(22 ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் வாசித்த கவிதை…
பாவேந்தர் நினைவாக இன்று..)

சதைக்கவிதை உயிரின்றிப் பிறந்த காலம்
சகதியிலே மையெடுத்துப் புனைந்த காலம்
எதைக்கவிதை என்போமோ எனுமேக்கத்தில்
எந்தமிழர் உயிர்வாடி இளைத்த காலம்
புதுத்தமிழை நவகவிதை ஆக்கித் தந்த
பாரதியோ மூத்தகதிர்-அவன்சுவட்டில்
உதித்தெழுந்த இளங்கதிராய் ஒளிபரப்பி
உலவியவன் புதுவைநகர் கவிதைவேந்தன்

தேயவுடல் மீதமின்றித் தினமுழைத்தும்
தகுந்தபலன் அடையாத மனித மந்தை
ஓய்ந்திருந்த புழுக்களென்ற நிலைமை மாறி
ஓங்கார வேங்கைகளாய் எழுந்த விந்தை
பாவேந்தன் செய்ததுதாநீனும் என்ன?
பாரதிதாசன் கவிதை வீரச் சந்தை
ஆயிரமாய்த் தமிழ்ச்சொற்கள் இருந்தபோதும்
ஆண்பிள்ளைச் சொற்களுக்கு அவன்தான் தந்தை

எழிலாக மின்னுகிற நிலவும்-அவன்
எழுத்துக்குப் பொட்டாகி நிலவும்
மழைவானை வெட்டுகிற ஒளியும்-அவன்
மணிவிழியின் சுடர்கண்டு ஒளியும்
தழலனைய பாவேந்தன் பெயரும்-சொல்லத்
தயக்கங்கள் மனம்விட்டுப் பெயரும்
குழைவான சந்தத்தின் இசையும்-அவன்
கூட்டுகிற கவிதைக்கே  இசையும்

பாவேந்தன் என்பவன்யார் கவியா?-இல்லை
பலகோடி உணர்வுகளின் புதல்வன்
பாரதிர வைத்ததமிழ்ப் புயலாய்-அந்தப்
புதுவையிலே சூல்கொண்ட புலவன்
பாரதியைத் துதிக்கின்ற விரதன் -அவன்
பாதையிலே வந்தமுதல் முரடன்
யாருக்கும் அஞ்சாத திறனால்-இங்கு
இமயமென நிமிர்ந்திருந்த கவிஞன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *