நமது வீட்டின் முகவரி – 3

பத்தாம் வகுப்புக்கு உங்கள் குழந்தை வந்தாகி விட்டதா? இந்தக் கட்டுரையை உங்கள் குழந்தையே படிக்கட்டுமே!

இதுவரை விதம்விதமான பாடப் பிரிவுகள் பற்றிய விரிவான அறிமுகம் கிடைத்தாகி விட்டது. தனியாகப் படித்தோ, டியூசனும் சேர்த்துப் படித்தோ உங்கள் விருப்பப் பாடத்தில் நல்ல பயிற்சியும் பெற்றாகிவிட்டது.

இனிதான் உங்கள் வாழ்க்கையில் முதல் முக்கிய முடிவை எடுக்கப்போகிறீர்கள். டீன் ஏஜின் தொடக்கமிது. உங்கள் திறமை என்ன? உங்கள் கனவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரு காகிதத்தில் விடை எழுதிக் கொள்ளுங்கள்.

இப்போது மூன்றாவது கேள்வி. உங்கள் கனவுக்கும் உங்கள் திறமைக்கும் உள்ள இடைவெளி என்ன? இந்தக் கேள்விக்கு உள்ளம் திறந்து பதில் எழுதுங்கள். அதாவது, உங்கள் கனவை எட்டும் அளவு உங்கள் திறமை வளர்ந்திருக்கிறதா? இல்லையென்றால், அந்தத் திறமையை எப்படியெல்லாம் வளர்க்கலாம்? அதற்கு என்னென்ன தடைகள்? இவற்றுக்கெல்லாம் பதிலெழுதுங்கள்.

இப்போது கேள்விகள் – பதில்கள் எல்லாமே உங்கள் கைகளில்! பதில்களை கவனமாகப் பாருங்கள். உங்கள் திறமையின் முழுமைக்குத் தடை உங்களிடம் இருக்கிறதா? வெளிச்சூழலில் இருக்கிறதா?
குறை உங்களிடம் என்றால், அதை எப்படி களையப் போகிறீர்கள்? எந்தத் தேதிக்குள் உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்? என்பது போன்ற திட்டங்களையும் இலக்குகளையும் நீங்களே நிர்ணயம் செய்யுங்கள்.

உங்கள் புதிய தீர்மானங்களை அழகாக எழுதி உங்கள் ஒவ்வொரு விடியற்காலையிலும் கண்களில் படுமாறு ஒட்டிவைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் திறமைக்கான தடை வெளிச்சூழலில் இருக்கிறதா? அப்படியானால் உங்கள் எதிர்பார்ப்பு பற்றி உங்கள் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் கனவை நீங்கள் எட்டிப்பிடிக்க என்னவிதமான உதவிகளை அவர்கள் செய்ய முடியும் என்று அவர்களிடமே சொல்லுங்கள்.

இந்த வயதில், இலட்சியம் மனதில் பதிந்துவிட்டால் எதிர்காலம் மிக நிச்சயமாய் நன்றாக இருக்கும். ஆனால் இலட்சியம் மட்டும் போதாது. அதை நோக்கி உழைப்பதும் முக்கியம். உங்களுக்கு நீங்களே உறுதிமொழி தரும்போது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வீர்களா என்ன?
என்ன நேர்ந்தாலும் இலக்கை மட்டும் இழப்பதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.

சலனங்கள், கவனச் சிதறல்கள் போன்றவை, எல்லாத் திசைகளிலிருந்தும் உங்களை ஈர்க்கும். அசைந்து கொடுக்காதீர்கள். நட்புக்கு, பொழுதுபோக்குக்கு உரிய நேரம் ஒதுக்குங்கள். ஆனால் உங்கள் முக்கிய இலக்கிலிருந்து மாறிவிடாதீர்கள். நண்பர்களை எடை போடுங்கள். தவறான நட்புக்குத் தடை போடுங்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து, நீங்கள் விரும்பும் பிரிவில் பதினொன்றில் நுழைந்து, இன்னும் முனைப்போடும், கூடுதலான கவனக்குவிப்போடும் மதிப்புமிக்க மதிப்பெண் பட்டியலோடு பள்ளிப்படிப்பை நிறைவு செய்யுங்கள்.

கல்லூரிக் கனவுகள் காத்திருக்கின்றன உங்களுக்காக!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *