

கூவியதே இந்தக் குயில்

வேதம் வருடும் விரலால் இசைக்கவியின்

காது திருகும் கருணையே-தீதேதும்

கேளாச் செவிகளாய் கேட்க அருளினையோ

வாளாங் கிருக்கும் வினை

காதுவழி சேர்த்தவினை கொஞ்சமா நஞ்சமா
ஏதுவழி  மேலும் இதுசேர- நாதன்
கரம்வந்து பற்றியே கொஞ்சும் தருணம்
வரமுண்டோ இங்குனக்கு வேறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *