சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய
நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும்
ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே
ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில்
நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும்
என்றே தோன்றுகிறது .

பழகும்போது பரிவும் பண்பும் மிக்க மென்மையான மனிதரான நாஞ்சில்
அறம்சாராதவற்றைச்சாடும்போது வேகம் கொள்ளும் விதம்
வியப்பளிக்கிறது. செவ்விசை,செவ்விலக்கியங்களின் தீராக்
காதலர் நாஞ்சில்.நல்ல இசையோ கவிதையோ கேட்டால் சூழல் மறந்து
கரைந்துபோவார்.அண்ணாச்சி நெல்லைகண்ணன் பழம்பாடல்களையும் தமிழின் செம்மாந்த கவிதைகளையும் நுட்பமாக எடுத்துரைக்கும் போதெல்லாம், ஒவ்வோர் ஈற்றடியிலும் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொள்வார் நாஞ்சில். நான்கூட ஒருமுறை விளையாட்டாகச் சொன்னேன், “சார்! நீங்க பேசாம மூக்குக் கண்ணாடியிலேயும் கார்க்கண்ணாடி மாதிரி ஒரு வைப்பர் போட்டுக் கொள்ளலாம்”என்று.

நெருங்கிய நண்பர்களின் கேலி கிண்டல்களை மிகவும் ரசித்துச் சிரிப்பவர்
நாஞ்சில்.அவரே மிகவும் கூர்மையான நகைச்சுவையாளர்.மற்றவர்கள் போல்
நடித்துக் காட்டுவதில் வல்லவர்.எல்லோரிடமும் கேட்க இவருக்கு ஏராளமான
கேள்விகள் உண்டு. எல்லாவற்றையும் அறிந்து கொள்வதில் சின்னஞ்சிறுவனின் ஆர்வமுண்டு. படிப்பு,பாட்டு,பயணம்,ஆகியவற்றின் தீராக்காதலர் நாஞ்சில்.அவர் ஏறக்குறைய எல்லா நாட்களும் சொல்லும் சொற்கள்:
“எவ்வளவு அன்பான மனுஷங்க”
“எனக்குக் கண் நெறஞ்சுடுச்சு”

உறவுகளை நண்பர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கும் நாஞ்சில்நாடன், சாகித்ய அகாதமிக்குத் தேர்வானபோது எல்லோர் மனதிலும் பெருகிய மகிழ்ச்சியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரைகிடைக்காமல் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

காலந்தாழ்ந்து தரப்பட்ட விருது என்பது எவ்வளவு உண்மையோ
காலமறிந்து தரப்பட்ட விருது என்பதும் அவ்வளவு உண்மை. நவீன
எழுத்தின் பலத்தை நேர்பட உணரும் வாய்ப்பை தன் ஒவ்வொரு படைப்பிலும் தந்து வரும் நாஞ்சில்நாடனின் குரலை எல்லோரும்
கவனித்துக் கேட்கும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இன்னும் பல விருதுகள்,இன்னும் பல வெற்றிகள் என்று,தன் உழைப்பின்
விளைச்சல் அறுவடையாகி வீடு தேடி வருவதை
அடிக்கடி பார்ப்பார் அவர்

Comments

  1. அருமையான கட்டுரை,
    மரபின் மைந்தனுக்கு பாராட்டுக்கள்
    அன்புடன்
    ராம்கி, தி ஐ பவுண்டேஷன், கோவை

  2. தகுதியானவர்களுக்கு விருது கிடைப்பது
    மகிழ்வான செய்தி தான்!அதை நீங்கள் சொல்லும் விதம் நேர்த்தியானது!!

  3. திரு நாஞ்சில் நாடனைப் பற்றிய உங்களது பதிவு மனதை நெகிழச் செய்கிறது.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *