சந்தைச் சூழலில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதற்குரிய வாசல்களைத் திறந்து கொள்ளும் வித்தையைக் கற்றுக்கொள்ளுங்கள். பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கூடப் போக வேண்டாம். முதல் பூக்கடை எப்படி உருவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். முதலில் உதிரியாக பூக்களை விற்கத் தொடங்கியிருப்பார்கள். பிறகு, அவற்றைத் தலையில் சூடிக்கொள்ளவோ, கடவுளுக்குச் சூட்டவோ வசதியாக சரமாகத் தொடுத்திருப்பார்கள். அதையே பெரிய அளவில் கற்பனை செய்து மாலைகளாகக் கட்டியிருப்பார்கள். பூ என்றால் மங்கலச் சின்னம் மலர் மாலைகள் மட்டுமே தயார் செய்வோம் என்று சொல்லாமல் மலர் வளையங்களையும் விற்பனை செய்யத் தொடங்குகிறார்கள்.

புத்தம் புதிய வழக்கமான பூங்கொத்துவரை இன்று பூக்கடைகளில் கிடைக்கின்றன. பூ விற்பதிலேயே இத்தனை புதுமைகளுக்கும் மாற்றங்களுக்கும் இடம் தர வேண்டியிருக்கிறது.

சில விஷயங்களில் வளைந்து கொடுங்கள். எல்லாவற்றிலும் பிடித்த பிடியில் பிடிவாதமாய் இருக்கும் விதமாய் இன்றைய சந்தைகள் இருப்பதில்லை. பேரம் பேசுவதில் தொடங்கி குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே உங்கள் தயாரிப்பைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் வரை எத்தனையோ அம்சங்கள் உங்கள் தொழில் செய்யும் முறையில் மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கக்கூடும். “கறார் விலை” கடைகளின் காலம் இனியும் தொடர்வது அபூர்வமாக சில இடங்களில் நிகழலாம். ஒரு நிறுவனத்தின் விதிமுறைகள் அனைத்துமே திருத்த முடியாது. சட்டங்கள் போல் இறுகி இருக்க இயலாது என்கிற சூழ்நிலை உருவாகி விட்டது.

வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுங்கள். உங்கள் நிறுவனத்தில் எந்த நிலையில் இருக்கும் அலுவலராலும் வாடிக்கையாளர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். இன்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அளவில் உச்சம் நோக்கி மனநிறைவு என்கிற இலக்கைத் தொடுகிற போதெல்லாம் நீங்கள் எதிர்பார்க்காத திசைகளிலிருந்து புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள்.

தயாரிப்புகளின் தரத்திலும் உள்ளடகத்திலும் நீங்கள் அடிக்கடி கொண்டுவருகிற முன்னேற்றம் – அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ்களைப் பெற நீங்கள் மேற்கொள்கிற முயற்சி – உங்கள் துறையிலேயே நீங்கள் புதிதுபுதிதாய் அறிமுகம் செய்யும் தயாரிப்புகள் – வாடிக்கையாளர் வசதிக்கும் வியப்புக்கும் வாய்ப்பாக நீங்கள் செய்கிற விரிவாக்கம் – அவ்வப்போது அளிக்கிற சலுகைகள், இவையெல்லாம் வாடிக்கையாளர்களுக்காக நீங்கள் புதுமைகள் நிகழ்த்தத் தயாராயிருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தமிழகக் காவல்துறையில், புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், அவர்களைத் தொடர்பு கொள்ளும் முறைகள் எளிமைப்படுத்தப்பட்டதும், முன்மாதிரி காவல்நிலையங்கள் உருவாக்கிவிட்டதும் காவல்துறையில் புதுமைகளைப் புகுத்துவதற்கான முயற்சிகள்தான். அயல்நாடுகளில் கிராஃபிட்டி என்ற பெயரில் தயாரிக்கப்படும் குளிர்சாதனப்பெட்டிகளில் எழுத வசதியாய் ஒரு வெள்ளைப் பலகை பொருத்தப்பட்டது. சமையலறையில் ஞாபகக் குறிப்புகளில் தொடங்கி – “உள்ளே பால் இருக்கிறது. சூடு செய்து காப்பி போட்டுக் கொள்ளுங்கள்” என்று கணவனுக்குக் குறிப்பு எழுதுவதுவரை எத்தனையோ விஷயங்களுக்கு இந்தப் புதுமையான அணுகுமுறை பயன்பட்டது.

புதுமைக்கான ஆர்வத்தின் நெருப்பு அணைய விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் தொழிலில் எல்லா வெளிச்சங்களுக்கும் அதுவே வழிவகுக்கும்.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *