கூடிக் கலையும் நாடகக் கூடம்

போடப்போவது கௌரவ வேடம்

மர்ம வலையின் மனிதன் விழுவான்

கர்ணன் மனதைக் கண்ணன் அறிவான்

என்றோ தின்ற உப்புக்காக

இங்கே இன்று நட்புக்காக

அரசல் புரசலாய் ஆயிரம் சலனம்

அரச சபையில் விகர்ணன் மௌனம்

சபதக் கனலில் திரௌபதி மூச்சு
தருமன் சபையிலோ சமரசப் பேச்சு
பகடையாட்டம் பழகிப் பழகி
சகுனியாட்டமே சிரிக்கிறான் தருமன்

வில்லை முறித்தது விதுரனின் வேகம்

சொல்லை மறைத்தது குந்தியின் சோகம்

கட்டை விரலைக் கொடுத்தவன் வாழ்க

சுட்டு விரல்கள் “அவர்”முன் நீள்க

இரவைப் பகலாய் எண்ணும் கூட்டம்
அரவான் பிணம்மேல் ஆடும் ஆட்டம்
தேரை நடத்தத் தெரிந்தவனுக்கு
போரை நிறுத்தப் பிரியம் இல்லையே
அர்ச்சுனன் கேட்கவே அவனது கீதை
சகாதேவனுக்கோ மௌனமே போதை
வேண்டியவர் மேல் எய்த வலிகள்
காண்டீபத்தில் கண்ணீர்த் துளிகள்

வியூகம் அமைந்தது வீரனை விழுங்க

விவேகம் இருந்தும் வெளிவரத் தயங்க

அர்சுனன் துரோணன் அடிதடி போட

அபிமன்யு வீணாய் களத்தில் சாக

துரோணன் துரோகம் திசைகளை எட்டும்

அசுவத்தாமனுக்கா சிரஞ்சீவி பட்டம்?

களம்கண்ட பாண்டவர் கொற்றவர் ஆனார்

இளம்பஞ்ச பாண்டவர் இரையாய்ப் போனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *