கஸ்தூரிமான் படத்தில் பாதிரியார் வேடத்தில் நடித்த போது இருசக்கர வாகனம் ஓட்டுவதுபோல் ஒரு காட்சி. மலையாளப்படத்தில் பாதிரியார் ஓட்டியது ஸ்கூட்டரா மோட்டார்பைக்கா என்று தெரியவில்லை.இந்த சந்தேகத்தை ஜெயமோகனிடம் கேட்டபோது எப்போதும் போலவே “அப்படியா?”என்றார். பிறகு இணை துணை இயக்குநர்களிடம் கேட்டபோது “அது டி வி எஸ் 50 சாரே” என்றார்கள். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சைக்கிளுக்குப் பிறகு ஓரளவு ஓட்டிப் பழகியிருந்த வாகனம் அதுதான். ஒருவேளை ஸ்கூட்டர்,மோட்டார்பைக் என்றிருந்தால் டூப்
 போட வேண்டி வந்திருக்கும்.

என் பங்குதாரர் வேணுகோபாலிடம் ஒரு டி வி எஸ் 50 இருந்தது. படப்பிடிப்புக்கு முதல்நாள் அதில் ஒத்திகை பார்க்க கோவையின் ரேஸ்கோர்ஸ்  பகுதிக்குக் கிளம்பினேன்.என் காருக்கு அப்போதிருந்த ஓட்டுநரின் பெயர் மணி.டி வி எஸ் 50 ஓட்டிப் பழக காரில் போன  ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும். எனக்குக் காரும் ஓட்டத்தெரியாது என்ற உள்ளுறை இறைச்சிப் பொருளை இந்நேரம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்.

அதென்னவோ சின்ன வயதிலிருந்தே வாகனங்கள் ஓட்டப் பழகவில்லை.
ஒன்பதாம் வகுப்பு(முதலாண்டு) படிக்கும்போது  ஒரு சைக்கிள் வாங்கினேன்.
கணித ஆசிரியர் முகம்மது அலி அவர்கள் வீட்டில்தான் எப்போதும்
இருப்பேன். அவரின் மூத்த மகன் பெரோஸ்பாபு எனக்கு அன்றும் இன்றும் உயிர்த்தோழன். நான் சைக்கிள் வாங்கப்போகும் விஷயத்தை முகம்மது அலி மாஸ்டரிடம் சொன்னதும் அவர் தந்த அறிவுரை, “முதல்ல ஒழுங்கா நடந்து பழகு”. அவரைச்சொல்லித் தப்பில்லை. அதற்கு  முதல்வாரம்தான்  எங்கேயோ பராக்கு பார்த்துக்  கொண்டு  நடந்து  தந்திக்  கம்பத்தில் மோதி அடிபட்டிருந்தது. ஐம்புலன்களும் அலைபாய்வதைப் பற்றி அருணகிரிநாதர் “ஐவர் பராக்கு அறல் வேண்டும்”என்று கந்தரலங்காரத்தில் எழுதியிருந்ததை அந்த நாட்களில்தான் படித்திருந்தேன்.ஆனாலும் எனக்கு
நிரந்தரமான ராசிபலன் வாகனப்ராப்தி.

நண்பர்களுடைய இருசக்கர வாகனங்களின் பின்னிருக்கைகள் எனக்காகவே படைக்கப்பட்டிருந்தன. கார்வாங்கும் முன்பே என் மனைவி காரோட்டிப் பழகியிருந்தார். அதுமட்டுமின்றி வீட்டருகே இருக்கும் ஆட்டோக்காரர்கள் கல்லூரிப் பருவத்திலிருந்தே பழக்கம். எனவே வாகனங்கள் ஓட்டிப் பழக வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. வீட்டுக்குப்  பக்கத்தில்  ஒரு  பெட்டிக்கடை  இருந்தது. அதன் உரிமையாளர் ஊனமுற்றவர். அவருடைய  மனைவி அவருடன் இருந்து கடையை கவனித்துக் கொண்டிருந்தார் .சில நாட்களுக்குப்பின் அந்தப் பெண்மணி ஆட்டோ ஓட்டுநரானார். கோவையின்  முதல் ஆட்டோ பெண் ஓட்டுநர் அவர் என்று நினைவு. ஒரு விபத்தில் அவர் இறந்தபோது ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து தகவல் சொல்லி அனுப்பினார்கள். அந்த அளவுக்கு அவர்கள் பழக்கம். “பத்மா லே அவுட்  கடைசி  பங்களா”  என்று எங்கள் வீட்டுக்கிருந்த அவர்களின் அடையாளச்சொல் மாறி, “புலவர் வீடு” என்று சொல்லத் தொடங்கினார்கள்.ஆட்டோ ஓட்டுநர்களிடம் புலவர் பட்டம் பெற்ற போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த ஸ்டாண்டில் ஒரு பெரியவர்.சொல்லிக் கொள்ளும்படியான உயரம். ஆனாலும் சற்றே கூன் விழுந்திருக்கும். நெற்றியில் ஒற்றை நாமம். அவரை முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பேன். அதற்கு இரண்டு காரணங்கள். ஆட்டோ ஸ்டாண்ட் அருகே போனால், புருவத்தை உயர்த்தி என்ன? என்பதுபோல் தலையை மேலும் கீழும் அசைப்பார்.”எங்கே போக வேண்டும் ” என்று கேட்பதுதான் அவருடைய நோக்கம். ஆனால் மாணவனை மிரட்டும் ஹெட்மாஸ்டரின் முகபாவம் அவரிடம் இருக்கும். இரண்டாவது காரணம், அவர் நிகழ்த்திய மாபெரும் மரபு மீறல். அதாவது,ஆட்டோக்களை பயணிகள் கைதட்டி அழைப்பதுமரபு. ” கண்ணடிச்சா காதல்வரும் சொல்றாங்க! நீங்க கைதட்டினா ஆட்டோ வரும் சொல்றேங்க!”என்பது பாட்சாவின் ஆட்டோ சாஸ்திரம். ஆனால் இவர் அப்படியில்லை.

ரயில்நிலையம் அருகிலோ டவுன் ஹாலிலோ கீதா ஹால் ரோட்டிலோ நான் தட்டுப்பட்டால்,”ஹலோ ” என்று கைதட்டி என்னைக் கூப்பிடுவதுடன்  வரச்சொல்லி கைச்சாடை வேறு காட்டுவார்.பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒருமுறை பொங்கியெழுந்தேன். “இங்கே பாருங்க! ஆட்டோ வேணும்னா நான் கூப்பிடறேன்.பார்க்கற பக்கமெல்லாம் கைதட்டிக் கூப்பிடற வேலையெல்லாம் வேணாம்”என்று சற்றுக் கடுமையாக சொன்னேன். “சரி சரிங்க!” என்றார். என்னதான்  நான் நல்ல பேச்சாளன் என்றாலும் அதற்காக பார்க்குமிடங்களில் எல்லாமா கைதட்டுவது? அதற்குப்பின் ஒருமுறை வழக்கத்துக்கு மாறான விநயத்துடன் அணுகினார். “பையன் ஸ்கூல் படிப்போட நின்னுட்டான்.ஏதாவது கடையிலேயோ ஹோட்டலிலேயோ கணக்கெழுதற மாதிரி வேலை வாங்கிக் கொடுத்தா நல்லாருக்கும்”. இந்த இடத்தில் நானொரு தவறு செய்தேன். அவர் மகன் பற்றிய விபரங்களை அதீத ஆர்வத்துடன் சேகரித்தேன். உடனே அவருக்குள்ளிருந்த ஹெட்மாஸ்டர் விழித்தெழுந்தார். “எங்கே! சுறுசுறுப்பா முயற்சி  பண்ணி ஒரு நாலு நாளில சொல்லுங்க பார்க்கலாம்!” என்று கெடு விதித்தார். அதன்பிறகு அவரைப் பார்த்தாலே  பெயிலான  மாணவன்  போல்  பதுங்கிப் பதுங்கி நடக்கத் தொடங்கினேன். ஒரு தடவை, நடுப்பகலில் அவர் மகன்வயது கூட இல்லாத சில ஆட்டோ டிரைவர்கள்முழு போதையில் அவரைக் கடுமையாகத் தாக்கினர்.
லேசான ரத்தக் காயமும் கிழிந்த சட்டையுமாய் வெகுவேகமாக ஆட்டோவைக்
கிளப்பிக் கொண்டு சென்றவர், தன் சார்பாக ஆட்களை அழைத்து வரும் முன்னர் போதையிலிருந்த ஓட்டுநர்கள் வேறுதிசையில் தப்பினர். இவர் தன் ஆதரவாளர்களுடன் வந்து சேர்ந்து கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இவரை அடித்தவர்களின் ஆட்டோ கவிழ்ந்து கிடப்பதாக செய்தி வந்தது.அவர்களைக்
கவிழ்த்தது அவர்களுடைய போதைதான் என்றாலும் தன் சாபத்திற்குக்
கிடைத்த கைமேல் பலன் என்று அவர் நம்பினார்.
இப்போது அவர் வயது மிக நிச்சயமாய் எழுபத்தைந்துக்கு மேலிருக்கும்.
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி முடிந்து இன்று விடியற்காலைதான் வீடு வந்தேன். மனைவியும் மகளும் காலையிலேயே  காரை எடுத்துக் கொண்டுபள்ளிக்குச் சென்றிருந்தனர். எனவே முற்பகலில்  அலுவலகம் புறப்பட்டேன் . பிரதான சாலைக்குப் போய் ஆட்டோ  பிடிப்பது  முதல் தீர்மானம். (நமக்கு ஆட்டோ பஸ் ரயில் விமானம் எல்லாம்  பிடித்துதான்  பழக்கம்  .சுஜாதாஎழுத்துக்களில் ஒருவர்,”நீங்க ஆட்டோ  பண்ணின்டு  காத்தாலே வந்துடுங்கோ”என்பார்.) ஆட்டோக்காரரிடம் பேரம் பேசாமல் பயணம் செய்யவேண்டும் என்பது அடுத்த தீர்மானம்.பெருந்தன்மை எல்லாம் இல்லை.கண்விழித்த களைப்பு.சில வருடங்களாகவே ஆட்டோவில் போகும் அவசியமும் குறைந்துவிட்டது.புதிய தலைமுறை ஆட்டோ ஓட்டுநர்கள் ரஜினிகாந்த் பெயரால் ஸ்டாண்ட் அமைத்திருக்கிறார்கள்.

அங்கே பழைய ஆட்களும் உண்டு. ஆட்டோ ஸ்டாண்டில் ஒரெயொரு வண்டி. அட!ஹெட்மாஸ்டர்!! “சித்தாபுதூர் போங்க!”என்றபடி ஏறி உட்கார்ந்தேன். வண்டி  கிளம்பி சில நிமிஷங்களிலேயே செய்தது தவறென்று புரிந்து விட்டது.வண்டிக்கு அவரைவிட வயதாகியிருந்தது.நகரத் தொடங்கியதுமே கண்ணுக்குத் தெரியாத குண்டர்கள் நால்வர் கைகால்களைப் பிடித்து “பிலுபிலு”வென்று உலுக்குவது போலிருந்தது. சாலையிலிருந்த  செம்மொழிக்குழிகளில் தடார் தடார் என்று இறங்கி ஏறியது. திருச்சி  சாலையிலிருந்து  சர்க்யூட் ஹவுஸ் வழியாக அவினாசி சாலை வந்து குப்புசாமி  நாயுடு மருத்துவமனை வழியாக சித்தாப்புதூர் செல்ல வேண்டும்.

மருத்துவமனை அருகே வேறு ஆட்டோவுக்கு மாறிக் கொள்ளலாம் என்ற
சிந்தனையில் இருந்த போது ஆட்டோவின் முகப்பில் பிய்ந்து கிடந்த
தகரம், “வேண்டாம்!வேண்டாம்!” என்பதுபோல் மறித்துக் கைகாட்டியது.

ஆனால் ஆட்டோவை அவரே வளைத்து நிறுத்தினார். “பெட்ரோல் போடோணும்” என்ற அறிவிப்புடன்.ஆட்டோவில் எனக்குப் புரியாத விஷயங்களில் ஒன்று, ஆட்டோவில் பெட்ரோலுடன் இன்னொரு திரவத்தையும் கலக்கிறார்களே, ஏன்”என்பதுதான். அந்தத் திரவத்தை ஊற்றிக் கொண்டிருந்த பையனிடம் கெஞ்சும் பாவனையில் “ஏழு ரூபாய்க்குப் போடுங்க” என்றார்.”பத்து ரூபாய்க்குக் குறைஞ்சு போட முடியாது பெரியவரே”என்றதும் அவர் முகம் வாடியது.”பத்து ரூபாயா? பத்து ரூபாயா?” என்று  கேட்டு  முடிக்கும்  முன்  பத்து ரூபாய் பறிக்கப்பட்டு விட்டது. முப்பது  ரூபாய்க்கு  பெட்ரோல்  போட்டுக்  கொண்ட அந்தப் பெரியவர் முகத்தில் இழந்த மூன்று ரூபாய்களை ஈடு கட்டுவது எப்படி என்கிற வருத்த ரேகைகள்.அப்போதுதான் கவனித்தேன்.

அவரது முகத்தில் சில வருடங்கள் முன் ஆட்சி செய்த சிடுசிடுப்பைக் காணோம். குளிரில் நடுங்கும் கோழிக்குஞ்சின் இயலாமையும் வாழ்க்கை

குறித்த அச்சமும் தெரிந்தன. சித்தாபுதூர் வந்தது.அறுபது முதல் எழுபது ரூபாய்கள் வரை வாங்குவார்கள். “எவ்வளவு ஆச்சுங்க” என்றேன். “கொடுப்பதைக் கொடுங்க”என்பது போல் கைகளை விரித்தார். நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து “வைச்சுக்குங்க” என்று சொல்லிவிட்டு  நகர்ந்தேன். திரும்பிப் பார்த்தபோது ரூபாயைப் பற்றிய கையை முன்னெற்றிக்கு உயர்த்தி சலாம் வைத்தார். திரும்பிப்பார்க்காமல் போயிருந்தால் கைதட்டிக் கூப்பிட்டிருப்பாரோ என்னவோ!!

Comments

  1. Miga yetharthamaga, neril pesiya unarvu irrunthathu nanbanae.

    Pulavar yenru unnai auto otunargal unnudaiya college daysla thaan sonnanga, anna yennakku 13 vasasuleye theringirucchu. thherkatharisi naan.

  2. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த (சுடச்சுட) தந்த பதிவு. அவரின் மீட்டரில்லா வாழ்வும், தங்கள் மீட்டருக்கு மேல் போட்டுத் தந்த தயாளமும் நின்றது மனசில். 'செம்மொழிக் குழிகளை' நினைத்து நினைத்து ரசித்தேன்.

  3. ஈசா னிகழ்சியில் நானும் கலந்துகொண்டேன். விரைவான , துய மொழிபெயர்ப்பு, அதுவும் நீண்ட பேச்சுக்களுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *