உடன்வருவோர் வாழ்வினிலே சிலபேர் – நல்ல
உயிர்போலத் தொடர்பவர்கள் சிலபேர்
கடன்போலக் கழிபவர்கள் சிலபேர் – இதில்
காயங்கள் செய்பவர்கள் சிலபேர்.

கைக்குலுக்கிச் செல்பவர்கள் சிலபேர் – வந்து
கலகலப்பாய்ர் பழகுபவர் சிலபேர்
கைக்கலப்பில் பிரிபவர்கள் சிலபேர் – இதில்
காலமெல்லாம் தொடர்பவர்கள் சிலபேர்.

மனிதர்களால் ஆனதுதான் வாழ்க்கை – ஆனால்
மனிதர்கள் மட்டுமல்ல வாழ்க்கை
இனியெவரோ எனும்ஏக்கம் எதற்கு? – இன்னும்
எவரெவரோ வருவார்கள் நமக்கு!

எல்லோரும் முக்கியம்தான், ஆனால் – இங்கே
இடையினிலே சிலர் பிரிந்து போனால்
வல்லவர்கள் வேறெவரோ வருவார் – நாம்
விரும்புகிற விதமாக இணைவார்

நம்பயணம் நம்பாதை நமது – இதில்
நடுவினிலே பலபேர்கள் வரவு
நம்பலமே நமக்கென்றும் சொந்தம் – மனம்
நடுங்காமல் நடையிடுவோம் என்றும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *