தமிழில் சில சொற்கள் மேம்போக்காகக் கையாளப்பட்டாலும் அடிப்படையில் அவற்றுக்கு வேறுபொருள் இருக்கும்.கன்னா பின்னா என்றொரு பிரயோகம் உண்டு. கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். பின்னா என்பது, அவனுக்குப் பின்னால்  பிறந்தவனாகிய  தருமனைக்  குறிக்கும்.. ஒருவரை  கர்ணமகராசா, தருமமகராசா என்றெல்லாம் புகழ்வதுதான் கன்னா பின்னா என்று புகழ்வது. (உடனே உங்களுக்கு ஏதேனும்  கவியரங்குகள்  நினைவுக்கு  வந்தால்  நான் பொறுப்பில்லை). கர்ணன் தன் அண்ணன் என்று தெரியாமலேயே தருமன் கடைசிவரை எதிர்க்கிறான். தருமன் தன் தம்பி என்று தெரிந்தும் கர்ணன் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கிறான்

தருமன் மகன் முதலாய அரிய காதல்
தம்பியரோடு அமர்மிலைந்தும் தறுகண் ஆண்மைச்
செருவில் எனது உயிரனைய தோழற்காக
செஞ்சோற்றுக் கடன் கழித்தேன்

என்கிறான் கர்ணன். அண்ணன் தம்பி உறவும் இப்படி கன்னா பின்னா என்றே இருந்திருக்கிறது. கம்பர் சோழனின் அவையில் இருந்த காலத்தில், மூடன் ஒருவனுக்கும் பாடிப் புகழ்பெறும் ஆசை வந்துவிட்டது. சொந்தமாக  எழுதத் தெரியாவிட்டால் என்ன? கேள்விப்படுவதை எழுதுவோம் என்று முடிவுகட்டிவிட்டான். இரு குழந்தைகள் மண்ணில் சோறு சமைத்து பொண்ணு மாப்பிள்ளை விளையாட்டில் இருந்தன. மண்ணை பையனுக்கு ஊட்டி மண்ணுண்ணி மாப்பிள்ளை மண்ணுண்ணி மாப்பிள்ளை என்று சொல்வது காதில் விழவும், அதுவே செய்யுளின் முதல்வரியானது. “மண்ணுண்ணி மாப்பிள்ளையே” என்று முதல் வரியை எழுதிக் கொண்டான்.

கொஞ்ச தூரம் போனதும் காகங்கள் கா கா என இரைச்சலிட்டன. “காவிறையே” என்று எழுதிக் கொண்டான். இன்னும் கொஞ்சம் போனதும் குயில்கள் கூவின. கூவிறையே என்று எழுதிக் கொண்டான். கோயிலை ஒட்டி வீதி திரும்பியது. இரண்டுபேர்  சண்டை  போட்டுக்  கொண்டிருந்தார்கள். “உங்கப்பன் கோயில் பெருச்சாளி” என்றொருவன் ஏசியது காதில் விழ, அதையும் எழுதிக் கொண்டான். எதிரே வந்த நண்பனிடம் கம்பீரமாகக்  காண்பித்து, சோழமன்னனைப் பற்றி தான் எழுதியது என்றும் சொல்லிக் கொண்டான்.

நண்பன் பார்த்துவிட்டு, “என்னடா ,பாட்டு கன்னா பின்னா வென்றிருக்கிறது! மன்னரைப் பற்றி எதுவுமே இல்லையே என்றதும், “கன்னா பின்னா மன்னா
தென்னா சோழங்கப் பெருமானே” என்று முடித்துக் கொண்டான்.
சோழனின் அவைக்குள் நுழைந்து பாடலை வாசித்தான்.

மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே கூவிறையே
உங்களப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமானே
அடக்க மாட்டாமல் அவையினர் சிரித்து உருண்டார்கள்.

கம்பர் நிதானமாக எழுந்தார். “அருமையான பாடல் இது. இதன் ஆழம்  புரியாமல்  நீங்கள் ஏளனம் செய்கிறீர்கள். மண்ணுண்ணி என்பது  திருமாலைக்  குறிக்கும். மா என்பது திருமகளைக் குறிக்கும். இவர்களின் பிள்ளை மன்மதன். நம் அரசரை இந்தப் புலவர், மன்மதனே என்கிறார். கா என்றால் வானுலகம். காவிறையே என்றால் வானுலகை ஆளும் இந்திரனே என்று பொருள். கூ என்றால் மண்ணுலகம். கூவிறையே என்றால் மண்ணுலகை ஆள்பவனே என்று பொருள். விண்ணும் மண்ணும் நம் அரசரின் ஆட்சியில் என்கிறார் புலவர். உங்களப்பன் கோ-வில்லில் பெரிசு-ஆளி  என்று பிரிக்க வேண்டும். நம் மன்னனின் தந்தையார் வில்லில் ஆளிபோல் வல்லவர். தந்தையின் தனித்தன்மையை சொல்வதன் மூலம் மகன் அவரினும் வலியவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் புலவர். கன்னா-கர்ணனே,பின்னா-தருமனே, மன்னா, மன்னவனே தென்னா சோழங்கப் பெருமானே-தென்னாட்டின் அங்கமாகிய சோழ மன்னனே என்று பொருள் சொன்னாராம் கம்பர்.

கன்னா பின்னா போலவே தமிழில்,முன்னே பின்னே என்றொரு சொற்றொடர்
அதிகமாகப் புழங்குகிறது.ஏதோ முன்னே பின்னே இருந்தாலும் ஏத்துக்குங்க
என்று பொன் கொடுப்பதில் இருந்து பெண் கொடுப்பது வரை எல்லாவற்றிலும்
சொல்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சத்திற்கு முன்னேயும் பின்னேயும் இருப்பது  கடவுள்தான். ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளே அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பதையே இந்த சொற்றொடர் உணர்த்துகிறது. கடவுளை எங்கெல்லாம் காணலாம் என்று புலவர் ஒருவர் பாடியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

மூல மறைகளுக்கெல்லாம் மூலமாய் இருப்பது கடவுள்.எனவே மறைகளை
ஆராய்ச்சி செய்பவர்கள் அதற்கு மூலமாக இருக்கக் கூடிய கடவுளைக் காணலாம். அது எல்லோருக்கும் சாத்தியமா என்று கேள்வி வருகிறதா? கவலையே படாதீர்கள். அதே கடவுள் குழலை இசைத்தபடி ஆடு மாடுகளை
மேய்த்துக் கொண்டிருப்பான். அவனை இப்படி அப்படி என்று  யாரும்  வரையறுத்து  விட  முடியாது. சிலர்  வேதங்களைப்  பீராய்ந்தும்  ஆராய்ந்தும் தேடுவார்கள். வரமாட்டான். நெடுநேரம் கிடைக்க மாட்டான். ஒரு யானை முதலையிடம் மாட்டிக்கொண்டு அலறும்.ஓடி வருவான். பிரபஞ்ச உருவாக்கத்துக்கு முன்னும் அவன்தான். பின்னும் அவன்தான்.

மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காலிக்குப் பின்னேயும் காணலாம்-மால்யானை
முந்தருளும் வேத முதலே எனவழைப்ப
வந்தருளும் செந்தாம ரை .

கடவுளை நம்பாதவர்கள், பக்தர்களைப் பார்த்து கடவுளை நீ முன்னே பின்னே
பார்த்திருக்கிறாயா என்று கேட்பதுண்டு. தங்களையும் அறியாமல் அவர்கள்
ஒரு தத்துவத்தையே சொல்கிறார்கள் . முன்னே பின்னே பாருங்கள். மூலத்தையே  பார்ப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *