” அந்தக் காலத்துல அந்தம்மா பேச்சைக் கேட்க நாங்கல்லாம் 12 மைல் சைக்கிளில போவோம்.தொ.மு.சி. ரகுநாதனும் அந்தம்மாவும் பேசினா மேடை கிடுகிடுக்கும்.பெரிய புரட்சிக்காரி” கவிஞர்புவியரசு என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருந்த போது ‘அந்தம்மா”வைக்கடைசியாகப் பார்க்க தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தேன்.

ஜீவா அவர்களால் மார்க்சீய மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு,ஆழ்ந்த தமிழறிஞராய் வளர்ந்து,வள்ளலார் நெறியில் வாழ்வை இணைத்து முதிர்ந்த தாய்மையின் கனிந்த வடிவமாய் வாழ்ந்து22/11/2012ல் காலமான முனைவர் சு.சிவகாமசுந்தரி அவர்கள்தான் “அந்தம்மா”.

சின்னஞ்சிறு வயதிலேயே அனல்பறக்கும் பேச்சாளராய் அறிமுகமான சிவகாமசுந்தரியின் தந்தை திரு.பழனியப்பர், வள்ளலாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழிலக்கியம் பயின்ற சிவகாமசுந்தரிக்கும்
வேளாண் பொறியாளர் திரு. சுப்பிரமணியனுக்கும் பழநி முருகன் கோவிலில் திருமணம் செய்துவைத்தவர் அருட்செல்வர்.நா.மகாலிங்கம். கோவையில் அமரர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்
அவர்களின் அவிநாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகஅருட்செல்வர் சேர்த்துவிட்டார்.அப்போதைய முதல்வர் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் விதித்த நிபந்தனை, “சிவகாமசுந்தரி கட்சிக்கூட்டங்களில் பேசக்கூடாது”என்பதுதான்.

ஜீவா மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்ற கம்பனையும் பாரதியும் தமிழிலக்கிய மேடைகளில் கனலென முழங்கி,அதன்வழியே தன் மனதில் நீறு பூத்த நெருப்பாயிருந்த சமத்துவக் கொள்கைகளைமக்கள் மத்தியில் கொண்டுசென்ற வண்ணம் இருந்தார் முனைவர் சு.சிவகாமசுந்தரி.

பணிக்காலத்தில் கல்வித்திட்டத்தில் வந்தவொரு மாற்றத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தைநிகழ்த்தி ஒருமாத காலம் சிறையிலிருந்தார் அவர்.போர்க்குணமும் புரட்சிக்கனலும் உள்ளே கனன்றுகொண்டிருந்தாலும் தாய்மை நிறைந்த அன்பைத் தருவதில் தனித்தன்மையுடன் திகழ்ந்தார்.

தஞ்சை பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணிபுரிந்து பணிஓய்வுக்குப் பிறகு தஞ்சையிலேயேகுடியேறிவிட்டார் அவர். பூர்வீகம் தஞ்சைதான் அவருக்கு.தந்தைவழிச் சீதனமாக வந்த வள்ளலார் நெறி ஈடுபாடும் அவருக்கு இயல்பாகவே கைவந்தது. திருவருட்பாவுக்கு இசையமைக்கக்கூடாதென்று கருதிய வள்ளலார் இசையோடு பாடவென்றுதனியாகக் கீர்த்தனைகளை உருவாக்கித் தந்துள்ளார்.அவற்றை மட்டும் இசைப்பதற்கென்று வடலூரில் வள்ளலார்இசைவிழாவை விடாது நடத்திவந்தார் முனைவர் சிவகாமசுந்தரி .

முதுமையாலும் கணவரின் உடல்நலக்குறைவாலும் நீண்டகாலம் தமிழிலக்கிய மேடைகளைத்தவிர்த்துவந்த சிவகமசுந்தரி அவர்களை உரிமையோடும் அன்போடும் கோவையில் நடக்கும் “எப்போ
வருவாரோ” தொடர் நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் பற்றிப் பேச அழைத்தேன்.
“எல்லாம் செயல்கூடும்” என்ற தலைப்பில் பேசிய அம்மையார், ‘வள்ளல்பெருமான் வரிகளைவைத்து என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்தால் ஒரு நிறைவு எனக்குத் தோன்றுகிறது.நான் “ஞானசபை நாதனுக்கு நல்ல பிள்ளை” என்றார். பணிபுரிந்த காலத்தில் சக ஆசிரியைகள் மத்தியிலும் மாணவிகள் மத்தியிலும் அவருக்கிருந்த செல்வாக்கு அத்தனை ஆண்டுகளுக்குப்பிறகும் அப்படியே இருந்ததை அன்று பார்த்தேன்.

விழா நடைபெற்ற கோவை ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கத்தின் வாயிலில் அம்மையார் வந்திறங்கியதும்நடுத்தர வயதைக் கடந்திருந்த முன்னாள் மாணவிகள் ஓடிச்சென்று அவரைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கதறல் கதறியது நெகிழ்வான உணர்ச்சிச் சித்திரம்.

அடிக்கடி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போதும் தஞ்சையில் அவர்களை நேரில்சந்திக்கும்போதும்,அவர் தவறாமல் சொல்கிற வாக்கியம்,”இன்னும் நிறைய வேலை பண்ணுங்கப்பா”
என்பதுதான்.

தஞ்சையின் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய அவரின் மாப்பிள்ளை
மறைந்த போதும் கணவர் மறைந்த போதும் நிலைகுலைந்த அவரைத்
தூக்கி நிறுத்தியது அவர்கற்ற தமிழும் வள்ளலார் நெறியில் அவருக்கிருந்த ஊற்றமும்தான்.

நான்கு மாதங்களுக்கு முன் “மூன்றாம் உலகப்போர்” அறிமுக விழாவிற்கு தஞ்சை சென்ற போது அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தகவலை அவரது புதல்விமருத்துவர் அமுதச் செல்வி மூலம் அறிந்தேன். “உங்களையும் ஸ்டாலின் குணசேகரனையும் பற்றி
அம்மா அடிக்கடி பேசிக்கிட்டிருப்பாங்க.முடிஞ்சா வந்து பார்த்துட்டு போயிடுங்க” என்றார் அவர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அம்மையாரிடம் சில மணித்துளிகள் பேச முடிந்தது.”ரயிலுக்கு நேரமாயிடும்.புறப்படுங்க..நல்லா பண்ணிகிட்டிருக்கீங்க. இன்னும் நிறைய வேலை பண்ணுங்க”என்றார். அதன்பிறகு உடல்நிலை சற்றே சீராகி இல்லம் திரும்பினார்.

ஆகஸ்ட் 12ல், என் ஐம்பதாவது நூல் வெளியீட்டுவிழாவின் போது காலையில் அழைத்து வாழ்த்தின அம்மையார் அப்போதும் சொன்னது
“இன்னும் நிறைய வேலை பண்ணுங்கப்பா”.
23/11/2012 முற்பகலில், ஐஸ் பெட்டிக்குள் துயில்நிலையில் இருப்பதுபோல் அமைதியாகப் படுத்திருந்தஅம்மையாரை வணங்கி நிற்கிற போதும் செவிகளில் ஒலித்தது அவருடைய குரல்,”இன்னும் நிறையவேலை பண்ணுங்கப்பா” .அருட்பெருஞ்ஜோதி அகவலை அருட்பா அன்பர்கள்
பாராயணம் செய்து கொண்டேயிருக்க,தமிழ் மேடைகளில் வீறுகொண்டு
முழங்கி ஓய்ந்த அந்த நெடுந்திருவுருவைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

எழுபத்தாறாம் அகவைவரை வாழ்ந்த அந்தத் தேர்ந்த தமிழறிஞரை,தாய்மையின் பெருஞ்சுடரை வணங்குகிறேன்.அவரை
இழந்து வாடும் அவர்தம் புதல்விகள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.alaikal.com/news/?p=40845
அம்மையாரின் கட்டுரை ஒன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *