9a98d76a75028360af1c2e2b8eafc91b--mythology

வீதியெல்லாம் நின்றிருப்பாள் வேப்பிலைக்காரி-பல
விளையாட்டு நடத்துகிற வேடிக்கைக்காரி;
ஆதிக்கெல்லாம் ஆதியான அம்பிகையாமே- இவள்
அன்னாடங் காச்சிகளின் குடித்தனக்காரி!

சாலையோரக் கோவிலெல்லாம் சக்திபீடமே – ஏழை
சம்சாரி வந்துவிழும் பக்தி பீடமே!
காலையிலே எப்போதோ கோயில் திறக்கும் – எங்க
காளியம்மா அதுவரையில் காத்துக் கிடக்கும்!

பெட்டிக்கடை திறக்கும் போது போணி செய்கிறாள் – அட
பள்ளிபோகும் பிள்ளைக்கெல்லாம் காவல் ஆகிறாள்;
எட்டுவீட்டில் நடப்பதையும் எட்டிப் பார்க்கிறாள் – இவள்
ஏழைகளின் வட்டிலிலே கஞ்சி வார்க்கிறாள்!

வெத்திலைப்பை சுருக்குக்குள்ளே மஞ்சள் முடிச்சு – இந்த
வீரகாளி பேரைச்சொல்லி போட்ட முடிச்சு;
கத்திக் கத்தி சண்டை போடும் கூச்சலின் நடுவே – எங்க
காளியம்மை வந்து நிற்பா கூந்தல் முடிச்சு!

வாசலிலே கம்பம் நட்டால் பொங்கல் கிடைக்கும் – ஆமாம்
வசூல் பணத்திற்கேற்றவாறு மாலை கிடைக்கும்!
பூசைக்கு நடுவில் கொஞ்சம் திட்டும் கிடைக்கும் – இந்தப்
பேரழகி முகத்தைப் பார்த்து பிள்ளை சிரிக்கும் !

ஆலயத்தில் சிதறிய காய் அள்ளிப்போகணும்- அதை
அம்மியிலே அரைச்சுதானே குழம்பு வைக்கணும்!
காலமெல்லாம் காளியம்மா காவல்நிற்கிறா- அவ
கும்மிருட்டில் வீதியெல்லாம் சுத்தி வருகிறா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *