4. இவர் நீங்களாகவும் இருக்கலாம்!

அவர் ஒரு பெரிய தொழிலதிபர். சர்வதேசப் புகழ்பெற்ற பிரமுகர். சுயமுன்னேற்றம் குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசியும் எழுதியும் வருபவர். விமானப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார். அப்படி ஒரு பயணத்தின்போது, விமானப் பணிப்பெண் அவரிடம் வந்தார். தலைமை விமானி, தன்னுடைய விருந்தினராக அந்தத் தொழிலதிபரை ‘காக்&பிட்’டிற்கு அழைப்பதாகக் கூறியதைக் கேட்டதும் தொழிலதிபருக்கு ஆச்சரியம்.

காக் – பிட்டிற்குள் நுழைந்த அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார் விமானி. “நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது உங்கள் பேச்சைக் கேட்டுள்ளேன். எழுத்துகளைப் படித்துள்ளேன். அந்த உத்வேகத்தில்தான் இந்த உயரத்திற்கு வந்துள்ளேன்” என்றார் அந்த விமானி.

சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, “உங்கள் எல்லாத் தொழில்களிலுமே வெற்றி பெறுகிறீர்களே. அதன் ரகசியம் என்ன?” என்று கேட்டார்.

தொழிலதிபர் சிரித்துக்கொண்டே, “ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் அதே வேலைகளை நானும் ஒழுங்காகச் செய்கிறேன். அதுதான் ரகசியம்” என்றார் தொழிலதிபர்.

விஷயம் புரியவில்லை விமானிக்கு. தொழிலதிபர் விளக்கம் சொன்னார். “தம்பி, நான் ஒவ்வொரு தொழிலை ஆரம்பிப்பதும் விமானம் இயக்குவது போலத்தான். நீங்கள் முதலில், விமானம் பறக்கும் நிலையில் இருக்கிறதா என்று பார்ப்பீர்கள். நானும் ஒரு தொழில் தொடங்கினால் அது ஆதாயம் தரக்கூடியதா என்று பார்ப்பேன். நீங்கள் விமானத்தில் வேண்டிய அளவு எரிபொருள் இருக்கிறதா என்று பார்ப்பீர்கள். நான் தொழிலுக்குப் போதிய முதலீடு இருக்கிறதா என்று பார்ப்பேன். பறக்கத் தொடங்கும்முன் சீதோஷ்ண நிலை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பீர்கள். தொழிலைத் தொடங்கும்முன் அதற்கேற்ற சூழ்நிலை சமூகத்தில் நிலவுகிறதா என்று நான் பார்ப்பேன்.

எந்தத் திசையில் பறப்பது, தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் எப்படித் தொடர்பு கொள்வது என்றெல்லாம் நிர்ணயிப்பீர்கள். நானும் என்னுடைய இலக்கையும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் முறையையும் நிர்ணயிப்பேன். திடீரென்று வெளியே காற்று வலுத்தாலோ, மழை – பனி பெய்தாலோ எச்சரிக்கையடைவீர்கள். விற்பனைச் சூழல் மாறுகிறபோது நானும் எச்சரிக்கையாகிக் கொள்வேன்.

ஆபத்தான சமயங்களில் தேவைக்கேற்ப முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது. அதேபோல தேவைக்கேற்ற சமயோசிதமான முடிவுகளை நானும் எடுப்பேன். உங்கள் விமானம் தரைத்தளத்தில் மெதுவாக ஓடத்தொடங்கி, சீரடைந்து, வானேறி, வேகமெடுக்கும். என் தொழிலும் பதற்றமில்லாமல் தொடங்கி, சற்றே வேகமாகி, மேல்நோக்கி உயரத் தொடங்கும். விமானத்தை இறக்கும்போது பதற்றம் கூடாது. ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் நிறைவு பெறச் செய்யும்போது, அதே நிதானம் எனக்கும் வேண்டும்.

அப்படிப்பார்த்தால் நானும் ஒருவகையில் விமானிதான்! இல்லையா?” என்றார் தொழிலதிபர்.
அது சரி! யார் அந்தத் தொழிலதிபர்? இதுவரையில் இது ஒரு கற்பனைப் பாத்திரம்தான். நாளை அது நிஜமாகலாம். அந்தத் தொழிலதிபர் நீங்களாகக்கூட இருக்கலாம்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *