நமது வீட்டின் முகவரி – 17

“மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாமல்

மெய்யாள வந்த பெருமான்” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை முருகக் கடவுளைப் பற்றி எழுதினார். இது முருகனுக்குப் பொருந்தும். முதலாளிக்கும் பொருந்துமா? இந்த சந்தேகம் அலுவலக நிர்வாகங்களில் அடிக்கடி எழக்கூடியதுதான்.

தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை நணபர்களாக்கிக் கொள்வதோ, மேலதிகாரிகளை நண்பர்களாக்கிக் கொள்வதோ அலுவலகச் சூழலுக்கு அவசியம்தானா? இது குறித்து மேலைநாடுகளில் பெரும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு.

1982இல், மார்ட்டிமர்ஃபீன்பர்க் என்கிற உளவியல் ஆய்வாளர் ஒருவரும், ஆரன்லிவின்ஸ்டன் என்கிற பேராசிரியர் ஒருவரும் இத்தகைய ஆய்வை அமெரிக்காவில் மேற்கொண்டனர். இராணுவத்தில் தளபதியாக இருந்து, பின்னர் உணவு விநியோக நிறுவனம் ஒன்றின் தலைவரான நிர்வாகி ஒருவர் இந்த ஆய்வின்போது சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தந்தார்.

“நான் இராணுவத் தளபதியாக இருந்தபோது, சிப்பாய்களுடன் நட்புக் கொண்டதில்லை. நிர்வாகி ஆன பின்பு அலுவலர்களிடம் நட்புக் கொண்டதில்லை. சிப்பாய்களுடன் நெருங்கிப் பழகினால் யுத்தத்தில் அவர்கள் கொல்லப்படும்போது வருத்தமிருக்கும். அலுவலர்களுடன் நெருங்கிப் பழகினால், அவர்களை வேலையைவிட்டு வெளியேற்றும்போது வருத்தமாக இருக்கும்” என்றார்.
அதே நேரம், மேலதிகாரிகள் அலுவலர்களிடமிருந்து முழுவதும் அந்நியப்பட்டிருந்தாலும் அலுவலகத்தில் ஒற்றுமை உணர்வு இருக்காது. இதற்குச் சரியான தீர்வை சிந்தித்துச் சொல்பவர் திருவள்ளுவர்தான். “அரசனோடு பழகும்போது நெருப்போடு பழகுவதுபோல் பழகுங்கள். குளிர் காயும்போது நெருங்கிப்போனாலும் சுட்டுவிடும். தள்ளிப்போனாலும் பயன்தராது” என்கிறார்.

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்”
என்பது குறள். அலுவலர்களிடம் அன்பாகப் பழகுவது ஆரோக்கியமான சூழலை அலுவலகத்தில் ஏற்படுத்தும். ஆனால், அலுவலர்களில் ஒரு சிலர் மட்டும் நிர்வாகியோடு நிபந்தனையில்லாத நட்புக் கொள்வது அவர்கள் இருவருக்கும் மட்டுமின்றி அலுவலகம் முழுமைக்கும் சிரமம் கொடுக்கும்.

மேலதிகாரிக்கும் அலுவலர்களில் சிலருக்கும் இடையே நட்புறவு நிலவினால் அங்கே கடைப்பிடிப்பதற்கு என்று சில அனுபவ மொழிகளை ஆய்வாளர்கள் தொகுத்துள்ளனர்.

1. தனிப்பட்ட நட்பு, அலுவலகத்தின் சக அலுவலர்கள் பற்றிய மதிப்பீட்டுக்கும் பயன்படக்கூடாது. நிர்வாகியுடன் நெருக்கமாக உள்ள அலுவலர், தனக்கு வேண்டாத சக பணியாளர்களைப் பற்றித் தவறான எண்ணங்களை ஏற்படுத்த முயலலாம்.

2. நண்பராயிருக்கும் அலுவலரின் கடமைகளை பணிகளை மதிப்பீடு செய்வதில் நிர்வாகிக்கு எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது. செயல்திறன் பொறுப்புகளை நிறைவேற்றும்விதம் போன்றவற்றை, நேர்மையாக மதிப்பீடு செய்யும் மனப்பான்மை இருவருக்குமே இருக்க வேண்டும்.

3. இந்த நேர்மை இருவரிடமும் இருக்கும் பட்சத்தில் இவர்கள் நட்பு குறித்த வீண் விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளும் தன்மை வேண்டும்.

4. நிர்வாகி அலுவல்பூர்வமாக எடுக்கும் நடவடிக்கை, அவர்கள் நட்பைப் பாதிக்காத அளவு பக்குவம் வேண்டும்.

அமெரிக்க அதிபராக ஜான்சன் இருந்தபோது, ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் தன் நண்பராக இருந்த வெள்ளை மாளிகை ஊழியர் ஒருவரை வெளியேற்றினார். அவரது பதவிக்காலம் முடிந்தபிறகு வெள்ளை மாளிகைக்கு வெளியே அவர்கள் நட்பு தொடர்ந்தது.

அலுவலகச் சூழலில் நட்பு என்பது, ஒருவருக்கு ஒருவர் பயன்படுவதற்கல்ல. ஒருவருக்கொருவர் அலுவலகக் கடமைகளை நிறைவேற்ற உதவியாய் இருக்க!!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *