3. வாழ்க்கைப் பயணத்திற்கு வரைபடம் உள்ளதா?

புதிய மாநகரம் ஒன்றில் போய் இறங்கியதுமே நாம் செய்கிற முதல் காரியம், அந்த ஊரின் வரைபடத்தை விரித்து வைத்துக்கொள்வதுதான். நாம் இருக்கும் இடத்திலிருந்து போக வேண்டிய இடம் வரையில், விரலை நகர்த்திப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்வோம். அப்போதே வந்த காரியம் பாதி முடிந்தது என்கிற நிம்மதி ஏற்படும்.

இதற்கே இப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு வரைபடம் முக்கியமில்லையா? வாழ்க்கை என்றதும் பிறப்பு முதல் இறப்புவரை எனறு புரிந்துகொண்டு தத்துவார்த்தமாக எண்ணத் தொடங்க வேண்டாம்.

சம்பவங்களால் நிரம்பியதுதான் சமூக வாழ்க்கை. அதற்குள் நுழையத் தொடங்கும்முன் வரைபடம் வைத்துக்கொள்வது நல்லது.

1. முதலில் எதைச் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். சாதனை என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாதாரணமான வேலையைக்கூட செம்மையாகச் செய்வது சாதனை என்றே கருதப்படுகிறது.

2. அந்தச் சாதனையை செய்து முடிப்பதில் என்னென்ன தடைகள் உள்ளன என்பதைப் பட்டியலிடுங்கள். உதாரணமாக, விடுமுறைக்காலத்தில் இரயில் டிக்கெட் பதிவுசெய்யும் சாதாரண வேலையாகக்கூட இருக்கலாம். நீண்ட வரிசை இருக்கும். சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் தரவேண்டும். சில்லறை சரியாகத் தராவிட்டால் அதற்கு வேறு தனியாகக் காத்திருக்க வேண்டும். என்றெல்லாம் மனதுக்குள் ஒரு பட்டியலைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

3. அந்தத் தடைகளை எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று திட்டமிடுங்கள். எந்தத் தடையும் உடைக்கக்கூடியதுதான் என்பதை முதலில் நம்ப வேண்டும். இரயில் நிலையத்தில் நீண்ட வரிசை இருக்குமென்றால் விடியற்காலையிலேயே போய் முடிந்த அளவு முன்னதாகக் கவுண்ட்டர் அருகில் நிற்பது ஒரு தீர்வு. அல்லது, நீண்ட வரிசையில் பொறுமையாக நிற்பதற்கேற்ப மற்ற வேலைகளைத் தள்ளிவைத்துக்கொள்ளலாம். எனவே தடைகளை உடைக்கத் தெரிந்துகொண்டாலே தெளிவு பிறக்கும்.

4. ரொம்பவும் தள்ளிப்போடாமல் செயல்படுத்துங்கள்.
ஒரு விஷயம் சற்று மலைப்பாகத் தென்படுமேயானால் அதனைத் தள்ளிப்போடலாம் என்று கருதுவதுதான் மனித இயல்பு. அதை முதலில் மாற்றுங்கள். கடினமானவற்றை முதலில் மேற்கொள்ளப் பாருங்கள். செய்து முடித்த பணியின் சுகத்துக்கு முன்னால் அதற்கான ஆயத்தங்களும் அவஸ்தைகளும் சாதாரணம்.

ஒரு வரைபடத்திற்கான ஆரம்பம், பயணப்பாதை, இலக்கு எல்லாம் இருப்பதுபோல, உங்கள் செயலுக்கான திட்டம் இதோ உருவாகிவிட்டது. எந்த வரைபடத்திலும், குறுக்குக்கோடுகள் உண்டு. வாழ்க்கையிலும் அப்படித்தான். குறுக்கிடும் மற்ற பாதைகளைப் பார்த்துக் குழம்பி விடாமல், உங்கள் பாதையை மட்டும் பார்த்துக்கொண்டு போனால்போதும். சென்றுசேர வேண்டிய இடத்தைத் தொட்டுவிடுவீர்கள்.

காலையில் பத்துமணி தொடங்கி இரவு ஏழு மணி வரையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் முன்கூட்டியே திட்டமிட முடியாது. பரவாயில்லை. ஆனால், அன்றைய நாளின் முக்கிய வேலைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்குள் தெளிவான திட்டங்கள் இருப்பது அவசியம்.
இப்படி வாழ்க்கையின் அடிப்படையான விஷயங்கள் குறித்து மனதுக்குள் வரைபடம் வரையத் தொடங்குங்கள். வேலைகள் விரைவாகவும் தெளிவாகவும் எளிதாகவும் நடப்பதை நீங்களே காண்பீர்கள்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *