1366177167

தோன்றும் கலைகளின் தொடக்கமவள் – அவை
துலங்கித் தொடரும் விளக்கமிவள்;
சான்றவர் இதயச் சந்நிதியில் – நின்று
சகல கலைகளும் ஆளுபவள்!

வெண்ணிறக் கமலத்தில் வீற்றிருப்பாள் – அவள்
விதம்விதமாய்க் கவி சாற்றிநிற்பாள்;
பண்ணிறை வீணையும் மீட்டிநிற்பாள் – அவள்
பல்கலை வித்தகம் காட்டிநிற்பாள்!

ஏடு தரித்திடும் ஏந்திழையாள் – அவள்
எழில்தரும் வெண்ணிறப் பட்டுடையாள்;
காடு வனங்களின் பசுமையெல்லாம் – எந்தக்
காலமும் வளர்த்திடும் காரிகையாள்!

தொன்மை இலக்கியம் இலக்கணங்கள் – அவள்
திருவடி நிழலினில் தோன்றியவை;
என்றும் நிலைபெறும் கலைகளெல்லாம் – அவள்
இன்னரு ளால்இங்கே ஓங்கியவை!

பாணிகள் பற்பல தோன்றிடவே – அவள்
புதுவிதக் கற்பனை பலபடைத்தாள்;
வாணியின் திருப்புகழ் வாழ்த்திடுவோம் – அவள்
வாஞ்சையில் நம்கலை வாழியவே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *